Wednesday, 13 July 2011

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பிரிவு தொடர்பில் கூட்டமைப்பு இரங்கல்!

Published on July 9, 2011-8:06 pm  No Comments
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தனது இரங்கல் செய்தியில் கா.சிவத்தம்பி அவர்கள் தனது சிந்தனையையும் படைப்புக்களையும் எமக்கு விட்டுவிட்டு பூதஉடலை இயற்கைக்கு அர்ப்பணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும்,
இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, கலை, கலாசார பண்பாட்டுப் பாரம்பரியங்களை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஆய்வு செய்த ஈழத்தின் மூத்த தமிழ்க் கல்விமான்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவரும் இலங்கையின் தமிழ் தேசிய இனமோதலின் பலபரிமாணங்களை மார்க்சிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்திவந்த முற்போக்குத் தமிழ்த் தேசியவாதியுமான மூதறிஞர் வாழ்நாள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் குறிப்பாக ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கும் ஒரு பாரிய இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த எமது தோழர் குணசேகரத்தின் ஊடாக எனக்குப் பேராசிரியரின் அறிமுகம் கிட்டியது. எனக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பு அரசியல்ரீதியானதாகவே இருந்தது. பேராசிரியர் ஒரு முற்போக்கு ஜனநாயகவாதியாக இருந்ததால் எமது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனான அவரது உறவு தோழமைரீதியான உறவாகவே இருந்தது. அந்தவகையில் அவரை ஒரு தோழனாகவே எனக்குத் தெரியும். எங்களது தொடர்புகளும் அவ்வாறே பேணப்பட்டன. அன்றிலிருந்து அவரது உயிர் பிரியும்வரை நான் அவருடன் பூகோள பிராந்திய அரசியல் நிலமைகள் குறித்துப் பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடி வந்துள்ளேன்.
பேராசிரியர் அவர்கள் பொதுவாக ஒரு இலக்கிய விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே அறியப்பட்டவராயினும் உண்மையில் தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை கற்கைகளிலும் தடம்பதித்தவராவார்.
இவ்வகையில் தமிழ் இலக்கியம், மதம், மானுடவியல், சமூகவியல், அரசியல், வரலாறு மற்றும் கவின் கலைகளில் பேராசிரியரின் புலமை அறிவுஜீவிகளை ஆகர்ஷிப்பதாகும்ளூ இவரது இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சனங்கள், பகுப்பாய்வுகள் சிந்தனையைத் தூண்டுவனவாகும். இத்தகைய பல்துறை விற்பன்னரும் உயிர்ப்பான கருத்தியலாளருமான அன்னாரின் புகழ் நாம் கூறி விளங்கவேண்டிய ஒன்றல்ல.
இலக்கியம், அரசியல், கலை கலாசார பண்பாட்டியல், சமூகவியல் மற்றும் கவின்கலை ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளிகள் தமது படைப்புகளுக்குப் பேராசிரியரின் வாழ்த்துரை, அணிந்துரை அல்லது மதிப்புரையை இணைத்துக்கொள்வதால் தங்களது ஆக்கங்கள் மதிப்புப்பெறும் எனக் கருதுவதும் அல்லது தமது படைப்புக்களில் அவரது வாழ்த்துரையை இணைத்துக்கொள்ள முடிந்தால் பெருமிதப்படும் நிலையுமே அவரது புகழுக்குச் சான்றாகும். இவர் ஒரு தனிமனிதனல்லள! அவரே ஒரு நிறுவனம் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிமிக்க அறிவுக்களஞ்சியம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

என்பது வள்ளுவம்.
இவ்வகையில் எழுபதுவரையான அவரது கட்டுரைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகளும் ஆயிரக்கணக்கான நூல்களுக்கு அவர் எழுதியுள்ள முகவுரைகளும் வாழ்த்துரைகளும் மதிப்புரைகளும் அவர் எம் சமுதாயத்திற்கு விட்டுச்சென்றுள்ள அறிவுப்பொக்கிஷங்களாகும். இவற்றினூடாக அவர் எம்முடன் வாழ்கிறார்! என்றும் வாழ்வார்! அறிஞனுக்கு அழிவில்லை!
அன்னாரின் பௌதிக உடலைப்பிரிந்து துயருரும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் நானும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் துயரத்தைப் பகிர்ந்துகொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் கே. பிரேமச்சந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
இணைச்செயலர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்
E-mailPrintPDF
பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.
 தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சமவீனங்களின் பாதிப்பால் தனது இளம்பிராயத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இதன் காரணமாக எதனையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அணுகும் விஞ்ஞானபூர்வ மனப்பாங்கைப் பெற்றிருந்தார். ஆய்வுகளைத் தட்டையாக அல்லாமல்  சமூகவியல், மொழியியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் என்று பல துறைகளையும் இணைத்துப் பல்துறைச் சங்கம ஆய்வாக மேற்கொண்டு வந்தார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அவரது ஆங்கிலப் புலமை காரணமாகப் பிறமொழிகளின் சிந்தனை வளர்ச்சிப் போக்குகளை உள்வாங்கித் தமிழுக்கு வளம் சேர்த்து வந்தார். தமிழியல் ஆய்வுக்கு இவர் திறந்துவிட்ட வாசல்கள் அதிகம். தமிழ்ச் சொற்களஞ்சியத்துக்கு இவர் பிரசவித்துத் தந்த கலைச் சொற்கள் பல்லாயிரம். இவையே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களை ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பால் கொண்டு சென்று உலக அரங்கில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடாக நிலைபெறச் செய்துள்ளது.
கால ஓட்டம் மாறுவதற்கு ஏற்பச் சமூக அரசியல் பார்வைகளும் மாறவேண்டும் என்பது மார்க்ஸியத்தின் அடிப்படை விதி. இந்த இயங்கியலுக்கு ஏற்ப, ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஈடுபாடு கொண்டிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இனப்பிரச்சினை கூர்மையடைந்த 80களில் தனது அரசியல் பார்வையை அகலித்துக் கொண்டார். இலங்கையின் வரலாற்றில் ஒரு பிரிகோடாக அமைந்துவிட்ட இக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறையின் பிரஜைகள் குழுத் தலைவராகவும் வடக்கு கிழக்கு பிரஜைகள் குழு ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணாத் துயரங்களை சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் உலக அரங்குக்குக் கொண்டு சென்று சேர்ப்பித்தார். அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவரக்ள் பணியாற்றியிருந்தார். வட – கிழக்கினுடைய மிகப்பிரதான அரச சார்பற்ற நிறுவனமான இதனூடாக விதவைகள், தபுதாரர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்பட்ட சகல தரப்பினர்களினதும் துயர் துடைக்க முன்னின்று உழைத்தார்.
இறுதி மூச்சுவரை தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையும் தேடலுமாக இருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச் சமூகம் பல்வேறு வறுமைகளையும், வெறுமைகளையும் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். தமிழும், தமிழ்ச் சமூகமும் பெரும் முதுசம் ஒன்றை இழந்து பரிதவிக்கும் இவ்வேளையில் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பேணுகை மையமும் தலைசாய்த்து பேராசானுக்குத் தனது இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Karthigesu Sivathamby (May 10, 1932- July 6, 2011)

Sivathampi 002

Sivathampi 001

Karthigesu Sivathamby (May 10, 1932- July 6, 2011)

Sivathampi 004