Thursday, 7 July 2011


பேராசிரியர் சிவத்தம்பி காலமானார்

தமிழ்கூறும் நல்லுலகின் இலக்கிய விமர்சகரும் திறனாய்வாளரும் சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.
யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி, சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தெஹிவளை வெண்டவற் பிளேஸில் உள்ள அன்னாரது இல்லத்தில் நேற்றிரவு 8.00 மணியளவில் காலமாகியுள்ளார்.
இவரது உடல் அன்னாரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பண்டிதரும் சைவப்புலவருமான த.பி. கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்த சிவத்தம்பி, ரூபாவதி நடராஜாவை திருமணம் செய்தார். மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான இவர், இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் நன்கு அறியப்பட்டவராகவும் விளங்கியவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்ற இவர் தனது இடை நிலைக் கல்வியை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலேயே ஆரமபத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர், மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
தொடர்ந்து, தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டுவரை பணிபுரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு, பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இலங்கையர் கோன் எழுதிய “விதானையார் வீட்டில்’ தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
ஆக்கங்கள்
பல்வேறு துறைகளிலும், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்கு புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின்கலை என பல்துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்ஷிய சிந்தனைப்போக்குடைய இவர் யாழ்ப்பாண சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இவர் பற்றிய படைப்புக்கள்
தமிழ் அரசின் திரு வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஈழத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில் கரவையூற்று எனும் தலைப்பில் யாழ்ப்பாணம், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவருடைய நூல்கள்
இலங்கைத் தமிழர் யார், எவர்? யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும், மதமும் கவிதையும் , தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு), பண்டைத் தமிழ்ச்சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி உள்ளிட்ட பல்வேறான நுல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது மரணச் செய்தியைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் முக்கியஸ்தர்கள் மற்றும் நம் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர் அன்னாரது இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மொழிந்தவற்றில் எமது இணையத்தில் வெளிவந்த செய்திகள் சில..
கலைஞரின் மாபெரும் சாதனை : வாழ்த்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி
கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு சாதாரண மாநாடல்ல. இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம் என உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி தமது வாழ்த்துரையில் மேலும் தெரிவித்ததாவது :
“உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் விதத்தில் பூரணத்துவம் வாய்ந்த நூலொன்றை வெளிக்கொண்டுவர காத்திரமான நடவடிக்கையை முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்மொழி இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்றது. இது உலகளாவிய மொழியாக வியாபித்துக் காணப்படுகிறது. இந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதியிடம் நான் முக்கியமானதொரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
வெளியே வாழ்கின்ற தமிழர்கள், தமிழ் மீது பற்றுக் கொண்ட தமிழரல்லாதோர் என அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில், தமிழின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு தமிழ்க் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கக் கூடிய பூரணத்துவம் பெற்ற நூலொன்றைக் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் இது மிகவும் முக்கியமானதாகும். எதிர்காலத்துக்கு மிக அவசியமானதுமாகும்.
தமிழ்மொழியை மேம்படுத்துவதற்கு நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. நம் முன்னே ஏராளமான பணிகள் காத்துக் கிடக்கின்றன.
உதாரணமாக ‘டொட்காம்’ என்ற வார்த்தைக்கு இன்னமும் தமிழில் சரியான வார்த்தை காணப்படவில்லை. அதனை நாம் உருவாக்க வேண்டும். இதுபோன்று இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து பூரணப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சங்கத்தமிழ் இலக்கியம், சமயச் சார்பற்ற இலக்கியம், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று போதித்து தமிழை மேலோங்கச் செய்தவர்கள் தமிழர்கள்.
கலைஞர் கருணாநிதி தமது ஆற்றலைப் பயன்படுத்தி மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துவிட்டார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒரு சாதாரண மாநாடாக எண்ணிப் பார்க்க முடியாது.
இது தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மிகப்பெரிய மாநாடாகவே நாம் காண்கின்றோம்.”
இவ்வாறு பேராசிரியர் சிவத்தம்பி தமது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களுக்குப் பேராசிரியர் சிவத்தம்பியின் வேண்டுகோள் – சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் காத்திரமான உரைகளுடன் முன்னகர்ந்து கொண்டிருந்ததுடன் அதன் அடுத்தகட்டமாக பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினார்.
புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அடையாளத்தை மீள்நினைவூட்டும் விதமாக அவருடைய உரை அமைந்திருந்தது. சில வார்த்தைப் பிரயோகங்கள் எமது தனித்துவத்தின் அவசியத்தை உணர்த்துவனவாக இருந்தன.
“உலகமயமாதல், புலச்சிதறல் (Diaspora) அடையாள நெருக்கடி (Identity Cricis) முதலியவற்றின் எழுபுலத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
மத்திய தர வகுப்பின் ஆக்கம் அல்லது எழுகுழாத்தினரது ஆக்கம் (Elite Formation) ஆகியவற்றில் எழுத்தாளர் என்ற துணைப்பண்பாட்டினரும் ஒன்றிணைகின்றனர் அல்லது உள்ளடக்கப்படுகின்றனர்” என அவர் ஆரம்பித்தமை சபையோரிடையே கைதட்டலை பெற்றுக்கொண்டது.
சபா.ஜெயராசாவின் உரையின் பின்னர் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழறிஞர், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் வாழ்த்துரை இடம்பெற்றது.
எழுத்தாளர்களினதும் மொழி வளர்ச்சியினதும் முக்கியத்துவமானது, ஓர் இனத்தை எவ்வாறு உலகளாவிய ரீதியில் அடையாளப்படுத்துகிறது என்பதை மிக எளிமையான நடையில் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் உரைகளில் வழமையாக புதிய தகவல்களை வெளியிடுவது வழமை. அதுபோல (Diaspora) என்ற ஆங்கிலச் சொல் தாவரங்களுக்கு உரியது என்றும் அது தாவரப்பரம்பலைக் குறிப்பது எனவும் தகவலை வழங்கி தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.
“Diaspora என்ற சொல் சிதறி வீசுகை அல்லது சிதறுகை எனப் பொருள் தரும். மலர்கள் சிறதறுதலை இது குறிக்கிறது. அந்தச் சொல்லை அடியொட்டித்தான் மக்கள் சிதறுகை எனப்பட்டது. இப்போது Sri Lankan Tamil Diaspora என்று சொல்கிறார்கள்.
தமிழ் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுவதற்கு புலம்பெயர் தமிழர்களும் காரணமாக அமைகிறார்கள். புதிய யுகத்துக்கு ஏற்ப தமிழ்மொழி ஆழப்படுத்தப்பட்டும் அகலப்படுத்தப்பட்டும் வருகிறது.
புலம்பெயர்ந்தோர் எப்போதுமே தாம் விட்டுச்சென்ற நாடு குறித்து தான் சிந்திப்பார்கள். அது இயல்பு. அதற்கு ஏற்ப எங்களுடைய பண்பாட்டியல்களை அவ்வந்த நாட்டு மொழிகளில் எழுத முன்வரவேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுடைய அனுபவங்களும் பட்டறிவும் வெவ்வேறுபட்டவையாக அமைந்துள்ளன. அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் எழுதுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக வேண்டும். அது எங்களுடைய ஆழமான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெளியுலகுக்குக் காட்டுவதாக இருக்கும்.
எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். சிருஷ்டி என்ற ஒன்று இருந்தால் தான் நடைமுறை என்பது இருக்கும். எழுத்தாளர்கள் சிருஷ்டிப்பவர்கள்.
அவர்கள் தங்களை பாரதி, கம்பன், புதுமைப்பித்தனின் வாரிசுகள் என நினைக்க வேண்டும்” எனத் தனது உரையை நிறைவுசெய்தார் பேராசிரியர் சிவத்தம்

No comments:

Post a Comment