பல்துறைப் புலமையாளனுக்கான ஓர் அஞ்சலிக் குறிப்பு
நேற்று இருந்த ஒருவர் இன்று இல்லை என்னும் பெருமை இந்த உலகுக்கு உண்டு என்கிறார் வள்ளுவர். இது ஒரு சுடலை ஞானம் அல்ல. நிலையாமை என்னும் வாழ்க்கை யதார்த்தத்தைக் கவித்துவத்தோடு அழுத்தி உரைக்கும் கூற்று. இது எவ்வளவு உண்மையாயினும், நம் உறவினர்கள், நண்பர்கள், நமக்கு மிக வேண்டியவர்கள் மரணிக்கும்போது உடனடியாக நம்மால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதுதான் யதார்த்தம் என்று நம்மால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து, துக்கத் திலிருந்து விடுபட நமக்கு அவகாசம் தேவைப்படுகிறது.
பேராசிரியர் சிவத்தம்பியின் மரணச் செய்தியை நண்பர் குமரன் தெரிவித்த போது ஒருகணம் நான் உறைந்து போனேன். அவர் சுகவீனமாய் இருக்கிறார் என்பது தெரியும், இன்னும் நீண்டகாலம் அவர் வாழமுடியாது என்பதும் தெரியும். எனினும் இவ்வளவு விரைவில், சடுதி யாக அவர் மறைந்துவிடுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது எண்பதாவது பிறந்த நாளை முன் னிட்டு அவரது ஊரவர்கள், அவரது பள்ளி தோழர்கள், கரவை விக்னேஸ்வராக் கல் லூரி பழைய மாணவர்கள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு விழா எடுத்தார்கள். 'கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ் அறுவடை' என்ற பெயரில் பேராசி ரியர் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசவேண்டும் என பேராசிரியர் பெரிதும் விரும்பினார். இரண்டு மாதங்களுக்கு முன் னரே தொலைபேசி யில் தொடர்புகொண்டு நீ கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது நட்புரிமையுடனான அவரது வேண்டுகோள்.
கூட்டத்துக்குச் சில நாட்களுக்கு முன் அவர் முதுகு வலி காரணமாக படுக்கையிலிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிர்த்தேன். "நீங்கள் சுகவீனமாய் இருக்கிறீர்களே கூட்டம் ஒத்திவைக்கப்படுமா" என்று கேட்டேன். "கூட்டம் நடக்கும், நீ கட்டாயம் வா" என்பதுதான் அவரது பதில். கூட்டத்துக்கு அவரால் வரமுடியாது என் பதை அறிந்து, கூட்டம் தொடங்கமுன் அவ ரது வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
கட்டிலைவிட்டு எழும்பி இருக்க முடியாது என்பதைத் தவிர அவர் வழக்கமான சிவத்தம்பியாகவே என்னுடன் பேசினார். அவரது குரல், நினைவாற்றல், சிந்தனைத் தெளிவு என்பன வழக்கம்போ லவே இருந்தன. அவரது முதுகுவலி தற் காலிகமானது, விரைவில் கட்டிலில் எழும்பி உட்கார்வார் என்ற எதிர்பார்ப்புடனேயே நான் கூட்டத்துக்குச் சென்றேன். அன்றை யக் கூட்டம் சிறப்பாகவே நடைபெற்றது.
சிவத்தம்பியால் அங்கு வரமுடியாது போயினும், அவரது குடும்பத்தினர் - மனைவியும் மூன்று பெண் மக்களும் - அங்கு சமூகம ளித்திருந்தனர். பேராசிரி யரின் முக்கியத்து வம் பற்றிய எனது கருத்தை சுருக்கமாக சுமார் இருபது நிமிடம் அளவு பேசியிருப் பேன். இரவே கண்டிக்குத் திரும்பவேண்டி இருந்ததால் கூட்டம் முடியமுன் நான் புறப் பட்டுவிட்டேன். அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.
தொலை பேசியில் பேச நினைத்தும் முடியவில்லை. ஆறாம் திகதி காலை வேறு ஒரு விடய மாக பேராசிரியர் கனகரத்தினம் என்னுடன் தொடர்புகொண்டபோது பேராசிரியர் சிவத்தம்பியுடன் பேசுமாறு நான் அவருக்குக் கூறினேன். அன்று பகலே தான் அவருடன் தோலைபேசியில் பேசி யதாக அவர் தெரிவி த்தார். ஆனால் அன்று இரவு எட்டரை மணிக்கு பேராசிரி யர் காலமானதாக குமரன் தெரிவித்தபோது அது பேரதிர்ச்சியா கவே இருந்தது.
கடந்த ஒரு வருடமாக மறைந்த பேரா சிரியர் நண்பர் சோ. கிருஷ்;ணராஜhவுக்கு ஒரு நினைவுமலர் வெளியிடும் முயற்சியில் பேராசிரியர் சிவத்தம்பியின் ஆலோசனையுடன் அவருடன் சேர்ந்து செயற்பட்டிரு க்கிறேன். கிருஷ்ணராஜhவின் மாணவன் இன்பமோகனும் எங்களுக்கு மிகவும் உதவி யாக இருந்தார்.
என்னையே அதன் பதிப்பா சிரியராக இருக்குமாறு பேராசிரியர் கேட்டுக் கொண்டார். இல்லை நாம் மூவரும்தான் பதிப்பாசி ரியர்கள் என்று நான் சொல்லி விட்டேன். "மெய்யியற் சிந்தனைகள்" என்ற அந்நினைவுமலரின் அச்சுவேலைகள் கடந்த வாரம்தான் முடிவடைந்தன. எதிர்வரும் 16ஆம் திகதி அதன் வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தோம்.
விழா ஏற்பாடுகளைக் குமரன் மேற்கொண்டிருந்தார். பேராசிரி யரின் திடீர் மறைவினாலும் வேறு சில காரணங்களாலும் அதை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணராஜhவு க்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஒன்றில் பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு குறிப் பிட்டிருக்கிறார்.
"நான் இல்லாதபொழுது யார்யாரெல்லாம் என்னைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேனோ, விரும்பி னேனோ அவர்கள் என்னை முந்திவிடுகிறார்கள், நான் தனிமைப்படுகிறேன்." இப் பொழுது அவரது தனிமை முடிந்துவிட்டது. அவரைச் சார்ந்தவர்கள் தனிமைப்பட்டுவிட் டார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி 1932 மே மாதம் 10ஆம் திகதி கரவெட்டியில் பிறந்தார். இவரது தகப்பனார் பண்டிதர், சைவப் புல வர் கார்த்கேசு ஒரு தமிழாசிரியர். தாயார் வள்ளியம்மை. சிவத்தம்பியின் ஆரம்ப, இடைநிலைக் கல்வி கரவெட்டி விக்னேஸ்வ ராக் கல்லுரியில் நிகழ்ந்தது. உயர் இடை நிலை அல்லது பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வியை அவர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் பெற்றார்.
அப்போது கல்லூரி அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ். "விக்னேஸ்வரா வளர்த்துவிட்டது. ஸாஹிராவிலேயே நான் என்னை அடையா ளம் கண்டுகொண்டேன்" என தன் இளமை காலம் பற்றி சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஸாஹிராவிலிருந்து 1954ல் தன் பட்டக் கல்விக்காக அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் (இப்போதைய பேராதனைப் பல் கலைக் கழகம்) சேர்ந்தார். ஏனைய தமி ழ்ப் பேராசிரியர்களைப்போல் தமிழை ஒரு சிறப்புப் பாடமாகப் பயின்றவர் அல்ல சிவத் தம்பி. பதிலாக, வரலாறு, பொருளியல், தமிழ் ஆகிய மூன்று பாடங்களைக் கற்று ஒரு பொதுப் பட்டதாரியாக 1956ல் வெளியேறினார்.
1963ல் தமிழில் எம். ஏ. பட்டம் பெற்றார். 1970ல் பேர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசி ரியர் ஜோர்ஜ் தொம்ஸனின் வழிகாட்டுதலில் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் பொருள் பற்றி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார்.
தான் கற்ற கொழும்பு ஸாஹிராக் கல் லூரியில் ஒரு ஆசிரியராகவே 1956ல் அவர் தன் கல்விப் பணியைத் தொடங்கினார். வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களை அவர் அங்கு கற்பித்தார். இன்று இலங்கையில் பிரபல கல்வியாளர்களாகவும் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளாகவும் விளங்கும் பலர் அக்காலத்தில் சிவத்தம்பியிடம் கற்றவர்களே.
இவர்களுள் ஏ. சி. எல். அமீர் அலி, எஸ். எச். எம். ஜமீல், எம். எம். '{க்ரி ஆகியோர் இன்று இலங்கை யில் மிகப் பிரபலம் பெற்றவர்கள். சிவத் தம்பி ஸாஹிராவில் கற்ற, கற்பித்த காலமே இஸ்லாம் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, அரசில் பற்றியும் அவருக்;கு இருந்த ஆழமான புரிதலுக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். 1961ல் அவர் ஸாஹிராவில் இருந்து விலகி, இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இணைந்தார். அவர் அங்கு பணியாற்றிய சுமார் ஐந்தாண்டு காலம் மொழிபெயர்ப்புத் துறையில் அவரது அனுபவமும் அறிவும் ஆற்றலும் வளர்வதற்கு துணையாக அமைந்தது.
பல்கலைக் கழக ஆசிரியராக அவரது பணி 1965ல் வித்தியோதய பல்கலைக்;கழ கத்தில் (இப்போதைய சிறி ஜயவரத்தனபுர பல்கலைக்கழகம்) விரிவுரையாளராக இணைந்ததுடன் ஆரம்பித்தது. இப்பல்கலைக் கழகம் மிகப்பெரும்பாலும் சிங்கள மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டது.
முற்றிலும் பௌத்த பின்னணியில் உருவாகியது. இங்கு அவர் 13 ஆண்டுகள் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அக்காலத்தில் ஒரு இடதுசாரியாக வளர்ச்சிபெற்றிரிருந்த சிவத்தம்பி சிங்கள சமூகத்தையும் அதன் அரசியல் அபிலா சைகளையும் இடதுசாரி நோக்கில் புரிந்துகொள்வதற்கும், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சிந்திப்பதற்கும், சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் இக்காலகட்டம் அவருக்கு உதவியது எனலாம்.
இப்பல்கலைக் கழகத்திலேயே 1976ல் இணைப் பேராசிரியராக அவர் பதவி உயர்ச்சிபெற்றார். இங்கு பணியாற்றிய காலத்திலேயே விடுப்பில் இங்கிலாந்து சென்று தன் கலாநிதிப் பட்டக் கல்வியை யும் பு+ர்த்திசெய்தார். யாழ்ப்பாணத்தை விட்டு நீண்டகாலம் வெளியிலேயே வாழ்ந்த சிவத்தம்பி 1978ல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வந்தார். 1996ல் ஒரு சிரேஷ்ட பேராசிரி யராக தன் பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை அவர் அங்கேயே பணியாற்றினார்.
சிலகாலம் தமிழ்த் துறைத் தலைவராகவும் சிலகாலம் நுண்கலைத் துறைத் தலைவராகவும் அவர் அங்கு பணிபுரிந்திருக்கிறார். அவரது பணி ஓய்வின்பின் அவரது தகுதியையும் சேவை யையும் கௌரவி த்து தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரி யராக (Professor of Emeritus (இக்கலைச்சொல் அவரே உருவாக்கியது)) நியமித்தது. தன் பணியி லிருந்து ஓய்வுபெற்ற பிறகு தானும் ஒரு புலம்பெயர்ந்தவராக மரணிக்கும் வரை அவர் கொழும்பிலேயே வாழ்ந்துவந்தார்.
மார்க்சிய சிந்தனையில் அவருக்கு இருந்த ஈடுபாடு பிற்காலத்தில் பல்துறை ஆய்வாளராக அவர் வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், வரலாறு என்பவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளையும் ஊடாட்டத்தையும் அவர் தன் ஆய்வுகளில் விளக்க முயன்றார். சமுகவியல் வரலாற்றுப் பார்வை அவரது ஆய்வுகளின் அடிச்சரடாக உள்ளது.
இந்தவகையில் தமிழியல் துறையின் செழுமைக்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. மரபுவழித் தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் தமிழையும,; தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் தமிழ்த் தேசியக் கருத்துநிலைக்குள் இருந்தே பார்த்தனர். அவர்களது ஆய்வுகள் உள்முகப் பட்டதாக தமிழ்ப் பழமை, தமிழ்ப் பெருமை ஆகியவற்றைத் தேடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.
வையாபுரிப்பிள்ளையும், தெ. போ. மீனாட்சிசுந்தரம், வ. ஐ. சுப்பிரமணியம் போன்ற மொழியி லாளர்களுமே தமிழியல் ஆய்வில் அறிவியல் பார்வையை முதல்முதல் பிரயோகித்தவர்கள் எனலாம். இவர்களைத் தொடர்ந்தே மார்க்சியத் தமிழறி ஞர்கள் தமிழியலாய்வை வேறு ஒரு கட்டத்துக்கு வளர்த்தொடுக்க முயன்றனர். கைலாசபதியும் சிவத்தம்பியும் அவர்களுள் மிக முக்கியமானவர்கள். சமூக, அரசியல், வரலாற்றுப் பின்புலத்தில் இவர்கள் தமிழியல் ஆய்வை முன்னெடுத்தனர். இவர்களது ஆய்வு முடிவுகள் சிலபற்றி விமர்சனங்கள் இருப்பினும், இவர்களது ஆய்வுப் பார்வையின் முக்கியத்துவத்தை யாரும் நிராகரிக்க முடியாது.
இப்பின்னணியிலேயே பேராசிரி யர் சிவத்தம்பியின் சங்க இலக்கிய ஆய்வுகளை நோக்க வேண்டும். இவரது ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகளாக மட்டுமன்றி சமூகவியல் ஆய்வுகளாகவும் அமையக் காணலாம். இலக்கியத்தின் ஊடாக சமூகத்தை அல்லது சமூகத்தின் ஊடாக இலக்கியத்தை அவர் பார்க்கிறார். முல்லை சான்ற கற்பு என்பது இவ்வகையில் அவரது முக்கியமான ஆரம்பகாலக் கட்டுரைகளுள் ஒன்று.
பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் என்னும் தலைப்பிலான இவரது ஆங்கில நூல் இத்தகைய கட்டுரைகள் பலவற்றைக் கொண்டது. சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும், சங்ககால வரலாறும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளும், பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் முதலிய சிவத்தம்பியின் நூல்கள் இவ்வகையில் மிக முக்கியமானவை.
கடந்த சுமார் 45 ஆண்டுகால அவரது பல்கலைக் கழகச் சேவையில் அவர் ஏராளமான மாண வர்களை உருவாக்கியிருக்கிறார். தன் கல்விச் சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். அதே அளவு தனக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகியிருக்கிறார். விமர்சனத்துக்கு ஆளாகாத ஒரு மனிதரை நாம் உலகத்தில் காண்பது அபு+ர்வம். ஒருவருடைய பங்களிப்பு எவ்வளவு தூரம் பயனுடையது என்பதைக் கொண்டே நாம் ஒருவரை மதிப்பிட வேண்டும்.
தமிழியலின் பிதாமகன்
பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவினால் இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் தெரிவிக்கப்படுகின்றது. மிக முக்கியமாக தமிழியல் ஆய்வுலகம் தனது ஒரு மூத்த தமிழியல் பிதாமகனை இழந்து தவிக்கின்றது. தமிழியலை ஆய்விலும் நவீன தமிழிலக்கிய விமர்சனத்திலும் பல ஏற்றங்களையும் எச்சங்களையும் கண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஏறத்தாழ ஐந்து தசாப்தகாலமாக இலங்கைப் பல்கலைக்கழக முறைமையிலும் தமிழாய்வுத்துறை, இலக்கிய விமர்சனத்துறை என்பவற்றில் அவர் கொடிகட்டிப் பறந்தார்.இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, அமெரிக்கா. இங்கிலாந்து, ஸ்வீடன் என பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றி இலங்கைக்குப் புகழ் சேர்த்தவர் பேராசியர்.
தமிழியல் ஆய்வுத்துரையில் அவரது ஆய்வு முறைகளும் அணுகுமுறைகளும், வேறுபட்டவை. காலங்காலமாக இருந்து வந்த மரபுவழி அணுகுமுறைகளைக் கைவிட்டு விஞ்ஞானப் பாங்கான முறையியலைப் பின்பற்றி தமிழிலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட வையாபுரிப்பிள்ளையின் வழித்தடத்திலிருந்து தமிழியல் ஆய்வை மேலும்பல உச்சங்களுக்கு இட்டுச்சென்றவர் பேராசிரியர் தமிழிலக்கிய ஆய்வில் இரசனை நோக்கையும், மிகைப்படுத்தலையும் ஒருபுறம் வைத்துவிட்டு, பண்டைத் தமிழிலக்கியங்கள் எழுச்சி பெறப் பின்புலமாக அமைந்த சமூக, பொருளாதார வரலாற்றுத் தளங்களை ஆழ்ந்து நோக்கி தமிழியல் ஆய்வில் பன்னெறி அணுகுமுறையை அறிமுகம் செய்தவர் பேராசிரியர்.
அன்னாரின் பல்வகை தமிழ்ப் பணிகளில் நான் நேரில் கண்டு அனுபவித்த சிலவற்றைக் கூறுதல் பொருத்தமுடையதாகும். ஐரோப்பாவில் பிறந்து வாழுகின்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழிக்கல்வியை வழங்கப் பெற்றோர்கள் விரும்பினாலும், அதற்கான பாடநூல்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இலங்கை மற்றும் தமிழகப் பாடநூல்கள் வடிவமைப்பிலும், அச்சிலும் ஐரோப்பிய பாட நூல்களை ஒத்திருக்கவில்லை. இதனால் ஐரோப்பிய தமிழ்ப் பிள்ளைகளின் தேவைகளையும், ஐரோப்பிய சூழலையும் பிரதிபலிக்கும் நவீன தமிழ்ப் பாடநூல்களை எழுதி வடிவமைக்கும் பணி பேராசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெர்மனியில் பத்து நாட்கள்வரை தங்கியிருந்து இப்பாடநூல் செயற்றிட்டத்துக்குத் தலைமை தாங்கி அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். அதற்குத்துணையாக சிக்கப்பூரில் இருந்து பேராசிரியர்கள் திண்ணப்பனையும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் அகஸ்தியலிங்கம், இராமர் இளங்கோ போன்றவர்களையும் கூட்டிச் சென்றார்.
கல்வியியல் பாங்கான அம்சங்களைக் கவனிக்க என்னையும், சிறுவர் பாடல்களுக்காக கவிஞர் காரை சுந்தரம்பிள்ளையையும் அழைத்துச் சென்றார். உடல் நலக் குறைவோடும் காரியமே கண்ணாக இருந்து காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை கடுமையாக உழைத்து ஆரம்ப நிலைப் பிள்ளைகளுக்கான தமிழ்ப் பாடநூல்களைத் தயாரித்து சாதனை படைத்தார். எனக்குத் தெரிந்தவரை இத்தகைய அழகிய வண்ணங்களுடனும், வடிவமைப்புடனும் தமிழ்ப் பாடநூல்கள் வெளியிடப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். இது பேராசிரியரின் சாதனை மிகுந்த ஒரு தமிழ்ப்பணி என்பதில் ஐயமில்லை.
புதுடில்லியில் நடைபெற்ற ஒரு ஆசியர் கல்வியியல் மாநாட்டில் நான் கலந்து கொண்ட போது அதில் பிரதான உரையை ஆற்றும் வாய்ப்பு பேராசிரியருக்கே வழங்கப்பட்டது. அவ்வுரை தமிழியல் தொடர்பற்றது. தென்னாசிய நாடுகளின் குடியேற்ற காலக் கல்விமுறை, அதன்பாதக விளைவுகள், சமூக அசைவியக்கத்தில் மெக்காலே பிரபுவின் கல்விக்கொள்கை ஏற்படுத்திய தாக்கம், அக்கல்வி முறையை மாற்றுவதற்கு சுதந்திர அரசாங்கங்கள் மேற்கொண்ட பகீரத பிரயத்தனங்கள், அவற்றின் வெற்றியும் தோல்வியும் இவை பற்றிய ஆழ்ந்த, புலமைசார் சொற்பொழிவொன்றை ஆங்கில மொழியில் நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். உடல் நலக்குறைவிருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னந்தனியனாக இம்மாநாட்டுக்கு வந்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை பெருமையைத் தருகிறது.
அவ்வாறே பேராசிரியருக்கு பல சந்தர்ப்பங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக அழைக்கப்பட்டு கெளரவம் வழங்கப்பட்டது.
இதன் உச்சகட்டமாகத்தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, பேராசிரியருக்குக் கல்யாண சுந்தரம் உயர் விருதும் வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் தமிழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது இலங்கைப் பேராசிரியர் சிவத்தம்பி என்றே கூறிவிடலாம்.
பேராசிரியரின் மற்றொரு சிறப்பு, அவரின் நவீன இலக்கியத்தில் மட்டுமன்றி பழந்தமிழ் இலக்கியத்திலும் பாண்டித்தியம் மிக்கவராக இருந்தார். நவீன தமிழ் இலக்கிய விமர்சகராகவே அவரைச் சமூகம் அறியும். இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் தமது பணியில் சிறப்படைய பழந்தமிழ் இலக்கியப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி அறிஞர்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பன்மொழிகளை அறிந்தவர்களாகவும் வேற்று மொழி எழுத்துக்கள், இலக்கியங்கள் என்பவற்றில் பரீட்சயம் மிக்கவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.
அன்னாரின் பிற்றிய கல்விச் சிறப்புகள், தமிழாய்வுச் சிறப்புகள், விமர்சனச் சிறப்புகள் பற்றி யாவரும் அறிவர்; அறிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய புலத்துக்கும் தமிழாய் வுத்துறைக்கும் விமர்சனத்துறைக்கும் விழுந்த ஒரு பேரிடி என்றே கொள்ளுதல் வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
ஊருணி நீர் போன்றவர்
நான் முதன் முதலில் பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்த ஞாபகம் இன்ன மும் என்னுள் பசுமையாக இருக்கின்றது.1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத் தில், நான் தனது நண்பரோடு பாராளுமன்றத்தைப் பார்க்கப் போனேன். அங்கு சிவத்தம்பியைச் சந்தித்தேன். அவர் பாராளுமன்றத்தில் பணிபுரிந்த காலம் அது.
அப்போது ஏரிக்கரைப் பத்திரிகையில் பத்திரிகையாளராக இணைவதற்காக நான் விண்ணப்பித்திருந்தேன். சிவத்தம்பி நீ என்ன செய்த கொண்டிருக்கிறாய் என்று வினவ, அதைப்பற்றிச் சொன்னேன். நீ எழுதிய கட்டுரைகள், சிபார்சுக் கடிதங்கள் ஏதாவது கொண்டு வந்தாயா என்று கேட்டார். இல்லை என்று நான் தலையாட்டவே, "அட அறுவானே! மற்றவங்கள் எல்லாம் கட்டுரைகள், நற்சாட்சிப் பத்திரங்களோட வருவாங்களே நீயும் எடுத்துக் கொண்டு போ என்று ஆலோசனையாக அல்லாமல், ஒரு அன்புக்கட்டளையாகவே சொன்னார். நானும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போனேன்.
நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய 50 பேரில் என்னுடன் மூவர் மட்டுமே தெரிவானோம்.
அன்று பாராளுமன்றத்தில் ஆரம்பித்த எங்கள் நட்பு ஒரு கிராமிய மணம் கமழ்ந்ததாக சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து கொழும்பில் இலக்கியக் கூட்டங்களில் அவருடன் சந்தித்துப் பழகும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. நான், சிவத்தம்பி கைலாசபதி மூவரும் நல்ல நண்பர்களானோம்.
நான் ஒப்சேவரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1964 ஆம் ஆண்டில் நேருவின் மரணத்தைத் தொடர்ந்து After Nehru Who
எனும் கட்டுரை எழுதும் பணி, எனக்குத் தரப்பட்டது. சிவத்தம்பியிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட தகவல்கள், அந்தக் கட்டுரைத் தொடர் சிறப்பாக அமைந்தமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நிறைய வாசிக்க வேண்டும். தான் அறிந்தவை குறித்து மற்றவர்களுடன் விவாதிக்க வேண்டும், பேச வேண்டும் என்ற வெறியும் ஆர்வமும், சிவத்தம்பியிடம் எப்போதும் இருக்கும்.
சிவத்தம்பி வித்யோதய பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணிகளை ஆரம்பித்து , பின்னர் அங்கேயே துணைப் பேராசிரியராகவும் ஆனார்.
மஹரகம, தேசிய கல்வியியற் கல்லூரி யிலும், பாடங்கள், பாடசாலைச் சூழல் தொடர்பான பல திட்டங்களில் சிவத் தம்பியோடு இணைந்து பணியாற்றும் சந்தர்ப் பம் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை, தமிழியல், கலை, கலவியியில் போன்றதுறைகளில், சிவத்தம்பி நிறைய நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தான் திருப்பதியுறும் அளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். ஆனால், தமிழ் பேசும் மக்களின், இடர்கள் நீங்கி அவர்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்ற அவரது அபிலாஷை விருப்பு என்பன நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படு முன்னமேயே அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது கவலையை அளிக்கிறது.
------------------------------------------------------------------------------------------
பயன்தரு பெரு மரம் சாய்ந்து விட்டது
பேராசிரியர் கா. சிவத்தம்பி தனித்துவமான தமிழ் பேராசிரியர். தமிழ் ஆய்வை பண்டித மரபினின்று மீட்டெடுத்து, நவீனமுறைகளில் அதை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர். இப்பார்வையை அவர் தமது தமிழ் ஆசான்களான பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிட மிருந்து கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டவற்றை மாக்ஸிய நெறி நின்றும் அதன் பின்னர் எழுந்த நவீன கோட்பாடுகளின் வழி நின்றும் விளக்க முயன்றார். இவ்விளக்கத்துக்கு பல்துறை அறிவு தேவைப்பட்டது. மானுடவியல், சமூகவியல், உளவியல், சரித்திரவியல், மெய்யியல் என்ற பல்துறைகளையும் சங்கமிக்கச் செய்து அவர் தமிழாய்வை செய்தபோது புதிய பரிமாணங்களைக் காட்டியது. பண்பாட்டு ஆய்வாளராக அவரை அது வளர்த்துச் சென்றது.
இதனாலேயே இவருக்கு ஆய்வாளர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தைப் பெற முடிந்தது. தம் வழியில் அவர் பல ஆய்வாளர்களை உருவாக்கியுமுள்ளார். அவரது ஆய்வுத் தடம் அவரது மாணாக்கரால் வளப்படுத்தப்படுகின்றது.
தமிழ் நாடகத்தையே அவர் தமது கலாநிதிப் பட்டத்துக்கு எடுத்துக்கொண்டார். பண்டைத் தமிழகத்தின் நாடகம்(Drama in Ancient Tamil Society) என்பதுவே அவரது ஆய்வுத் தலைப்பு, கிரேக்க நாடகவியலுடன் பண்டைய தமிழ் நாடகங்களை ஒப்பிட்டு உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் தோம்ஸனின கீழ், பேர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த ஆய்வு, தமிழ் நாட்டில் அவருக்கு ஒரு பெருமையான இடத்தைத் தேடித் தந்தது. முதன் முதல் தமிழ் நாடகம் பற்றி வந்த விஞ்ஞான ரீதியான ஆய்வு இதுவேயாகும். இதுவரை 70 க்கும் மேற்பட்ட நூல்களையும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்த பேராசிரியர் உடல் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த விடயம் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வே எனலாம்.
தமிழ்ப் பண்பாட்டின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொண்டு வந்ததில் பேராசிரியரின் இடம் முக்கியமானதொன்றாகும். யாழ்ப்பாணத்தில் மறைக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட கிராமியக்கலையும் மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மலையகம் முதலான பிரதேசங்களையும் தமிழ் பேசும் இஸ்லா மிய, கிறிஸ்தவர்களையும் இணைத்தே அவர் தமிழ்ப் பண்பாட்டைப் பார்த்தார். தமிழ் நாடகக் கல்வி வளர்ச்சிக்கு, அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
நாடகமும் அரங்கியலும் என்ற பாடநெறி, இலங்கையில் தமிழர் மத்தியில் உருவாக்கி கால்கோளிட்டவர் அவரேயாகும். இன்று அவர் காட்டிய திசையில் பல நூற்றுக்கணக்கான நாடக ஆசிரியர்கள் தோன்றிவிட்டனர். பழுத்த மரம்போல கிழைத்து சடை பரப்பி, அனைவரும் பயனடையும் வண்ணம் வாழ்ந்தார். அவரிடமிருந்து பலர் பல விடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.
வெறுமனே அறிவுலகுக்குள் புகுந்து தாளிட்டுக் கொள்ளாமல், மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பணியாற்றிய ஒரு பேராசிரியர் அவர். அதுவே அவரது பெரும் புகழுக்கு காரணம்.
No comments:
Post a Comment