கா. சிவத்தம்பி: தமிழியலின் தனித்தோப்பு
இலக்கிய விமர்சகரும் தமிழியல் ஆய்வாளரும் சமூக, அரசியல் சிந்தனையாளருமான கா. சிவத்தம்பியின் மரணம் தமிழ் கூறும் உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதை யாரும் மறுக்கமாட்டார்கள். தமிழை மொழியாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு வாழ்வியலாக, பண்பாடாக பார்க்க வேண்டுமென தன் ஆய்வுகளிலும் செயற்பாட்டிலும் விட்டுச் சென்ற அவர், தமிழியலில் தாத்தாக்கள் என போற்றப்படும் உ.வே. சாமிநாத ஐயர், தாமோதரம் பிள்ளை போன்றோரின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டின் பிந்திய அரைப்பகுதியில் வரும் மிக முக்கியமான புலமையாளராவார்.
ஆங்கில மோகம் நிலவிய அக்காலத்தில் தமிழுக்கு தன்னை ஆற்றுப்படுத்தியவர்களாக ஏ.எம்.ஏ அஸீஸையும் எஸ்.எம். கமால்தீனையும் போராசிரியர் சிவத்தம்பி என்றும் நினைவுகூறுபவராக இருந்தார். தமிழ் மேலாதிக்க உணர்வு நிலவிய காலகட்டங்களிலும் முஸ்லிம் இலக்கிய அடையாளத்தையும் முஸ்லிம் தேசம் என்ற அரசியல் எண்ணக்கருவையும் அவ்வப்போது தனது ஆய்வுகளில் வலியுறுத்தத் தயங்கவுமில்லை.
‘பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்’ என்ற அவரது மிகப்பெரும் ஆய்வு நூலில் ஐராவதம் மகாதேவனின் தெல்லியல் சான்றுகளைக் கொண்டு சங்ககால இலக்கியப் பிரதிகளை ஆராயும் அவர், தமிழுக்கு முந்தி ஒரு மொழி இருந்திருப்பதையும் அம்மொழியின் பண்புகளையும் அது இன்றுவரை இலங்கைச் சோனகரால் பேசப்படும் மொழி என்பதை நிரூபித்திருப்பதும் இலங்கைச் சோனகரின் மொழி குறித்த புதிய தோடல்களுக்கும் ஆய்வுகளுக்கும் வழிவகுத்திருப்பதையும் இங்கு நாம் மறந்துவிட முடியாது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது இலங்கையின் ஏனைய பல்கலைக் கழகங்களுக்கு இல்லாத தனியிடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கப் பெறும் என்பதிலும் அதிலிருந்து வரும் பதிற்குறிகளையும் புதிய அறிவு உருவாக்கத்திற்கான இடமாக அப்பல்கலைக் கழகம் மாறவேண்டும் என்பதையும் போராசிரியர் சிவத்தம்பி அப்பல்கலைக்கழத்த்தின் தொடக்க கால செயற்பாடுகளில் வலியுறுத்திப் பேசியுள்ளார்.
போராசிரியர் அவர்களின் எழுத்தாவணங்கள் அனைத்தையும் இணையத்தளத்திற்கு பதிவேற்றுவது அவசியமாகும். அவரைப்பற்றிய விரிவான ஆய்வரங்கொன்றை ஏற்பாடு செய்து அவர் பற்றிய வரிவான மதிப்பீடுகளை பதிவு செய்வதும் இன்றைய தேவையாகும். இந்தியாவில் வி. அரசு போன்றவர்களின் முயற்சியால் மிக விரிவான ஆய்வொன்று நடைபெற்றுள்ளது. ஆனால் அது இன்னும் வெளிவந்த்தாகத் தெரியவில்லை. பேராசிரியர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘பௌத்தமும் தமிழும்’ என்ற தலைப்பில் ஆற்றிய நீண்ட தொடர் உரையும் சகஜீவனத்திற்கான சிறந்த பாலமாகும். அவ்வாறே அவரது நேர்காணல்கள், மாநாடுகள், கல்விக் கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றில் ஆற்றிய உரைகளும் மதிப்பீடுகளும் தொகுக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. பாரதியியல் மற்றும் தமிழியலில் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி அவருக்கும் கைலாசபதிக்குமிடையில் நடந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவுமில்லை. அ. முத்துலிங்கம் தருகின்ற தகவலின்படி பாரதியியல் பற்றி நான்கு மிகப்பெரும் பாகங்களாக ஒரு கலைக்களஞ்சியம் செய்வதற்கான தரவுகளும் ஆய்வுகளும் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில புலமையாளர்கள் தனித்துவமான படைப்பாளிகளில் நிபுணத்துவ கற்கைகள் காணப்படுவது போன்று பேராசிரியர் சிவத்தம்பி ஆய்வுத்துறை ஒன்றை அவரது புலமைசார் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
சுதந்திர இலங்கையில் இன மேலாதிக்கமும் பௌத்த மயமாக்கலும் சிங்கள தனி மொழிக் கொள்கையும் நிலவிய ஒரு மோதுகைச் சூழலில் தமிழ் மொழி அரசியல் பலமிழந்து தமிழ் வாழ்வியல் நசுக்கப்பட்ட ஒரு நிலையில் தமிழில் தனி மரமாகவும் அதேநேரம் தோப்பாகவும் நின்று பேராசிரியர் ஆற்றிய பணி தனித்து மதிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்

No comments:
Post a Comment