Friday, 8 July 2011


பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் அறிவுநிழல் தந்த ஆலமரம் - இரா.சிவச்சந்திரன்
[ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 07:20.04 AM GMT ]
தகைசால் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் இழப்பு எமக்கு மாத்திரமல்ல, தமிழ் உலகிற்கும், ஆய்வுத்தளத்தில் நிற்கும் சர்வதேச புலமையாளர் உலகிற்கும் ஓர் பேரிழப்பாகும்.
“கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்ற வள்ளுவர் குரலுக்கு ஒப்ப உலகில் வாழ்ந்தவர் பேராசிரியர்;. தமிழே அவரது சிறப்புத்துறை எனினும் பல்துறை அறிஞராய் ஒளிபரப்பியவர். தமிழில் தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை என வந்து புதுக்கவிதை வரை பரிச்சயமானவர். வாழும் சமூகத்தின் யதார்த்தத்தைப் புரிந்து வாழ்ந்தார். இதனால் தான் எம்.ஜி.ஆரின் புகழ் வளர்ந்த வரலாற்றையும் சமூக இயக்கத்துடன் இணைத்து எழுதினார்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளரான இவர் தனது ஆங்கில அறிவின் ஊடாக தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
மாக்சிய சித்தாந்தத்தில் பற்றுக் கொண்டிருந்த இவரும், இவரது நண்பர் பேராசிரியர் கைலாசபதியும் ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் பொருள் முதல்வாத சிந்தனையூடாக சமூகத்தை தரிசித்து நவீன இலக்கிய படைப்பாளர் பலரை உருவாக்கினார்கள்.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”; என்ற பாரதியின் கனவை இவ் இரட்டையர்கள் நனவாக்கினார்கள்.
எண்பதுகளில் நானும் நண்பர் குகபாலனும் சென்னை பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் அங்கு பயின்றவர்கள் கைலாசபதி, சிவத்தம்பியை கண்டீர்களா? ‘ஆம்’ கதைத்தீர்களா? ‘ஆம்’ அவர்களிடம் படித்தீர்களா? ‘ஆம்’ என்ற பதிலால் எமக்கே தமிழ்நாட்டில் மதிப்பும் புகழும் கிடைத்ததென்றால் அவர்களது புகழ் தமிழ்நாட்டில் பரவியிருந்த செறிவை உய்த்துணர முடியும்.
தாய்நாடு, சேய்நாடு என்றவர்கள் பரமசிவன் கந்தனிடம் பாடம் கேட்டது போல் மேற்குலக சிந்தனையை உள்வாங்கி அதனை தமிழுடன் இணைத்து நவயுகத் தமிழை தமிழ்நாட்டிற்கு வழங்கினார்கள் என்றால் மிகையாகாது.
பேராசிரியர் சிவத்தம்பி ஏறத்தாழ 70ற்கு மேற்பட்ட நூல்களை தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். 200ற்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தந்துள்ளார். இவற்றில் சங்க இலக்கியம் முதல் 20 ஆம் நூற்றாண்டு இலக்கியம் வரை அடங்கியுள்ளது. நாவல், சறுகதை, கவிதை, புதுக்கவிதை, விமர்சனம், பத்திரிகையியல், சினிமா, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கட்புலக் கலைகள், நிகழ் கலைகள், என பலதுறையும் விரவிநிற்கும்.
அமரர் ஏ.ஜே கனகரத்தினா யாழ் பல்கலைக்கழகத்தில் நாம் ஒன்றாய் உலவியபோது சொன்ன சொல் என் ஞாபகத்திற்கு வருகிறது. “வெளிநாட்டிலிருந்து எம்மைப்பற்றி அறிய ஒருவர் வருகின்றார் என்றால் ‘எமது முமுமையையும்’ அவருக்கு நன்கு எடுத்துக்கூறக்கூடியவர் சிவத்தம்பி தானே வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார்.
அவ்வாறாக பல்துறையில் கிளைபரப்பி படர்ந்து விரிந்து தமிழர்களுக்கு நிழல்தந்த ஆலமரத்தை நாம் இழந்து திகைத்து நிற்கின்றோம். உலக வரலாற்றில் பலரது இடங்கள் நிரப்பப்படுவதையும் சிலரது இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். அந்தச் சிலரில் இவர் ஒருவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு யாழ் பல்கலைக்கழக சமூகம் அவரது பெயர் நிலைத்து நிற்கத்தக்க வகையில் ஓரு நினைவுச்சின்னத்தை விரைவில் உருவாக்கி பெருமைபெற வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன்.
பேராசிரியர்.இரா.சிவசந்திரன்

No comments:

Post a Comment