ஒடுக்கப்பட்டவர்களின் நலன்சார்ந்தே பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் இருந்தன- பேராசிரியர் மௌனகுரு!(Att;Audio)
Published on July 8, 2011-8:12 am · No Comments
தமிழ் ஆய்வாளர்களில் முன்னோடியாக திகழ்ந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒடுக்கப்பட்ட, மக்களின் நலன்சார்ந்ததாக இருந்தது என பேராசிரியர் சிவத்தம்பியின் மாணவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் தினக்கதிர் இணைத்திற்கு வழங்கிய நினைவுப்பகிர்வில் தெரிவித்தார்.பேராசிரியர் மௌனகுருவை மட்டக்களப்பில் அவரது வீட்டில் நாம் சந்தித்த போது ஒரு தந்தையை இழந்த சோகத்தில் அவர் ஆழ்ந்திருந்தார். பேராசிரியர் சிவத்தம்பியை நேசித்த மாணவர்களில் முதன்மையானவர் மௌனகுரு அவர்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி பற்றி தனது நினைவுப்பகிர்வில் தமிழ் பண்பாட்டியல் பற்றி பலர் ஆய்வு செய்தார்கள், ஆனால் பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வு தனித்துவமானவை என கூறினார்.
பல்துறை சங்கம ஆய்வு முறை ஊடாக அவரது ஆய்வுகள் காணப்பட்டதுதான் அவரது ஆய்வுகள் தனித்துவம் மிக்கதாக உயர்ந்து நிற்பதற்கு காரணமாகும்.
பல்துறை சங்கம ஆய்வு முறையை என்பது என்ன என புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விடயத்தை புரிந்து கொள்ள, பண்பாட்டை புரிந்து கொள்ள, இலக்கியத்தை புரிந்து கொள்ள தத்துவவியல், உளவியல், மனிதவியல் நெறிமுறைகளை பிரயோகித்து முடிவைத்தேடுவதுதான் பல்துறை சங்கம ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.
அவரது பண்பாட்டு ஆய்வு பரந்திருந்தது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பற்றி, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்ததாக அமைந்திருந்தது.
ஆறுமுகநாவலருக்கு பின் யாழ்ப்பாணத்தின் அடி மட்ட கலைகள் மறைக்கப்பட்ட நிலையில் அவற்றின் முகத்தை வெளிக்கொண்டு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களாகும். தனது பண்பாட்டு ஆய்வில் யாழ்ப்பாணத்தின் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட முகத்தை வெளிகொண்டு வந்தார்.
அவர் ஒரு கலைக்களஞ்சியமாக திழ்ந்தார். கர்வம் சிறிதும் இல்லாது, தன்னடக்கம் கொண்ட புலமையாளராக அவர் வாழ்ந்தார். அவர் இல்லாத தமிழ் உலகு வெறுமை மிகுந்ததாகவே தெரிகிறது என பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்
No comments:
Post a Comment