Thursday, 7 July 2011

ஈழத்தமிழர் கல்வியின் முதுசம் மறைந்தது’-பேராசிரியர் சிவத்தம்பி காலமானார்!

Published on July 6, 2011-7:26 pm   ·   No Comments
சர்வதேச புகழ் பெற்ற தமிழ்அறிஞரும், தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியருமான  கார்த்திகேசு சிவத்தம்பி இன்று இரவு (06.07.2011)இலங்கை நேரம் 8.30 அளவில் 79ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
கரவெட்டியில் 1932ஆம் ஆண்டுமே மாதம் 10ஆம் திகதி பிறந்த சிவத்தம்பி அவர்கள் தமிழ் உலக பரப்பில் ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கல்விசார் நடவடிக்கைகளோடு தன்னுடைய பணியை முடித்துக்கொண்டவர் அல்ல. அவரின் வாழ்வும் பணியும் விரிந்து பரந்திருந்ததை யாரும் மறக்க முடியாது.
ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இளமாணிப்பட்டத்தையும் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றார். பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவரான சிவத்தம்பி அவருடன் இணைந்து தமிழர்களின் பராம்பரிய கூத்துக்கலையின் அடிமுடி தேடி அதை தற்கால சமூகத்திற்கும் கொண்டுவந்து நிறுத்தியவர்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இரண்டு ஆண்டுகள்  பணியாற்றினார்.
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் சிவத்தம்பி அவர்கள் பணியாற்றினார்.
பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய ‘விதானையார் வீட்டில்’ தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இலங்கைத் தமிழர் – யார், எவர்?, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும், மதமும் கவிதையும், தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, பண்டைத் தமிழ்ச் சமூகம் – வரலாற்றுப் புரிதலை நோக்கி என பல நூல்களை எழுதினார்.
அது மட்டுமன்றி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணில் அடங்காதவை. இலங்கையில் வெளிவந்த சிறந்த நூல்கள் அனைத்திற்கும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை இருக்கும். அவரின் அணிந்துரைகளால் சிறப்பு பெற்ற நூல்களும் எழுத்தாளர்களும் பலர் உள்ளனர்.
பழகுவதற்கு மிகவும் இனியவரான அவர் எளிமையானவரும் கூட. கிழக்கு பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இரு வருடங்கள் கடமையாற்றிய காலத்தில் அவருக்கு தனியான வாகன வசதியை தவிர்த்து கிழக்கு பல்கலைக்கழக சாதாரண ஊழியர்கள் பயணம் செய்யும் பஸ்சையே தினசரி பயன்படுத்திக்கொள்வார். அவரின் வார்த்தையில் சொல்வதானால் அது சமூக ஊடாட்டத்தை புரிந்து கொள்வதற்கு மிக அவசியமானது என கருதினார்.
தினக்கதிர் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் மட்டக்களப்பு முகத்துவார வீதியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் விடுதிக்கு சென்று அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்ற போது ஒரு தேசியப்பத்திரிகையை விட பிராந்திய பத்திரிகைக்கு இருக்க வேண்டிய பொறுப்பையும் சுமையையும் எமக்கு விளக்கி ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பணியை முடித்துக்கொண்டு கொழும்புக்கு சென்றிருந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் நூல் வெளியீடு மற்றும் விருதுவழங்கும் விழாவுக்கு அழைத்திருந்தோம்.
கோபு ஐயாவுடன் நீண்டகாலமாக நெருக்கமாக பழகிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அந்த விழாவில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கலந்து சிறப்பித்து ஆற்றிய பேருரை இன்றும் எமது மனக்கண்ணில் ஆழமாக பதிந்திருக்கிறது.
பல்துறைசார்ந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்… அவரின் வழிகாட்டலில் பயணித்தோம் என்ற ஆத்மதிருப்தியுடன் அவரின் பாதங்களில் தினக்கதிர் தலைசாய்த்து வணங்கி நிற்கிறது.
தினக்கதிர் ஆசிரிய பீட

No comments:

Post a Comment