மானுடம் பாடிய மகத்தான மனிதனென மானிடம் போற்றி நிற்கும் - பேராசிரியர் கா.சிவத்தம்பி செயற் சிறப்புக் குறிப்புக்கள்
தமிழ் உலகின் சமகாலத்தில் முக்கியத்துவம் மிக்கத் தமிழறிஞர், ஆய்வாளர், பேராசிரியர், கா.சிவதம்பி. அன்னாரது மறைவு தமிழறிவுசார் களமெங்கும் துயர்நிலையைத் தோற்றுவிதிருக்கும் நிலையில், அவரது மாணவர்களில் ஒருவராக இருந்த போதும், நட்பார்ந்த நெருக்கத்துடன் இறுதிவரை தொடர்பாடலில் இருந்த ஆய்வாளர், ஆசிரியர், எழுத்தாளர், எனப் பன்முகத் தகமைசார் தமிழ்த்துறையாளர் திரு. சூ.யோ.பற்றிமாகரன் அவர்கள், 4தமிழ்மீடியாவிற்காக பேராசிரியர் கா.சிவத்தம்பியின் செயயற் சிறப்புக்களை இங்கு கட்டுரையாக பதிவு செய்துள்ளளார். அவருக்குரிய நன்றிகளுடன், பேராசிரியர; கா.சிவத்தம்பி அவர்களுக்கான அஞ்சலியாக இக் கட்டுரையினை இங்கு பிரசுரிக்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்தமிழ்த் துறையுள் உண்மை என்னும் தீபமேற்றி அதன் ஆழத்தைத் தேடிய ஆய்வாளர் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்கள். இதனால் தமிழிலக்கியத்திற்கு உயிர்ப்பினை வழங்கிய எம்காலத்துக் கல்விப் பிரம்மா. ஆம்! தமிழ் வயிறார உண்டு விட்டு அது சமிக்கும் வரை வாயாரக் கதைப்பது தான் இலக்கியம் இலக்கணம் என்ற நிலை மாறவேண்டும் மக்கள் என்னும் எண்ணக்கரு தமிழிலக்கண இலக்கியத்தில் முதன்மை பெறல் வேண்டும் என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் நோக்கே தமிழ் இலக்கண இலக்கியங்களில் தமிழரின் சமுகவியல் தேடப்படல் வேண்டும் என்ற போக்காகியது.
இந்த நோக்கால், விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அக்கறை தமிழ்த்துறைகளில் தலைதூக்கியது. நாட்டார் பாடல்கள் குறித்த ஆர்வம் மேலிட்டது. தமிழர்களின் நாடகங்கள் இசைவடிவங்கள் ஓவிய சிற்ப வரலாறுகள் குறித்த புதிய சிந்தனைகள் பயில் துறையாக தமிழ்த்துறை வளர்ச்சி பெற்றது.
இனி சமுகநிலையில் தமிழர்களிடை நிலவு சாதியம் சாமான்யத் தமிழனின் வாழ்வுக்கு மட்டுமல்ல சாதனைத் தமிழனாகத் தமிழன் மாறுவதற்கும் தடையாக உள்ளது என்பது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் கருத்தாக அமைந்தது. எனவே சாதியக் கொடுமைகள் தடுக்கப்பட்டால் மட்டும் போதாது அறிவார்ந்த நிலையில் தமிழர்களிடை இருந்து சாதியத்தின் பொய்ம்மைகள் புனைந்துரைகள் சோடிப்புக்கள் நீக்கப்பட்டுத் தமிழர்களிடை சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் பேணப்படல் வேண்டும் என்னும் பெருநோக்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் சமுக இலட்சியமாக அமைந்தது. இதனை உணர்ச்சி சார் வழிகளில் அணுகாது அறிவுசார் வழிகளில் அணுகிச் சாதி என்னும் அறியாமையை நீக்கினாலே தமிழினம் நலம் பெறும் என்பது அவர் வழியாகியது. மார்க்சிசம் இதற்கான வழியாகவும் விழியாகவும் அவர் கொண்டார். இதில் அவர் ஆரம்பத்தில் மார்க்சிசம் குறித்த ஆழமான அறிவைத் தான் பெற்று மக்களுக்குப் பரப்ப முயன்றாலும் அதன் பரிணாம வளர்ச்சியில் தமிழர்களுடைய சமுக கலாச்சார ஆன்மீகத் தன்மைக்கு ஏற்ற மார்க்சியம் சார் தத்துவம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்னும் ஒரு அற்புதமான கருத்தை அவர் வெளிப்படுத்தினர். இதனாலேயே பலருக்கு அவர் இரட்டைக் கொள்கை உடையவர் போன்ற எண்ணத்தைக் கொடுத்தது.
தமிழ்த் தேசியத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். ஆனால் தமிழ்த்தேசியத்திற்குள் சமுக சமத்துவம் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடான சகோதரத்துவம் சரி செய்யப்பட வேண்டுமென்னும் ஒர் ஆழமான பார்வை அவரிடத்தில் என்றும் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதை நிறுத்தி அரசாங்கம் அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள் என்பதைக் கேட்டறிய வேண்டும் என்பது அவரின் பலத்த வாதாமாக அமைந்தது. இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் மலையகத் தமிழர்கள் என்னும் நான்கு இனத்துவங்களுக்கும் இடையிலான உரையாடல் ஒன்றின் அவசியத்தை அவர் என்றும் நாடிநின்றார். அதே வேளை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கோரவடிவங்களையும் அதிலிருந்து தாக்குப்பிடிப்பதற்குத் தமிழர்கள் கையாண்ட பாதுகாப்பு வடிவங்களையும் அவருடைய எழுத்துக்களில் அறிவார்ந்த நிலையில் வெளிப்படுத்தினார்.
தன்னை இலங்கையர் என அவர் அடையாளம் காட்டுவது அத்தகைய அடையாளம் முழு இலங்கை மீதுமான தமிழர்களின் உரிமைகளின் சான்றிதழ் என அவர் கருதினார். வடக்கு கிழக்கு மலையகம் மட்டுமல்லாது முழு இலங்கையின் அரசியல் சமுக பொருளாதார உருவாக்கல்களிலும் தமிழர்களின் பங்களிப்புக் காலத்திற்குக் காலம் பல்வேறு வடிவங்களில் இருந்துள்ளது என்பதினால் அந்த உரிமை உரக்கக் கூறப்படல் வேண்டும் என்பது அவரின் எண்ணமாக இருந்தது. இத்தகைய ஒரு கருத்தியல் நிலைப்பாட்டை அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்களும் அவர் சோல்பரி ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த ஆவணங்களில் கொண்டிருந்தார். ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் மார்க்சிய சிந்தனையின் பால் பலத்த பற்றுடையவர் என்பதினால் இடதுசாரித்துவத்திலும் இடதுசாரித்துவ இணைப்புச் சிங்களக் கட்சியாக அறுபதுகளில் எழுபதுகளில் காணப்பட்ட சிறிலங்காச் சுதந்திரக்கட்சியிலும் தனது ஆர்வத்தைக் காட்டினார்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களும் இவருடைய எண்ணத்துடன் சமானமான எண்ணங்களை இலங்கை அரசியலில் கொண்டிருந்தாலும் அவர் இளவயதில் இயற்கையெய்திய பின்னர் சிங்கள அரசியலில் இடம்பெற்ற மாற்றங்கள் இலங்கைத் தீவில் இடதுசாரித்துவ வழியில் சிந்திக்கின்ற சிந்தனைகள் இடப்பொருத்தம் கலாச்சாரப் பொருத்தம் அற்றவை என்ற நடைமுறையைத் தோற்றுவித்தது. இந்நிலையில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ்த் தேசியத்தின் விழிப்பின் தேவையை உணர்ந்தார் ஆனால் அந்த விழிப்பானது வழமைபோல் உணர்ச்சிகளின் துடிப்பாகத் தோன்றி மடியாது அறிவுசார் வழியில் செல்ல வேண்டுமென்ற காரணத்தினால் தமிழ்த்தேசியத்தின் உருவாக்கல் காரணிகள் பற்றி ஆழமான பல நூல்களை எழுதினார்.
யாழ்ப்பாணம் என்னும் சொல்லாட்சியில் உள்ள சமுக பொருளாதார அரசியல் தான்மைகள் குறித்த ஒரு தேடல் அவருடைய ஆய்வுகளில் முக்கியமானது. யாழ்ப்பாண அரசு என்பது வெறுமனே யாழ்ப்பாணப் பகுதிக்கான அரசாகத் திகழவில்லை வடக்கு கிழக்குத் தமிழர் தாயகம் முழுமைக்குமான சமுகபொருளாதார அரசியல் மேலாண்மைக் கட்டுமானமாகவும் விளங்கியது. இந்த உண்மையின் அடிப்படையில் தமிழர்களின் சமுக பொருளாதார அரசியல் கட்டமைப்புக்களின் உருவாக்கல் குறித்து ஆழமாகப் பார்க்கும் அறிவாக அவரின் பார்வைகள் அமைந்தன. சுருக்கமாகச் சொன்னால் தமிழருடைய மிகப் பெரிய கொடிய நோயாகிய சாதியத்தின் குணங்குறிகளை மட்டுமல்லாது இந்நோய்க்கான கிருமிகளின் வகைகளையும் தன்மைகளையும் கண்டறிந்து இதனை வேரோடு களையும் கடும் முயற்சியில் அவர் செயற்பட்டார்.
தமிழகத்திற்கும் அவருக்கும் இடையிலான உறவு வெறுமனே கலைசார் கலாச்சாரம் சார் வழியாக வளராது தமிழக தாயக மார்க்சிய சிந்தனையாளர்களின் இடையான இறுக்கமான பிணைப்பாகப் பரிணமித்தது. பேராசிரியர் வானமாமலை இவருக்கும் பேராசிரியர் கைலாசபதி அவர்களுக்கும் இடையிலான சித்தாந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததில் இவர்களின் தமிழகத் தாயக அறிஞர் மட்ட உறவு ஆரம்பமாகியது. ஆயினும் இந்தத் தொடர்பு தமிழகத்திலே வாழ்ந்த வாழ்கின்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் படைப்பாளிகள் இடதுசார்க்கட்சித் தோழர்கள் அடிமட்டத் தொண்டர்கள் கலை இலக்கிய அரசியல் சஞ்சிகைகள் ஊடகங்கள் என்று அனைத்து மட்டங்களிலும் விரிந்தது. இந்த விரிவுக்கு ஊடாகவே பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் திராவிட இயக்கங்கள் குறித்த எழுத்துக்களும் இணைப்புக்களும் அமைந்தன.

இலங்கையில் தமிழரசுக் கட்சி வழியானத் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வழியான திராவிடத் தேசியத்திற்கும் இடையிலான பொதுமைகளையும் வித்தியாசங்களையும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுத்துக்கள் ஊடுருவிப் பார்த்தன. தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரென அஞ்சி இந்திய அரசால் மேடையில் பேசவிடாது தடுக்கப்பட்டு கைதாக்கி நாடுகடத்தப்பட்டமை தமிழகத்தில் புலமைசார் புத்திஜீவிகள் மட்டத்தில் ஏற்படுத்தரிய தாக்கமே இவரை அனைத்துலகச் செம்மொழி மகாநாட்டிற்கான ஆய்வரங்கத் தலைவராக நியமித்து பரிகாரம் தேடும் செயலைச் செய்ய வைத்தது.
தமிழில் நாடகம் குறித்த தனது ஆய்வுகளால் தன்னை ஆய்வாளராக உலகிற்கு இனங்காட்டிய பேராசிரியரி சிவத்தம்பி அவர்கள் சிறுகதை வளர்ச்சி குறித்த ஆழமான தேடலைக் கொண்டவராக வாழ்ந்தார். சிறுகதை என்பதே சாதாரணத் தமிழ் மக்களிடை தாக்கம் மிகு புனைகதையாகத் திகழ்ந்தது. பின்னர் ஒளித்துறை வளர்ச்சி சினிமாவை மக்கள் முதன்மைப் பொழுதுபோக்காக மாற்றிய பொழுது தமிழ் சினிமா குறித்த அழமான பார்வையினை வளர்த்தார். தொடர்ந்து கணினி வழித் தமிழ் மக்கள் தொடர்பாடலில் கணிசமான பங்கினை வகிக்கத் தொடங்கிய பொழுது “ திரள்நிலை” எனப்படும் மாஸ்மீடியாவில் உள்ளடக்கப்படும் அத்தனை விடயங்களைக் குறித்தும் அவற்றின் சமுகவியல் தன்மைகள் குறித்தும் ஆராய்வதில் கடைசிக் காலம் வரை அயராது உழைத்தவர் பேராசிரியர் அவர்கள் .
சுருக்கமாகச் சொன்னால் மக்களுக்குரியன அனைத்திலும் அறிவுப்பார்வையைப் பதித்தவர் - அறிவுப்பார்வையைப் பதிக்க வேண்டுமெனப் படிப்பித்தவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி.; இவரின் மிக முக்கியமான போற்றப்படும் அம்சம் என்னவென்றால் மானிடம் வளம் பெற வாழ்வதற்கே வாழ்ந்தார் என்கின்ற விடயம். தலையால் சிந்திக்க வேண்டும் நெஞ்சால் பேச வேண்டும் என்ற கொள்கை உள்ளவர். தலை சிந்திப்பதற்கு உரியது. நெஞ்சு அன்பு செய்வதற்கு உரியது. எவரையும் அவர் எந்த மாற்றுக் கருத்துள்ளவர்களையும் மனிதராக மதித்தார். அன்பாகப் பேசிப் பண்பாகப் பழகினார் கோபித்தது உண்டு ஆனால் நான் அறிந்த வரையில் பழிவாங்கியத இல்லை. அறிவின் வழி தன்வழி, அன்பின் வழி வாழ் வழி என்ற தத்துவத்தை உணர்த்திய அன்பான அறிஞர். அவரை அகிலம் உள்ளவரை மானுடம் பாடிய மகத்தான மனிதனென மானிடம் போற்றி நிற்கும்.
- சூ.யோ.பற்றிமாகர


No comments:
Post a Comment