Thursday, 7 July 2011

கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்: மார்க்சிஸ்ட் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், 

இடதுசாரி சிந்தனையாளரும், முற்போக்கு தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய விமர்சகருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி (79) இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜூலை 6 ஆம் தேதி காலமானார். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி  செலுத்துகிறது. 

கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் மார்க்சிய நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர். தனது ஆய்வுக் கட்டுரைகளின் மூலமாக பழந்தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் உழைப்பாளி வர்க்கத்தின் பங்களிப்பை வெளிக் கொணர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனின் மாணவராவார். உலக அளவிலான தமிழியல் ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் பயணிப்பதற்கான முற்போக்கு திசைவழியை அமைத்துக் கொடுத்தவர். 70க்கும் மேற்பட்ட புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் தமிழ் இலக்கியத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் அருங்கொடைகளாகும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.

தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு தமிழ்நாடு அரசு திரு.வி.க.விருது வழங்கி கவுரவித்தது. சென்னைப்பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியராக சென்று வந்துள்ளார்.

அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment