Thursday, 7 July 2011

எவராலும் நிரப்ப இயலாத ஓர் இடத்தை வெறுமையாக்கிவிட்டு பேராசிரியர் சென்று விட்டார்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 07.07.2011 - வியாழக்கிழமை

தமிழின் செழுமைக்கும் அதன் பல்துறைச் சார்ந்த காத்திரமான வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருந்து உழைத்த பெருந்தகை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களது மறைவு தமிழுக்கும் உலகளாவிய தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் மறைவு குறித்து அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி அவர்களது மறைவு கேட்டு பெரிதும் கவலையடைந்துள்ளேன். அன்னாரது இழப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். பேராசிரியர் அமரர் கைலாசபதி அவர்களது காலத்தில் தமிழ் கலை இலக்கியத் திறனாய்வுத் துறையில் சம பங்களிப்பினை நல்கி வந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பேராசிரியர் கைலாசபதி அவர்களது மறைவுக்குப் பின் தனித்து நின்ற ஒருவராக அப்பணியை செவ்வனே முன்னெடுத்து வந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

மார்க்ஸீய சிந்தனையினை உள்வாங்கிக் கொண்டவராயினும் தனது சுயசிந்தனைத் திறனின் உதவியுடன் சிறந்த தேடல்களைக் கொண்ட உயரிய வெளிப்பாடுகளான பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது திறனாய்வுகள் தமிழின் வளர்ச்சிக்கும் அதனூடாக பிறமொழிகளின் தேடல்களினூடான வளர்ச்சிக்கும் வழங்கியுள்ள பங்களிப்புக்கள் ஏராளம்.

எந்தத் தலைமுறையையும் மதித்து, வரவேற்கும் போக்கும், அன்பாகப் பழகும் விதமும் குழந்தை மனமும் கொண்ட பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எமது தமிழர் போராட்டம் ஆரம்பித்த காலம் முதலே என்னுடன் தனிப்பட்ட முறையில் நெருங்கிய தொடர்பினைப் பேணி வந்தவர். பல்வேறு விடயங்கள் தொடர்பில் அடிக்கடி நான் அவரிடம் கலந்துரையாடுவதுண்டு. அந்த வகையில் அன்னாரது இழப்பு எனக்கு பேரிழப்பாகும்.

எவராலும் நிரப்ப இயலாத ஓர் இடத்தை வெறுமையாக்கி விட்டு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ் உலகை விட்டும் இந்த உலகை விட்டும் விடைபெற்றுக் கொண்டார் எனும் போது வேதனையே மிஞ்சுகின்றது.

தாங்கிக் கொள்ள இயலாத இந்த இழப்பால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்ப உறவுகளுடனும் அவரை ஆசானாகக் கொண்ட கல்விச் சமூகத்துடனும் அவரை வழிகாட்டியாகக் கண்ட கலை இலக்கிய நண்பர்களுடனும் உலகளாவிய தமிழர்களுடனும் நானும் எனது கட்சியினரும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment