Friday, 8 July 2011

என் அன்புக்குரிய பேராசிரியர் கா.சிவத்தம்பி இன்று காலமாய் ஆனார் :(

06 ஜூலை 2011, 07:40 க்கு Thiru Thirukkumaranஆல்
நான் உலகைப் புரிந்து கொள்ள முயன்று மனமுடைந்திருந்த நாட்களில் எல்லாம் நீங்கள் எனக்கு ஆறுதலான வார்த்தைகளாக இருந்தீர்கள், என்னுடைய தனிப்பட்ட வாழ்வின் பிரச்சனைகளைக் கூட உங்களுடன் தான் பகிர்ந்து கொள்வேன், பல்லாயிரம் மைல் தாண்டி வந்த பின்னரும் கூட கிழமைக்கு ஒரு தடவையாவது காலையில் உங்களை எழுப்பி பேசி விட்டுத்தான் நான் தூங்கப் போவேன். இனி ஒரு முறை உங்கள் எண்ணுக்கு அழைப்பை எடுத்தால் ”ஒண்டுக்கும் யோசிக்காதை,தோணி எல்லாம் போய் விடும் துறை இருக்கும், நீ நல்லா இருப்பாயடா” என்று மனத்தால் பேச இனி நீங்கள் அங்கு இல்லை. என் திருமணத்துக்கு வரும் உடல்நிலை அன்று உங்களுக்கு இருக்கவில்லை என்பதால் உங்கள் குடும்பத்தாரை அனுப்பி இருந்தீர்கள், தாலி கட்டியவுடன் முதன் முதலில் எங்கள் விட்டுக்குத்தான் கால் மாற வேண்டும் என்ற சடங்கை எல்லாம் எறிந்து விட்டு நேரே உங்கள் விட்டுக்குத் தான் நாம் வந்தோம்.  புலமை, கருத்து நிலை என்பதை எல்லாம் தாண்டி உங்களில் எனக்கு ஏனோ அப்படி ஒரு விருப்பம்.வளநாடன் என்ற தோழரின் தந்தை காலமானதற்கு நானும், புதுவை அண்ணரும் எழுதிய கவிதையை வாசித்து விட்டு இறந்த பின் நீங்கள் எனக்கு என்ன எழுதினாலும் என்னால் வாசிக்க முடியாது ஆகையால் பின்னர் எழுதுவதை இப்போதே நீங்கள் எழுதித் தர வேண்டும். என்று ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்தீர்கள், உங்களது அன்பான அடம்பிடித்தலால் அன்றைய நாட்களிலேயே நாங்கள் அதை எழுதித் தந்திருந்தோம். கடைசியாக உங்களுடன் பேசும் போது கூட புதுவை அண்ணர் பற்றிய பேச்சு வந்த பொழுது அந்தக் கவிதைகளை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். உங்கள் இறுதிக் காலங்களில் ஒரு குழந்தை போலவே எதற்கும் நெகிழ்துருகுபவராய் ஆகி இருந்தீர்கள். இனி எப்போதாவது நான் நாட்டுக்கு திரும்பி வர நேர்ந்தால் ஆசையோடு வந்து பார்க்க நீங்கள் அங்கு இருக்க மாட்டீர்கள். மொழி தொடர்பான விடயங்களில் எனக்கு என்ன சந்தேகம் ஏற்பட்டாலும் உடனே அழைப்பை எடுத்து கேட்டால் மிகவும் பொறுமையாக ஆதியில் இருந்து அந்தம் வரை அதற்கான முழு விளக்கத்தையும் தருவதற்கு உங்களின் பின் எனக்கு இனி யாருமே இல்லை. மனதார நேசிப்பவர்களின் இறுதி மரியாதைக்குக் கூட எம்மால் போக முடியாத வாழ்வு எமக்கு வழங்கப் பட்டிருக்கின்றது என்பதை நினைக்கும் போது இனியும் வாழ்ந்து தான் என்ன என மனசு வெறுக்கிறது. Sir!- உங்களது இழப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் யாராலும் ஈடு செய்ய முடியாதது. என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் நீங்கள் இல்லாத அந்த இடைவெளியை நிரப்பக்கூடிய ஒருவரை நிச்சயமாக இனி நான் சந்திக்கப் போவதில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கின்ற என்னால், உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி குமைந்தழுவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும். என்னுடைய வாழ்க்கைக் காலத்தில்  இனி ஒருபோதும்  உங்களைச் சந்திக்கவோ பேசவோ முடியாது என்பதை நினைக்கும் போது நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும் இருக்கிறது.  உங்களது ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கிறேன்

No comments:

Post a Comment