பண்டைத் தமிழ் அரங்கு... பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வகிபாகம் - மு.இராமசுவாமி
1953-57களில் பேராதனைப் பல்கலைக்கழக நாடகங்களில், வானொலி நாடகங்களில் நடித்து வந்தவரும், 1956-57களில் இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ்நாடகக் குழுவின் செயலாளராயும், 1974-77 களில் அத்தமிழ்க் கலைக்குழுவின் தலைவராயும், 1976-78களில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையின் நாடகவியல் பட்டயப்படிப்பிற் கான ஒருங்கமைப்பாளர்களில் ஒருவராயும், 1984 முதல் யாழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராயும், நுண்கலைத்துறைத் தலைவராயும், எல்லாவற்றிற்கும் மேல் தமிழ்நாடக வரலாற்றையே கலாநிதி பட்டத்திற்கான பிரதான ஆய்வுத்துறை யாகக் கொண்டவருமான (மௌனகுரு, நாடகம் அரங்கியல் பழையதும் புதியதும்; 1992; பக். xiii-xiv) கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களின் வகிபாகத்தைப் ‘பண்டைத் தமிழ் அரங்கம்’ ஊடாகப் பார்க்குமுன், நான் எனக்குள்ளே முப்பத்தாறு ஆண்டுகள் பின்னோக்கிப் போய்வர வேண்டியதிருக்கிறது, ஒரு ஊதாரி மைந்தன் பாவசங்கீர்த்தன ஒப்புறவு பெற்ற கதையைப்போல!
கலாநிதி கா. சிவத்தம்பி, பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ‘Drama in Ancient Tamil Society’ என்ற கலாநிதிப் பட்ட ஆய்வேட்டை 1969இல் சமர்ப்பித்த வேளையிலும் 1970இல் அவர் கலாநிதிப் பட்டம் பெறுகிற வேளையிலும் நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளஅறிவியல் பயின்று கொண்டிருந்த ஒரு மாணவன்! அந்தப் பருவத்தில் அக்கறையோடு என்னுடன் கலந்துசாவி எனக்கு இடதுசாரிச் சாளரங்களைத் திறந்து காட்டிய சிலருள் முதலாமவர், என் அப்போதைய தமிழாசிரியர் முனைவர் கார்லோஸ்! திராவிட இயக்க வழக் காறுகளில் ஜீவித்துக்கொண்டிருந்த என்னைப் பொதுவுடைமை வழக்காறுகளில் திசைகாட்டித் திருப்பிவிட்ட ஒரு கைகாட்டி அவர்! இன்னொருவர் முதுகலையில் என் வகுப்புத் தோழனாயமைந்து போன முனைவர் தெய்வசுந்தரம்! எனக்கு வகுப் பெடுத்த என் ஆசிரியர்களே சரிவர அறிந்திராத ‘கொம்யூனிஸ்ட்’ ஆசிரியர்களான ‘அடியும் முடியும்’ தந்த விமர்சகர் கலாநிதி கைலாசபதியையும், ‘தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ தந்த கலாநிதி சிவத்தம்பியையும், படைப்பிலக்கியவாதி யான ‘செவ்வானம்’ கணேசலிங்கனையும் என் வகுப்பறைச் சுவர்களே பெருமூச்சு விடுமளவு பேசித் தீர்த்தவன் ‘அவன்’! அந்த வெப்பக்காற்றை அந்த வயதில் தயக்கத்தோடே சுவாசித்து.... சுவாசித்து... எதுவொன்றையும் சமூக நிறுவனமாகப் பார்க்கும் அவர்களின் இயங்கியல் அணுகுமுறையில் மயங்கி எனக்குள்ளும் புது இரத்தம் பாய்ச்சிக் கொண்டவன் நான்!
அது 1973 (அ) 1973! கலாநிதி சிவத்தம்பியையும் அவருடைய குடும்பத்தாரையும் தெய்வசுந்தரமும் நானும் நெல்லையப்பர் கோயிலைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றிருந்தோம். பூசாரி கொடுத்த திருநீறை அவர் பூசிக்கொண்ட போது, 1982இல் தஞ்சையில் அவரைப்பார்த்து, ‘என்ன பெரிய மார்க்ஸிய ஸ்ரண்ட் எல்லாம் பேசுகிறீர்கள். நீங்கள் எல்லாவற்றிற்கும் ‘முருகா’ என்கிறீர்களே’ என்று திரு.பொ.வேலுசாமி கேட்டதுபோல் (பேராசிரியர் கா. சிவத்தம்பி நேர்காணல், ஞானம் (37), ஜுன் 2003; பக்.14) நானும் பச்சைக் குழந்தை போல மனசில் எதையும் பூட்டி வைக்கத் தெரியாமல் ‘திருநீறு பூசுறீங்க....’ என்று அவரைக் கேட்கிறேன். ‘வேர்களிலிருந்து அறுந்தவர்களாக இருக்க முடியாது’ (மேலது) என்பது போலவே, ‘கருத்து வேறுபாடு இருப்பினும் மரியாதையை மதிக்கத் தெரியவேண்டும்’ என்று எந்த விகற்பமின்றி அவர் சொன்ன பதிலின் பொருள் அப்போதைக்கு எனக்கு உவப்பாயில்லா திருந்தது. ஆயின் வெள்ளேந்தியாக உடம்பு முழுக்கப் பிரியத்தை அள்ளித் தெளிக்கிற அவரின் அறிவுசால் உடல்மொழி அப்போதைக்கு எனக்குப் பிடித்துப் போயிருந்தது. அவரின் ஆய்வு, நாடக வரலாறு பற்றியது என்கிற தகவல்கூட, லேசுபாசாகக் கூட அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. என் ஈர்ப்பும் நாடகத் திசை நோக்கியே அமைந்து போகும் என்கிற திசைமுகமும் எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை!
அதன்பின் சனவரி 1981! மதுரையில் அய்ந் தாவது உலகத்தமிழ் மாநாடு! முதல் நாள் பொது அமர்வு! கலாநிதி சிவத்தம்பி, வழக்கறிஞர் சிதம்பரம் அமர்ந்திருந்த திசையில் அவர்களுடன் நானும்! மாநாட்டுக் கருத்தரங்க நடவடிக்கையில், திரை நடிகரும், அன்றைய முதல்வருமாயிருந்த எம்.ஜி.ஆர் பற்றிய தன் கட்டுரை தள்ளிவைக்கப்பெற்ற தகவலை மிகுந்த ஆதங்கத்துடன் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கலாநிதி சிவத்தம்பி! மேடையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர் பெரியவர் வ.சுப்பையா பிள்ளை, ‘கட்டுரைகள் எதுவும் முகம் பார்த்துத் தேர்வு செய்யப்படவில்லை; அதன் தரம் பார்த்தே தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன’ என்று சொன்னபோது, ‘இல்லை; பொய் சொல்கிறீர்கள்... இவரின் கட்டுரையை யாரின் முகவரியைக் காக்க நீக்கினீர்கள்?’ என்று ஒற்றை மனிதனாய் நீண்ட அரங்கில் எழுந்துநின்று நான் குரல் எழுப்புகையில், ஒரு விநாடி அசாதாரண அமைதி அங்கு எழ, என்கை பிடித்து அமர்த்தி, ‘இது மாதிரியான கூட்டத்தில் பேசுகிற விசயமல்ல இது’ என்று உரிமையுடன் சொன்னதன் உள்ளர்த்தமும் அப் பொழுது எனக்குப் புரியவில்லை. எல்லாமே அந்தப் பெரிய அரங்கில் ஒரு சிறு நாடகக் காட்சி போல் அத்தனை சுருக்கமாக முடிந்துவிட்டன.
அந்த ஆண்டு டிசம்பரில்தான் நியுசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியீடாக ‘Drama in Ancient Tamil Society’யும் மாநாட்டில் நீக்கப் பெற்ற கட்டுரையும் நூல்களாக வெளிவந்திருந்தன. அரசியல் காரணமாய் நீக்கப்பெற்ற கட்டுரை சிறுநூலானது தெரிந்த அளவு, நூலுக்காக மாற்றுருவாக்கம் செய்யப் பெற்ற அவரின் பிரதான ஆய்வேடு அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் 1978இல் நான் முனைவர் பட்டம் பெற்றபின், வாசிப்பை விடவும் ஆற்றுகைகளில் நான் அதிகம் ஆழ்ந்து போயிருந்ததாலும், வரலாற்றைவிடவும் நடிப்புக் கோட்பாட்டு வாசிப்புகளில் நான் ஆழ்ந்து போயிருந்ததாலும் இருக்கலாம்!
1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறையாளனாக நான் அவரைச் சந்தித்துக் கொண்ட போதும், எவருடனும் ஒட்டாத அன்றைய என் மனநிலை காரணமாக எதுவொன்றும் என் மனத்தில் அழுத்தமாய்த் தங்கி இருக்கவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு இதழான Tamil Civilization முதல் இதழில் தமிழ்ப்பல்கலைக்கழக நாடகத் துறையின் முதல் பேராசிரியர் திரு. இராமராசன் அவர்கள் ‘Drama in Ancient Tamil Society’ நூலுக்கு எழுதியிருந்த விமர்சனமும் கூட அப்பொழுது என் சிற்றறிவைத் தொட்டிருக்கவில்லை. 1995இல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது, அதில் கலந்துகொள்ள வந்திருந்த கலாநிதி சிவத்தம்பி, கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இம்மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘திரஜெடி’ யின் பிற்பாடு தான் அந்நூலை வாசிக்கும் வாய்ப்பு வந்தது.
1997இல் என் துணைவியார் முனைவர் செண்பகம், துளுமொழியிலமைந்த ஒரு நாடகம் (அ) திரைப்படத்தைத் தில்லி தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அது அப்படியே நம் சங்க இலக்கியப் பாடலை நினைவிற்குக் கொண்டுவருகிறது என்றும் நம் சங்கப்பாடல்களை அதுமாதிரியே சிறுசிறு நாடகங்களாகப் போடமுடியும் என்றும் ஒரு வேளை சங்க காலத்தில் நாடகம் அது மாதிரியாகத் தான் நிகழ்ந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை என்றும் என்னிடம் விவாதித்துக் கொண்டிருக் கையில் பேச்சு அப்படியே கலாநிதி சிவத்தம்பியின் ‘Drama in Ancient Tamil Society’ பற்றிச் சென்றதாக நினைவு. அந்தக் காலத்தில் என் செண்பகத்தின் ‘கிரேக்க லிரிக் கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் ஒப்பீடு’ நூல் உருவாக்கத்தில் நான் உதவிக் கொண்டிருந்தபோது அதில் குறிப்பிட்டு இருந்த கலாநிதி சிவத்தம்பியின் ‘தொன்மைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்கிற குறிப்பு மீண்டும் அந்நூலைப் படிக்க என்னை ஞாபகப்படுத்தியது.
அக்டோபர் 1986 இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சே. இராமானுஜம் பொறுப்பில் நிகழ்ந்த கல்லூரி ஆசிரியர்களுக்கான நாடகப் பயிலரங்கில் கலந்து கொண்டோர்க்கு நூல்களைத் தேர்வு செய்து வழங்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தது. வழங்கிய நூல்களுள் இதுவும் ஒன்றாக இருந்தபோது, அது என் இருப்பிலும் தானே சேர்ந்துகொண்டிருந்தது. அமரிக்கையாய் என் நூலாக அலமாரியில் அமர்ந்திருந்த அந்த நூலை, அப்பொழுதுதான் எடுத்துப் புரட்டும் சந்தர்ப்பம் வந்தது. காலநேரம் அப்பொழுதுதான் கூடி வந்திருந்தது. 1981இல் வெளிவந்த நூலைப் புரட்டிப்பார்க்க 16ஆண்டுகள் நான் காத்திருக்க வேண்டியிருந்ததைப் போலவே, என் செண்பகத்தின் ஆசையையும் இன்னும் என்னால் செயல்படுத்த முடியவில்லை. அதற்கான காலநேரம் இன்னமும் வரவில்லை. ஆனால் அந்தப் பணியைத் தோழர் இன்குலாப் அவர்கள் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு சங்க காலத்தைத் தன் பார்வையில் நாடகமாக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரக் கூடியது.
என்துறை சார்ந்த நூலாயிருந்தும், நூல் வெளி வந்தது 16ஆண்டுகள் கழித்துதான் அந்நூலைப் புரட்டினேன் என்று சொல்வது கொஞ்சம் வெட்கக் கேடானதுதான்! இப்பொழுது பகிரங்கப்படுத்தா விட்டால் அது மனசொடு கிளத்தலாகவே போய் முடிந்திருக்கும்! இப்பொழுது 2005இல் ‘Drama in Ancient Tamil Society’ நூலின் தமிழ்ப்பதிப்பு ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்று குமரன் புத்தக நிறுவனத்தால் வெளிவந்திருக்கிறது. அந்நூலின் முன்னுரையில் ‘தமிழ்நாடக வரலாறு பற்றிய குறிப்புகள் இந்நூல் பற்றி வந்த புலமைச் சஞ்சிகை களின் மதிப்புரைகளில் பேசப்பட்டதே தவிர, தமிழில் நாடக வரலாறு பற்றி ஈடுபட்டுள்ளோர் மத்தியில் அதிகக் கவனம் பெறப்படவில்லை. இந் நிலைக்கு ஓரளவேணும், புறநடையாக விளங்கியவர் பேராசிரியர் ஏ.என். பெருமாள் அவர்கள்’(பக். ஒஎ) என்றும் ‘தமிழ்நாடக ஆய்வாளர்களிடையே அல்லது நாடக வரலாற்றாசிரியர்களிடையே இந்நூல் கணக்கில் கொள்ளப்பட்ட’ தென்று கூற முடியாது..... அங்கும் மிகச் சிலரே இந்நூலில் வரும் நாடக அம்சங்கள் பற்றிச் சிரத்தை காட்டினர்’ (பக். ஒஎi) என்றும் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டிருப்பதுதான் இந்தப் பாவ சங்கீர்த்தன ஒப்புறவிற்கான ஒரே காரணம்! அதற்கான ஆயத்தங்களை அப்பொழுதே நான் வளர்த்துக் கொண்டிருக்கைவில்லையே என்கிற வேதனையின் வெளிப்பாடு இது! நேரம் உண்மையில் இப் பொழுதுதான் கூடிவந்திருக்கிறது. அதற்கான பிராயச்சித்தமே இக்கட்டுரை!
‘Drama in Ancient Tamil Society’ என்னும் தலைப்பில் அவர் ஆய்வு செய்து 35 ஆண்டுகள் முழுதாக ஓடிய பின்பும், ஆங்கிலத்தில் அது நூலாக வெளிவந்து 24 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னமும் அவர் குறிப்பிடுவது மாதிரியே ‘தமிழ் நாடகம் பற்றிய ஆய்வுகள் பெரும்பாலும் நாடக நிலைநின்று ஆய்வு செய்வனவாக உள்ளதேயன்றி, நாடகத்தைச் சமூக நிறுவனமாகப் பார்க்கும் கண்ணோட்டத்தில், அத்தகைய, கூறாமல் விட்டுவிட முடியாத அளவிற்கு முக்கியமான ஆய்வுகள் எதுவும் வரவில்லை என்றே கூற வேண்டும்’ (பக். xxxv). இது அந்த நூலின் பலமா அல்லது தமிழ்க் கல்விச் சூழலின் பலவீனமா என்பதை அவசியம் கண்டுணர வேண்டியதிருக்கிறது. ஒருவேளை நூல் தமிழில் வந்திருக்கிற நிலையில் கணிசமான கருத்தாடல்களுக்கு உட்படும் வாய்ப்பு உண்டு என்று நம்பலாம்.
‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்பதை விடவும் ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரங்கியல்’ என்பது மிக வசதியான உருவாக்கி யிருக்கும் மனப்படிப்பிற்கு ஒத்ததான - ஒரு தலைப்பாக இருந்திருக்கக்கூடும்! ஆனால் ‘ஆராய்ச்சி என்பது நிரந்தரப் புலமைத் தேடல்..... செய்யும் வேலை கூடக்கூட அந்த அவா கூடிக்கொண்டே போகும்..... ஒரு நூலுக்கோ அல்லது ஒரு கட்டுரைக்கோ தரவுகள் சேர்க்கப்படுவதுடன் அது நின்றுவிடுவ தில்லை (பேராசிரியர் சிவத்தம்பி நேர்காணல், ஞானம் (40), செப்டம்பர் 2003; பக்.19). செய்யும் வேலை கூடக்கூட அவா கூடிக்கொண்டே போகின்ற ‘மகுடி ஆட்டச் சவால்’ இந்தத் தலைப்பில்தான் இருக்கிறது. கலாநிதி சிவத்தம்பி விவாதிக்க எடுத்துக் கொண்டிருக்கும் இலக்கிய வரலாற்றுக்கால எல்லைக்குள்ளே, ‘நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன்இயம் கடுப்பக் கயிறு பிணித்து’ (பெ.பா.ப.55-56), ‘பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்’, (பட்டினப்பாலை, 113) போன்ற நாடகம் சார்ந்த சொல் வழக்குகள் பயின்று வந்திருப்பதாலும், இதில் வரும் ‘நாடகம்’ என்னும் சொல் நடனத்தைக் குறிப்பதாக இருந்தபோதும், ‘நாடகம்’ என்று குறிப்பிடுவதில் தவறு ஒன்று மில்லை என்றேபடுகிறது. உண்மையில், தமிழ் நாடகம் தமிழகத்தின் மிகப்பெரிய கலைவடிவமாக முகிழ்க்காது போனமைக்கான காரணத்தையே இந்த ஆய்வு மேற்கொண்டிருக்கிறது என்று கூறுவதே சரியாயிருக்கும்!
பண்டைக் காலத் தமிழரின் நடன, நாடகக் கலை மரபுகளின் முக்கியத்துவம் பற்றி, தமிழறிஞர்கள் பலர் அழுத்திக் கூறியுள்ளரெனினும் கி.மு.க்களில் நிகழ்ந்த கிரேக்க நாடகப் பதிவுகளைப் போல அத்தனை துல்லியமான பதிவுகள் எவையும் நம்மிடம் கிடையாது. மத்திய கால உரையாசிரியர்களால் குறிப்பிடப்பட்ட, மறைந்துபோன நூல்களைத் தவிர நம்மை நிரூபிக்க நம்மிடம் வேறு எதுவும் இல்லை. கிடைக்கின்ற சான்றுகளிலிருந்தும் சில குறிப்பிட்ட தகவல்களையே பெற முடிகிறது. இந்நிலையில் நாடகம் என்பது சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்ட
ஒரு சமூகப் பண்பாட்டு நிகழ்வாக ஆராயப்பட வேண்டும் என்பதால் நாடகத்தின் தோற்றம் பற்றிய கொள்கைகள் இவருக்குத் தேவைப்படு கின்றன. அதற்கான கொழுகொம்பாக அமைந்தது, கிரேக்க நாடகங்களின் தோற்றம், அவர்களின் மதநம்பிக்கையின் தளமாக அமைந்த சடங்குகளின் ஊடாகவே நிகழ்ந்தது என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிற கொள்கையாகும். இதற்கான முறை இயலாக, பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சனின் தயோனிசியஸ் வழிபாட்டில் இடம்பெற்ற ‘டிதிறாம்ப்’ என்னும் பாடல் ஈஸ்கிலஸின் நாடகவாக்கக் கட்டத்துக்கு வரும்பொழுது பெறும் மாற்றங் களுக்கான வரலாற்று இயங்கியல் பொருள் முதல் வாதஅணுகுமுறையாகும். அம்முறையைச் சரியாக உபயோகிப்பதற்குக் கிரேக்க நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியைப் பூர்வாங்கமாக எடுத்துக் கூறி, அதன் பின்னர் தமிழில் கிடைக்கக்கூடிய சான்றுகளை மதிப்பிடுவதும், எடுத்துக்கொள்ளப் பட்ட காலத்துக்குரிய தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றியதொரு பருவரைவுச் சட்டகத்தைத் தருவதும் அவசியமாகின்றன. கிரேக்க நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியின் தேவையின்றியுமேகூட, தமிழ்நாடகத்தின் சமூக வரலாற்றுப் பின்னணியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட முடியும். தமிழ் நாடகத்தைக் கொண்டு நிறுவுகிற முதல் தேவை யிருக்கிறபடியால், அதை ஒப்புமையாக்கம் என்னும் ஆய்வு முறையியலின் வழி நிறுவ முயலும் அறிவியல் பண்பு இங்குக் காணப்படுகிறது. அது உவப்பைத் தரக்கூடியது. இவ்வாறு ஆய்வு முறைமையைத் தீர்மானித்த பிறகு கி.பி.600 வரையிலான காலத்துத் தமிழ்க்கூத்து நிலை வளர்ச்சிகளை இனங்காணுவதாக அமைகிறது இவ்ஆய்வு!
‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்னும் இவ்ஆய்வு பத்து இயல் பகுப்புகளைக் கொண்டிருக்கிறது. அவையாவன
1. ஆய்வுப் பிரச்சினைகளும் முறைமையும்
2. கிரேக்க நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
3. ஆய்வு மூலங்கள்
4. ஆய்வுக்குரிய காலத்துத் தமிழகச் சமூக வரலாறு : பின்புலக் கட்டமைப்பு
5. வீரயுகத்தில் நடனமும் நாடகமும்
6. நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும்
7. வணிக மேலாண்மைக் காலத்தில் நடனமும் நாடகமும்
8. நடன நாடக வடிவங்களின் இயல்பும் தொடர்ச்சியும்
9. கிரேக்கத்திலும் தமிழ்நாட்டிலும் நாடகக் கலை நெறி முறைகள் பற்றிய நோக்கு.
10. தோற்றம் வளர்ச்சியில் தொழிற்பட்ட காரணிகள்
என்பவையாகும்.
கிரேக்க இலக்கியத்தின் பிரதான செய்யுள் வடிவங்கள் அவை முதிர்வுற்ற கால அமைப்பின் படி காப்பியம், தன்னுணர்ச்சிப் பாடல், நாடகம் எனப்படும். கி.மு. 1600-800 வரை காணப்பட்ட காலம் கிரேக்கத்தின் வீரயுகம் எனப்படும். வீரயுகம் மன்னராட்சியின் வெற்றியையும் வீழ்ச்சியையும் கொண்டது. காப்பியம் மன்னராட்சியுடன் வளர்ச்சி பெற்று மன்னராட்சியுடனேயே தானும் வீழ்ந்து விடுகிறது. கிரேக்க இலக்கியத்திற்கு நிலப்பிரபுத்துவ யுகத்தின் பங்களிப்பு தன்னுணர்ச்சிப் பாடல்கள் ஆகும். அடுத்து, தெளிவாகக் காணத்தக்க கிரேக்க வரலாற்றுக் காலகட்டம் வல்லாட்சியுகம் (Tyrants). கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பிரபுத்துவ ஆட்சியின் வீழ்ச்சியுடன் நடுத்தர, வணிக வர்க்கக் குடிமக்களின் அரசியல் எழுச்சிக்கு வித்திட்ட காலம் இது! இக் காலத்தில் நாடக வடிவங்களில் ஒன்றான ‘திரஜெடி’ கலை வடிவமாக மேற்கிளம்பியது. கிரேக்கக் கடவுள் தயோனிசிய விழாவின் பல நிகழ்ச்சிகளுள் ‘திரஜெடி’யும் ஒன்று! பின் ‘திரஜெடி’ கலை வடிவத்தின் வரலாற்றில் தயோனிசியஸ் பண்பு படிப்படியாகக் கைவிடப்பட்டது. சடங்கு, சமயச் சார்பற்றதாக மாறியதை இது காட்டுகிறது. இவ் விவரங்கள் நாடக வளர்ச்சிக் காரணிகளாக
அமைகின்றனவே தவிர, நாடகத்தைப் பற்றி, உதாரணமாக அதன் கட்டமைப்பு, ஆற்றுகை போன்ற விடயங்களைப் பற்றிக் கூறவில்லை. ‘திரஜெடி’ தயோனிசியஸைக் கௌரவிக்க எழுந்த ‘டிதிறாம்’பிலிருந்து தோன்றியதெனில் அதன் கருப்பொருள் தயோனிசியத்தன்மை வாய்ந்ததாக அல்லாது வீரயுகத்து ஐதீகங்களை ஏன் கொண்டிருக்க வேண்டுமென்பதற்கு விளக்கம் கூறுவது கடினம். ‘திரஜெடி’க்குப் பின்பு ‘கொமேடி’ (மகிழ்நெறி நாடகம்) தோன்றியது. கிரேக்க நாடகம் தூய அதீனிய வளர்ச்சியாகவே தென்படுகிறது. எனவே கிரேக்கத்தின் மற்ற அரசுகளில் நாடகம் வளர்ச்சி பெறவில்லையோ என்ற கேள்வி எழுவதும் இயற்கை! இந்த வகையில் தமிழ்நாடகத்திற்கான சடங்கு மூலங்களைத் தேடி நகர்கிறது இவ்ஆய்வு.
முதலில், கி.பி. 600 வரையிலான தமிழ் இலக்கியச் சான்றுகளை இலக்கியம், நாணயவியல், தொல் பொருளியல், சாசனவியல் அடிப்படையில் ஆய்வு மூலங்களைக் காலச் சட்டகங்களுக்குள் பொருந்த வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கிரியா 2003இல் வெளியிட்டுள்ள திரு ஐராவதம் மகா தேவன் அவர்களின் தமிழ்ப் பிராமி பற்றிய ‘Early Tamil Epigraphy’ என்னும் பெருநூலை ‘பண்டைய தமிழக வரலாற்றின் மீது ஓர் ஆய்வொளிப் பாய்ச்சல் - ஐராவதம் மகாதேவனின் ஆய்வு வெளிக்கொணரும் சில முக்கிய விடயங்கள் பற்றிய ஓர் ஆய்வுக் குறிப்பு’ என்று ஏறக்குறைய 50 பக்கங்களில் தமிழ்ப் பதிப்பில் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் விவாதித்து இருப்பது தமிழ்ச்சூழலில் - தமிழறிஞர்கள் சூழலில் - மிகவும் முக்கியமானது. இந்த விவாதம் 1981 இல் வெளிவந்த ஆங்கில நூலில் காணமுடியாதது. ஆயினும் ஐராவதம் மகாதேவனின் கால முடிவு களுடன் கலாநிதி சிவத்தம்பியின் முடிவுகள் பெரும் பாலும் ஒத்துவருவதானது அவரின் ஆய்வு முறையின் மீது கூடுதல் மரியாதையை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மரபுத் தமிழறிஞர்களின் பதைபதைப்பிற்குத் தீனிபோடும் விதமாக, நூல்களின் இயல்புகளின் ஒப்புமை அடிப்படையில் கால வகைப்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
1. கி.மு.100முதல்கி.பி. 250 வரை-எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (கலி, பரிபாடல், திருமுரு காற்றுப்படை தவிர) நூல்கள்.
2. கி.பி. 250 முதல் கி.பி. 450 வரை - தொல்., திருக்குறள், கலி, பரிபாடல், திருமுருகாற்றுப் படை.
3. கி.பி. 450 முதல் கி.பி. 600 வரை - சிலப்பதி காரம்.
அரசியல் வரலாற்றில் மூன்று காலகட்டங்களில் இலக்கியங்களைச் சமப்படுத்துவதன் மூலம் அவற்றின் சமூக வெளிப்பாடுகளைப் பொருத்து, அவை வீர யுகம், நிலப்பிரபுத்துவம், வணிக மேலாண்மைக் கால நூல்களாக இனங்காணப்படுகின்றன. அவ்வக் காலங்களின் சமூக வரலாற்றுப் பின்புலங்களும் பேசப்படுகின்றன.
வீரயுகச் சமூகம் என்பது குலக்குழு நிலையி லிருந்து சில்லோராட்சிக்கு அல்லது தனியாட்சிக்கு மாறுகின்ற நிலையைக் குறிப்பதாகும். ஒரு மன்னனுக்கு அதிகாரம் சேர்ந்தவுடன், அவன் தன் சமூகத்திட மிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள் கிறான். அவ்வேளை, குலக்குழு அமைப்புக்கே உரிய தனிச் சமூக அமைப்பு சிதறுகின்றது. எனவே இந்த மாற்றம் காரணமாக, பழைய சமூகப் பெறு மானங்கள் மாறத் தொடங்குகின்றன. பழைய நிறுவனங்கள் புதிய சூழலுக்கேற்ப அமைத்துக் கொள்ளப்படுகின்றன. சில புதிய நிறுவனங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வாறாக ஒரு யுக மாற்றம் நிகழ்ந்தேறுகின்றது.
சங்கப்பாடல்கள், அக்காலத்து முக்கியமான (நாடகச்) சடங்குகள் பல பற்றிய தெளிவைத் தருகின்றன. ‘வெறியாட்டு, வள்ளைக்கூத்து (வாடா வள்ளி) போன்ற சடங்கியல் நிகழ்வுகள் நாடகங் களாக வீரயுகத்தில் இருந்தன’ (K. Sivathambi, 1981; 231) என்பது ஆய்விற்குரியது. இலக்கியத்தின் வீரயுகச் சார்பினை வைத்து அக்காலத்துக்குரிய போர்க்கள அனுட்டானங்களைப் பற்றி ஒரு முழுமையான பார்வையைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. அவ்வாறான சடங்குகளில் பேய் மகளிரின் ‘களவேள்வி’, பெண்கள் பங்கேற்கும் ‘வெறியாட்டு’, கன்னிப் பெண்களின் ‘தைநீராடல்’, ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடும் திருமண ஆதீகத்துடன் தொடர்புடைய ‘வாடாவள்ளி’, விவசாயச் சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகள், பெண்கள் பங்குபெறும் ‘குரவை’, ‘துணங்கை’ ஆகியவற்றை விவாதிப்பதன் மூலம், அவை பாடுநர் களையும் அவர்களின் அளிக்கைகளையும் இனங் காண உதவுகின்றன.
பாணர், புலவர், அகவுநர், புலவர், (புலவர்களின் பெயர்களில் கூத்து கலந்து வந்திருந்தபோதும், அப்புலவர்கள் கூத்து மற்றும் நாடகத்தோடு தொடர்பு கொண்டிருந்ததாக எந்தப் பதிவும் இல்லை.) கோடியர், வயிரியர், கண்ணுளர், (கோடியர், வயிரியர், கண்ணுளர் என்போரில் கோடியரும் வயிரியரும் உபயோகித்த இசைக் கருவியின் பெயரால் அழைக்கப்பட்டனர்’ (ஐbனை; 231) என்பதும் விவாதத்திற்குரியது.) விறலியர், கூத்தர் ஆகிய குழுவினரைப் பற்றிய ஆழமான ஆய்வு அச்சமூகத்து ‘நாடகம்’ - ‘நடனம்’ பற்றி விளங்கிக்கொள்ள நம்மை இட்டுச் செல்கிறது. இவற்றிலிருந்து, நாடக - நடன அளிக்கை வடிவங்கள் சில, நிச்சயமாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. நடனத்தையே குறிக்கிறது என்றாலும் அது வெறும் நடனத்தைக் குறிக்கிறதா அல்லது காட்சி நடனமாகக் காட்டுகிறதா என்பதற்குத் தெளிவான பதில் இல்லை.
‘.................................................... கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே’ (புறம். 28)
என்னும் பாடல் கூத்தாடு களத்தைப் பேசுகிறது. ஆனால் ஆடுகளம் என்பது உயர்ந்த மேடையா அல்லது தரையா என்பதற்கு எந்தக் குறிப்புகளு மில்லை. ஆயின் ‘வெறியயர் களம்’ என்னும் சொல் லாட்சியைக் கொண்டு ‘களம்’ என்பது உயர்ந்த மேடையைச் சுட்டவில்லை என்னும் கருத்திற்கு வருகிறார். ஒப்பாக்கத்தின் அடிப்படையில் முடிவிற்கு வரும் முறையியலைக் கொண்டிருக்கிறார். இது எல்லாமேகூட நீண்ட ஆய்விற்குரிய களமாக அமையக்கூடியது. நாடக மகளிர், ஆடல் மகளிர், ஆடுகளமகள் என்று குறிக்கப் பெற்றுப் பெண்கள் பங்கேற்கும் பல சடங்கு நிகழ்வுகள் எல்லாம், நாடகம் என்பதை விடவும் நடனங்களாக இருந் திருக்க வாய்ப்புண்டு. நாட்டிய சாஸ்திரத்திலும் ‘நாட்ய’ என்பது நாடகத்தையே குறித்து நின்றது.
‘வள்ளிக்கூத்து’ போன்ற சடங்குகள், பாடுநர் களின் அளிக்கைகள்கூட, சமயப் பின்னணியை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இவ் அளிக்கை களின் உள்ளடக்கம் பற்றி யாதும் அறிய முடியாது உள்ளது. கூடவும், நமக்குக் கிடைத்த மிகப் பழைய இலக்கியங்களும் சில சடங்குகளை முழுமையாகப் புனர் நிர்மாணம் செய்வதற்கான பொருத்தமான தகவல்களைக் கொண்டிருக்க வில்லை என்பது தெளிவாகின்றது. ஆயினும், ஊக உலகிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் சில நாடகத் தொடர்பு உடைய சான்றுகளும் காட்டப்படுவது மிக முக்கிய மானதாகும்.
‘வெறியர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின்’ அக. 98)
என்னும் வரியில் பொம்மையாட்டம் பற்றிய பதிவு அமைந்திருக்கிறது. ‘ஆடுமகள் கயிறாடும் ஆரியக் கூத்து’ ஆடிய குறிப்பு நற்.95, குறி.பா. 189-192 வரிகளில் காணமுடிகிறது. பொம்மலாட்டம் தொடங்கிக் கழைக்கூத்து வரை, தொழில்முறைக் குழுவின் சான்றுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது, நிகழ்த்துகலை ஓரளவிற்குச் செழிப்பான மரபாக வளர்ச்சியுற்றிருந்தது என்று கொள்ள முடியும். ஆயினும், கிடைக்கக்கூடிய சான்றுகள், செழிப்பான நாடக மரபாக அது உருவாக
ஏன் சமூகம் ஊக்குவிக்கவில்லை என்பதையும், கிரேக்கத்தில் நாடகக்கலை பேணப்பட்டது போலத் தமிழ்நாட்டில் ஏன் முழுமையாகப் பேணப்பட வில்லை என்பதையும் உணர்த்த முயல்கின்றன.
நிலப்பிரபுத்துவ மேலாண்மைக் காலத்தில் பிராமணிய வழிபாடு, பிரதேசப் பாரம்பரிய வழிபாட்டுடன் இணைக்கின்ற முயற்சிகளுடன் காணப்படுவதாகவும், சில பழைய வழிபாடுகள் மெல்ல மறைந்ததன் பின்னால், பிராமணிய வழிபாடு விரைவாக வளர்ச்சி பெறுவதையும் காணமுடிகின்றது என்கிறார் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள்! தத்துவப் பின்னணியில் ‘கூத்தாட்டு அவைக்குழாம்’, திருக்குறள் (332), பழமொழி (343) ஆகியவற்றில் பதிவாகி இருப்பதை எடுத்து விளக்குகிறார். வெறி யாட்டு (பரி.5;115), குரவைகள் - குறத்தியரின் குரவை (கலி. 39), வேட்டுவர் குரவை (திருமுருகு. 194-7), ஆய்ச்சியர் குரவை (கலி. 102, 103, 104, 106), துணங்கை (கலி. 66, 70,73; திருமுருகு. 17-57), தை நீராடல் (கலி. 58; பரி.11) என்று பழைய மரபுகள் தொடர்வதைக் காணமுடிகிறது என்கிறார்.
பாணர், விறலி, புலவர், கூத்தர் ஆகியோரும் தொடர்கின்றனர். ‘நாடக வழக்கு’ என்பது புனைந்துரை வகை என்பதாகக் கொள்ளப்பட்டு பரதருடைய ‘நாட்யதர்மி’யுடன் இணைந்து பொருள் கொள்வதைக் காணமுடிகிறது. ‘பண்ணை’ என்பதற்குப் பேராசிரியரின் கருத்தான நாடக மகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டு என்பதனுடன் ஒத்துப்போகிறார், பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் (ஐbனை; 250)! இது விவாதத்திற்குரியது. கலித்தொகை, பரிபாடல்களில் நாடகத் தன்மைகள் மிகுந்திருப்பதை அவற்றின் சொல்லாடல்களைக் கொண்டு விளக்கும் பேராசிரியர் ‘வீழ்கைப் பெருங் கருங்கூத்து’ (கலி.65) என்பது கருத்தளவில் காம இச்சையைத் தூண்டும் ஆட்டமாக இருக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டிருக்கிறார் (ஐbனை; 251-271). இந்தக் காலகட்டத்தில் ஆடுவோரிடையே பரத்தமை முக்கிய இடம்பெற்றிருப்பதை, தொல்., கலி., பரிபாட்டு, குறள் ஆகியவற்றின் மூலம் நிரூபிக்கிறார்.
சாதிமுறை சமூகத் தீண்டாமைக்கு உதவியதுடன், உள்தொடர்புகளையும் தடுத்தது. அசமத்துவ வளர்ச்சி, புவியியல் அம்சமாகத் தொடங்கி, சமூகப் பண்பு களைப் பெறத் தொடங்கிற்று. அது கலைகளையும் விட்டு வைக்கவில்லை. கலைகளின் அசமத்துவ வளர்ச்சி, அடுத்த காலகட்டத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கிறது என்கிறார் (கா. சிவத்தம்பி, 2005; 275).
வணிக மேலாண்மைக் காலத்தில், பௌத்த, சமணத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக, இந்து மதம், பிராமணிய - சுதேசிய வழிபாடுகளினது இணைவுகளுடன் மொத்தப்பேறாகப் பிரசித்தி பெற்ற மதமாகவும், இயக்கமாகவும், பக்தி இயக்க மாகவும் வளர்ந்தது. இக்காலப் பிரிவின் முடிவில் அந்த வளர்ச்சியைக் காணலாம். இக்காலத்திற்குரிய எல்லா நூல்களிலும் சிலப்பதிகாரம், அதனுடைய விடயம், நோக்கு என்பவற்றால் அக்கால நாடக மரபு பற்றிய மிக அதிகமான தகவல்களைத் தருகின்றது (மேற்படி; 279).
சடங்கு நிகழ்வுகளில் வேறுபட்ட ஐதீகங்கள் அடங்கியுள்ளதானது, சமஸ்கிருதமயமாக்கம் வலுப் பெற்றதைக் காட்டுகிறது. ஆடல் மட்டுமல்லாது, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி போன்றனவும் இந்நிலையைத் தெளிவுறுத்துகின்றன என்கிறார் (மேற்படி; 329). பண்டைய தமிழகக் கலைஞர்கள் எப்பொழுதும் முழவுடனேயே பேசப்படுகின்றனர். இதைக் கேரளத்தில் இன்றும் சாக்கையர் கூத்தில் பயன்படும் ‘மிழவு’டன் பொருத்திப் பார்க்கிறார். பிண்டி, பிணையல் மேலும் ஆய்விற்குரியதாய் இருக்கிறது. வட கேரளத்தின் பெருஞ்சடங்கான திரையாட்டம், வேட்டுவ வரியுடன் ஒப்புமையுடைய தாயிருக்கிறது என்பதையும் குறிக்கிறார். ‘நலம் பெறு கண்ணுளர்’, ‘சாந்திக் கூத்தி’ன் ஒரு பிரிவினராகக் கொள்ளப்படுவதால், கண்ணுளர் ஒரு காலத்தில் குழுவினராக இருந்து இக்காலத்தில் வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்னும் கருதுகோளை முன் வைக்கிறார். பாணர், தொழிற்கலைஞர் வாழ்கின்ற அதே வீதியில் வாழ்ந்திருந்தும், கலைஞர்களில் ஒருவராகப் பாணர் கருதப்படவில்லை; இழிந்த பார்ப்பனராக, அம்பணவர் என்று குறிக்கப்படு வதாகக் குறிக்கிறார். இது பாணரின் சமூக அடை யாளம், வீரயுகக் காலத்தில் காணப்படுவதினின்றும் மங்கிப் போயிருப்பதாகக் கொண்டு கூட்டிப் பொருள் தருகிறார். இவை மிகக்குறைவான எடுத்தாளுகைகள். இவை அனைத்துமே மீள்ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை!
தமிழ் இலக்கியத்தில் சங்ககாலம் தொடங்கி சிலப்பதிகாரம் வரையிலான நெடும்பரப்பை எழுத் தெண்ணிப் பார்த்து அதில் நடனம், நாடகம் பற்றிய பல்வேறு பதிவுகளையும் அவற்றின் கொண்டு கூட்டலாய்ப் பொருத்திக் காட்டுவதிலாகட்டும், அவற்றின் சமூகப் பின்புலத்தைக் கைக்குக் கிடைத் திருக்கும் சான்றுகளின் அடிப்படையிலும் கிரேக்க, தமிழ்ச் சமூகங்கள் நடனங்களை, நாடகங்களை வடிவமைத்தமுறைமைகளை ஒப்புமையாக்கங்களின் படியும் விளக்கிக் காட்டுவதிலாகட்டும், புதிய ஆய்வுக் களங்களுக்கான தூண்டுதலை இந்நூலில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு கருத்தும் உருவாக்கித் தருவதிலாகட்டும், ‘Drama in Ancient Tamil Society’ என்னும் இந்நூல் மிகவும் முக்கியமான நூல்! இதற்கு இணையான நிலையில், தமிழ்நாடக வரலாறு பேசும் நூல் இதற்கு முன்னும், இந்நூல் வெளிவந்த பின்னும் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
நாடகத்துறையினர் மட்டுமின்றி, தமிழ் இலக்கியத் துறையினருக்கும் இந்நூலின் மேல் விவாதம் புரிய எண்ணற்ற காரணங்களிருக்கையில், ‘முத்தமிழ்’ பற்றிப் பேசும் அவர்களும் இந்நூலை ஏன் காணாது விட்டனர் என்பதற்குத் தெளிவான பதிலில்லை. ஒருவேளை, நூல் ஆங்கிலத்தில் வந்தது ஒரு காரணமாயிருக்கலாம். ஆயின் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிற நிலையிலுங்கூட இந்நூலின் மேலான ஆய்வியல் பார்வை, இலக்கியத்துறையினரிடமிருந்தும், நாடகத் துறையினரிடமிருந்தும் எழுந்திருக்காதது, காலந் தாழ்ந்தே இங்கு எழுத்தாகியிருப்பது, நம் அறிவுத் துறையினரின் செயல்பாட்டை ஐயங்கொள்ள வைக்கிறது என்பதைக் கூறத்தான் வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் 2005 டிசம்பர் 12-14 தேதிகளில், பேராசிரியர் முனைவர் வீ.அரசு முயற்சியால், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘கலாநிதி கா.சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசை வழிகளும்’ என்னும் தலைப்பில் விவாதத்திற்கு வழியமைத்துக் கொடுக்க, வகை செய்திருந்ததற்கு நன்றி சொல்லவேண்டும்.
இந்நூலின் கருத்துகள் எழுப்பும் புதிய புதிய சிக்கல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களுக்கும் வழி ஏற்படுத்தித் தரக்கூடியவையாய் உள்ளன. ஆயின், அத்தகைய தரத்திலான ஆய்வுக் கட்டுரைகளும் இங்கு அதிகம் வெளிவந்திருப்ப தாகவும் தெரியவில்லை. ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்தலைப்புகளாக இந் நூலின் பல சிக்கல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று இக்கருத்துக்களின் மீது புதிய ஒளி பாய்ச்சப் பட்டிருக்கும். அதுவும் நடைபெற்றதாகத் தெரிய வில்லை. இந்நூலின் கருத்துகளை மீள் பரிசீலனை செய்வதற்காக எழுதப்பெற்ற கட்டுரைகளே இதைத் தொடர்ந்து அமைந்திருக்கும் மூன்று கட்டுரை களுமாகும் என்பதே ‘Drama in Ancient Tamil Society’ நூலின் மேலான என் எளிய பங்களிப்பாயிருக்கும்.
நோக்கீட்டு நூல்கள்
1. சிவத்தம்பி, கார்த்திகேசு., பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை, 2005.
2. Sivathambi, K., Drama in ancient Tamil Society, NCBH, Chennai, 1981. நன்றி - கீற்று
பேராசிரியர் சிவத்தம்பி நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார்.
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் சிவத்தம்பியின் 75 ஆவது வயதில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு பகிர்ந்து கொண்ட காத்திரமான பதிவு இது
இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.
இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.
நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.
ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.
1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.
இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.
அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.
1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் “மனமே சிங்கபாகு” அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் “மனமே சிங்கபாகு” போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.
இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.
கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.
அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர்
சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).
இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.
இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.
இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.
பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.
கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.
இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.
முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.
உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
“போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்”
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள்.
இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.
எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித்தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். “எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்” என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். “எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்” என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.
கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.
டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம்.
வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.
அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.
பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.
அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.
ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.
நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.
சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும்
No comments:
Post a Comment