பேராசிரியர் சிவத்தம்பி உலகத் தமிழரின் சொத்து
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. உலகத் தமிழர்களின் புலமைச்சொத்து. அவரது மறைவு ஒவ்வொரு தமிழருக் கும் பேரிழப்பை உணர்த்தியிருக்கிறது. நாகரிக சமூக வளர்ச்சியின் வரலாறு, இலக்கியம், கலை, வாழ்வு நெறி, அரசியல் எனப் பன்முக ஆளுமையில் உலகத் தமிழர்களுக்கு முகவரியாய்த் திகழ்ந்தவர். விசேடமாக இலங்கைவாழ் தமிழர்களுக்குத் தனது புலமையின் மூலம் முகவரியைத் தேடித்தந்தவர். அவரது கல்விப் புலமையின் சிறப்பைத் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப் பாராட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட உலகத்தமிழினம் அவரை இலங்கையராக அல்லாமல் உலகத் தமிழ் பேரறிஞராகவே கருதுகிறது.பேராசிரியர் சிவத்தம்பியின் திறமை, ஆளுமை பற்றியும் அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது மறைவுக்குப் பின் பலரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை வாழ் அறிஞர் பெருமக்களும் சிவத்தம்பி ஐயாவின் அருமைபெருமைகளைப் போற்றிப் புகழ்கின்றனர்.
பொதுவாகவே உயர் படிப்பையோ அல்லது பட்டப் படிப்பையோ முடித்தவர்கள் சமூகத்தின் சாதாரண இயல்பு வாழ்வில் இருந்து விலகி தமக்கென அமைத்துக் கொண்ட வட்டத்துக்குள் வாழத் துணிகின்றனர். இதனால் அவர்கள் சமூக கட்டமைப்பில் இருந்தும் அந்நியப்பட்டவர்களாக தனித்து ஒரு கல்விமானாக மட்டுமே வாழ்கின்றனர். இதனைத்தான் இன்னமும் நமது அயலில் கண்கூடாக காண்கிறோம். கல்வி புலமை அதிகரிக்க அதிகரிக்க சிலர் பேசா மடந்தைகளாக சமூகத்தின் வளர்ச்சியிலோ, எழுச்சியிலோ அக்கறை இல்லாதவர்களாக காணப்படுவார்கள்.
ஆனால் பேராசான் சிவத்தம்பி என்னதான் கல்வியில் உன்னத நிலையை அடைந்தாலும் உலகம் போற்றும் அளவுக்கு புலமையில் உச்சத்தை தொட்டாலும் தான் பிறந்த மண்ணையும் மக்களையும் மறக்காதவர். தான்சார்ந்த சமூக நலனில் அக்கறை கொண்டது மட்டும் அல்லாமல் உலக வாழ் தமிழினத்தை தம் உறவாகவும் கருதியவர். தன்னைப் போன்று மேலும் புலமையாளர்கள் பலர் உருவாக வேண்டும் என்பதில் கரிசனை கொண்டவர். கல்வி மீது எந்தளவு பிடிப்பை கொண்டு இருந்தாரோ அந்தளவுக்கு தமது சமூகத்தின் மீதும் பற்றுறுதி கொண்டவராக திகழ்ந்தார். அதேநேரம் ஏனைய சமூகத்தினரின் உரிமைகளையும் மதித்து அவர்களின் நலனுக்காகவும் அக்கறைகொள்ளும் மானுட நேயம் மிக்கவராக விளங்கினார்.
கல்வியிலும் வாழ்வு நிலையிலும் உயர்ச்சியை அடையும் போது எவ்வாறு பணிவுகொள்ள வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் நடைமுறை வாழ்க்கையிலும் கடைப்பிடி த்து ஒழுகியவர் பேராசிரியர் சிவத்தம்பி. கல்வியில் தம்மளவுக்குச் சமமானவர்களுடனும், அல்லாத வர்களுடனும் சமமாகப் பழகும் பக்குவத்தைக் கொண்ட அவர், சகல தரப்பினரையும் மதித்து நேசிக்கும் உயரிய மானுடப் பண்பினைக் கொண்டவர்.
அவரை மக்கள் நேசிப்பதற்கு அவர் கல்வியில் மேன்மையுற்று விளங்கியது மாத்திரம் காரணமன்று. தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மையும் சிறியவர்களையும் அவரணைத்து அன்பு செலுத்தும் உன்னத குணமும்தான் அவரை இந்தளவுக்கு உச்சத்தில் வைத்தது என்றால் மிகையாகாது.
பேராசான் சிவத்தம்பி கல்வியில் எந்தளவுக்குச் சிறந்து விளங்கினாரோ அந்தளவுக்கு சமூக விடுதலையி லும் தமிழ் மக்கள் நலனிலும் தெளிவான ஒரு சிந்தனையைக் கொண்டிருந்தார். இலங்கையின் தேசிய பிரச் சினையைத் தீர்ப்பதற்கான ஒரு தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைபற்றிய ஒரு தெளிவான அரசியல் சிந்தனையை அவர் கொண்டிருந்தார் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் வெளிச்சம்.
கல்வியாளர்கள் என்னதான் உச்சத்தில் இருந்தாலும் அவர்களைவிடக் குறைவான நிலையில் உள்ள அரசி யல்வாதிகள் அந்தக் கல்விமான்களிடம் சென்று அறிவுரை கேட்பதை மரியாதைக் குறைவாகத்தான் கருதுகின் றனர்.
இலங்கையில் தமிழர்கள், தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் வாழ வேண்டும் என்ற சிவத்தம்பியின் அரசியல் தத்துவார்த்தத்தை இன்று சில அரசியல்வாதிகள் தமது கருத்தாகத் தெரிவித்து வந்தாலும் பேராசான் சிவத்தம்பியின் அரசியல் நோக்கங்களைப் புரிந்து அறிந்து கொண்டு செயற்படுத்துவதற்குத் துணிந்திருந்தால் இத்துணைகால நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எவ்வாறு நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களுடனும் சக சமூகத்தவர்களுடனும் விடயங்களை அணுக வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்களுக்கு ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்பதைப் பெருந்தகைகள் மறுக்கமாட்டார்கள்.
எனவே, பேராசான் சிவத்தம்பியின் மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் பாராட்டுவதும் அவரது கல்வியறிவை ஆய்வுக்கு உட்படுத்துவதும் எந்தளவுக்கு முக்கிமானதோ அதே வீச்சில் அவரின் அரசியல் சிந்தனைகளையும் ஆராய்ந்து வெளிக் கொணரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அப்போதுதான் சிவத்தம்பி கொண்டிருக்கும் தமிழ் நேசமும் இனங்களுக்கிடையிலான பற்றுதலும் வெளிச்சத்திற்கு வரும். ஐயாவின் மறைவுக்குப் பின்னராவது அவரின் சிந்தனைகளை இந்தச் சமூகம் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
தமிழ் ஆய்வாளர்களில் முன்னோடியாக திகழ்ந்த பேராசிரியர் சிவத்தம்பி ஒடுக்கப்பட்ட, மக்களின் நலன் சார்ந்ததாக இருந்தது என பேராசிரியர் சிவத்தம்பியின் மாணவர் பேராசிரியர் சி. மெளனகுரு வழங்கிய நினைவுப் பகிர்வில் தெரிவித்திருக்கிறார். ஒரு தந்தையை இழந்த சோகத்தில் இன்று தமிழ்ச் சமூகம் ஆழ்ந் திருக்கிறது. தமிழ் பண்பாட்டியல் பற்றி பலர் ஆய்வு செய்தார்கள், ஆனால் பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வு தனித்துவமானவை. பல்துறை சங்கம அய்வு முறை ஊடாக அவரது ஆய்வுகள் காணப்பட்டதுதான் அவரது ஆய்வுகள் தனித்துவம் மிக்கதாக உயர்ந்து நிற்பதற்கு காரணமாகும்.
பல்துறை சங்கம ஆய்வு முறைமை என்பது என்ன என புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விடயத்தை புரிந்து கொள்ள, பண்பாட்டை புரிந்து கொள்ள, இலக்கியத்தை புரிந்து கொள்ள தத்துவவியல், உளவியல், மனிதவியல் நெறிமுறைகளை பிரயோகித்து முடிவைத்தேடுவதுதான் பல்துறை சங்கம ஆய்வு என்று அழைக் கப்படுகிறது. அவரது பண்பாட்டு ஆய்வு பரந்திருந்தது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் பற்றி, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்சார்ந்ததாக அமைந்திருந்தது.
ஆறுமுகநாவலருக்கு பின் யாழ்ப்பாணத்தின் அடி மட்ட கலைகள் மறைக்கப்பட்ட நிலையில் அவற்றின் முகத்தை வெளிக் கொண்டு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களாகும். தனது பண்பாட்டு ஆய்வில் யாழ்ப்பாணத்தின் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட முகத்தை வெளிக் கொண்டு வந்தார்.
அவர் ஒரு கலைக்களஞ்சியமாக திகழ்ந்தார். கர்வம் சிறிதும் இல்லாது, தன்னடக்கம் கொண்ட புலமையா ளராக அவர் வாழ்ந்தார். அவர் இல்லாத தமிழ் உலகு வெறுமை மிகுந்ததாகவே தெரிகிறது. தகைசால் பேரா சிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் இழப்பு எமக்கு மாத்திரமல்ல, தமிழ் உலகிற்கும், ஆய்வுத்தளத்தில் நிற்கும் சர்வதேச புலமையாளர் உலகிற்கும் ஓர் பேரிழப்பாகும். ‘கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’
என்ற வள்ளுவர் குரலுக்கு ஒப்ப உலகில் வாழ்ந்தவர் பேராசிரியர். தமிழே அவரது சிறப்புத்துறை எனி னும் பல்துறை அறிஞராய் ஒளிபரப்பியவர். தமிழில் தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை என வந்து புதுக்கவிதை வரை பரிச்சியமானவர். வாழும் சமூகத்தின் யதார்த்தத்தைப் புரிந்து வாழ்ந்தார். இதனால் தான் எம்.ஜி.ஆரின் புகழ் வளர்ந்த வரலாற்றையும் சமூக இயக்கத்துடன் இணைத்து எழுதினார்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளரான இவர் தனது ஆங்கில அறிவின் ஊடாக தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர். மாக்சியசித்தாந்தத்தில் பற்றுக் கொண்டிருந்த இவரும், இவரது நண்பர் பேராசிரியர் கைலாசபதியும் ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் பொருள் முதல்வாத சிந்தனையூடாக சமூகத்தை தரிசித்து நவீன இலக்கிய படைப்பாளர் பலரை உருவாக்கினார்.
பேராசிரியர் சிவத்தம்பி ஏறத்தாழ 70ற்கு மேற்பட்ட நூல்களை தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். 200ற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தந்துள்ளார். இவற்றில் சங்க இலக்கியம் முதல் 20ம் நூற்றாண்டு இலக் கியம் வரை அடங்கியுள்ளது. நாவல், சிறுகதை, கவிதை, புதுக்கவிதை, விமர்சனம், பத்திரிகையியல், சினிமா, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கட்புலக் கலைகள், நிகழ் கலைகள், என பலதுறையும் விரவிநிற்கும்.
அவ்வாறாக பல்துறையில் கிளைபரப்பி படர்ந்து விரிந்து தமிழர்களுக்கு நிழல்தந்த ஆலமரத்தை நாம் இழந்து திகைத்து நிற்கின்றோம். உலக வரலாற்றில் பலரது இடங்கள் நிர்ப்பபடுவதையும் சிலரது இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதையும் பார்க்கின்றோம். அந்தச் சிலரில் இவர் ஒருவர்.
மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். இலங்கைத் தமிழர்- யார், எவர்?, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, தமிழில் இலக்கிய வரலாறு, இலக்கணமும் சமூக உறவுகளும்,மதமும் கவிதையும், தமிழ் கற்பித்தலில் உன்னதம், சுவாமி விபுலானந்தரின் சிந்தனை நெறிகள், திராவிட இயக்கக் கருத்து நிலையின் இன்றைய பொருத்தப்பாடு, தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, பண்டைத் தமிழ்ச் சமூகம்- வரலாற்றுப் புரிதலை நோக்கி என பல நூல்களை எழுதினார்.
அது மட்டுமன்றி அவர் எழுதிய கட்டுரைகள் எண்ணில் அடங்காதவை. இலங்கையில் வெளிவந்த சிறந்த நூல்கள் அனைத்திற்கும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் அணிந்துரை இருக்கும். அவரின் அணிந் துரைகளால் சிறப்பு பெற்ற நூல்களும் எழுத்தாளர்களும் பலர் உள்ளனர். பழகுவதற்கு மிகவும் இனியவரான அவர் எளிமையானவரும் கூட. கிழக்கு பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இரு வருடங்கள் கடமையாற்றிய காலத்தில் அவருக்கு தனியான வாகன வசதியை தவிர்த்து கிழக்கு பல்கலைக்கழக சாதாரண ஊழியர்கள் பயணம் செய்யும் பஸ்ஸையே தினசரி பயன்படுத்திக் கொள்வார். அவரின் வார்த்தையில் சொல் வதானால் அது சமூக ஊடாட்டத்தை புரிந்து கொள்வதற்கு மிக அவசியமானது என கருதினார்.
பல்துறைசார்ந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்... அவரின் வழி காட்டலில் பயணித்தோம் என்ற ஆத்மதிருப்தியுடன் அவரின் பாதங்களில் தினகரன் வாரமஞ்சரி தலை சாய்த்து வணங்கி நிற்கிறது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர் கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்
No comments:
Post a Comment