Thursday, 7 July 2011

பேராசிரியர் சிவத்தம்பியின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி

உலக தமிழ் அறிஞர்கள் இரங்கல்; அனுதாபம்
பூதவுடல் இன்றும் நாளையும் தெஹிவளை, 23ஏ, வன்டர்வட் பிளேஸ் இல்லத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை கலாபவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரிகைகள் பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.
காலஞ்சென்ற தமிழ் அறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகம் எங்கிலும் பரந்து வாழும் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், கல்விமான்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலியை செலுத்துகின்றனர்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் உலக தமிழர்கள் இவரின் மறைவு குறித்து தமது அனுதாபங்களையும் இரங்கல்களையும் வெளியிட்டுள்ளனர். முத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு காலமானார். யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட யோசியர் சிவத்தம்பி நோய்வாய்ப்பட்ட நிலையில் தெஹிவளை வெண்டவற் பிளேசிஸ் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி பிறந்த இவர், பண்டிதரும் சைவப்புலவருமான கார்த்திகேசு - பள்ளியம்மை தம்பதியினரது மகனாவார்.
1956 ஆம் ஆண்டில் இளங்கலைமாணி பட்டத்தை பெற்ற இவர் 1963 ஆம் ஆண்டில் தனது முது கலைமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.
1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தை பெற்றார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கற்றதுடன் அக்கல்லூரியிலேயே ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்திலுள்ள பேர் மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பை மேற்கொண்டு முனைவர்(ஜிh.ளி) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
பின்னர் மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற் றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டுவரை பணிபுரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
ஆக்கங்கள்
பல்வேறு துறைகளிலும், ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்கு புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கல்வின்கலை என பல்துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சிய சிந்தனைப்போக்குடைய இவர் யாழ்ப்பாண சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்ச்சித்தார்.
விருதுகள்
இவரின் தமிழ்ப்பணிகளை மதிக்கும் முகமாக இவருக்குத் தமிழக அரசு திரு. வி.க. விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலங்கை ஜப்பானிய நட்புறவுக்கழக விருது பெற்றவர். 2000 இல் இவர் பெயர் உலக அளவிலான புலமைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பல அமைப்புகள் இவருக்குப் பரிசில்கள் பாராட்டுகள் வழங்கியுள்ளன. கா. சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவை நிறைவையொட்டி அவரின் அன்பிற்கு உரியவர்கள் பல விழாக்களை எடுத்துக் கொண்டாடியும் அவர்களின் அன்பு வெளிப்படும்படி நூல்கள் வெளியிட்டும் கருத்தரங்குகள் நிகழ்த்தியும் அவரின் தமிழ்ப் பணிகளை மத்திதனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது மரணச் செய்தியைக் கேள்வியுற்ற தமிழ்நாட்டு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் முக்கியஸ்தர்கள் மற்றும் நம் நாட்டுக் கலைஞர்கள் எல்லோரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். அன்னாரது இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment