Wednesday, 13 July 2011

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் பிரிவு தொடர்பில் கூட்டமைப்பு இரங்கல்!

Published on July 9, 2011-8:06 pm  No Comments
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தனது இரங்கல் செய்தியில் கா.சிவத்தம்பி அவர்கள் தனது சிந்தனையையும் படைப்புக்களையும் எமக்கு விட்டுவிட்டு பூதஉடலை இயற்கைக்கு அர்ப்பணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும்,
இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் மொழி, கலை, கலாசார பண்பாட்டுப் பாரம்பரியங்களை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஆய்வு செய்த ஈழத்தின் மூத்த தமிழ்க் கல்விமான்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவரும் இலங்கையின் தமிழ் தேசிய இனமோதலின் பலபரிமாணங்களை மார்க்சிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்திவந்த முற்போக்குத் தமிழ்த் தேசியவாதியுமான மூதறிஞர் வாழ்நாள் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு பொதுவாகத் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் குறிப்பாக ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கும் ஒரு பாரிய இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த எமது தோழர் குணசேகரத்தின் ஊடாக எனக்குப் பேராசிரியரின் அறிமுகம் கிட்டியது. எனக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பு அரசியல்ரீதியானதாகவே இருந்தது. பேராசிரியர் ஒரு முற்போக்கு ஜனநாயகவாதியாக இருந்ததால் எமது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடனான அவரது உறவு தோழமைரீதியான உறவாகவே இருந்தது. அந்தவகையில் அவரை ஒரு தோழனாகவே எனக்குத் தெரியும். எங்களது தொடர்புகளும் அவ்வாறே பேணப்பட்டன. அன்றிலிருந்து அவரது உயிர் பிரியும்வரை நான் அவருடன் பூகோள பிராந்திய அரசியல் நிலமைகள் குறித்துப் பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடி வந்துள்ளேன்.
பேராசிரியர் அவர்கள் பொதுவாக ஒரு இலக்கிய விமர்சகராகவும் திறனாய்வாளராகவுமே அறியப்பட்டவராயினும் உண்மையில் தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை கற்கைகளிலும் தடம்பதித்தவராவார்.
இவ்வகையில் தமிழ் இலக்கியம், மதம், மானுடவியல், சமூகவியல், அரசியல், வரலாறு மற்றும் கவின் கலைகளில் பேராசிரியரின் புலமை அறிவுஜீவிகளை ஆகர்ஷிப்பதாகும்ளூ இவரது இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சனங்கள், பகுப்பாய்வுகள் சிந்தனையைத் தூண்டுவனவாகும். இத்தகைய பல்துறை விற்பன்னரும் உயிர்ப்பான கருத்தியலாளருமான அன்னாரின் புகழ் நாம் கூறி விளங்கவேண்டிய ஒன்றல்ல.
இலக்கியம், அரசியல், கலை கலாசார பண்பாட்டியல், சமூகவியல் மற்றும் கவின்கலை ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளிகள் தமது படைப்புகளுக்குப் பேராசிரியரின் வாழ்த்துரை, அணிந்துரை அல்லது மதிப்புரையை இணைத்துக்கொள்வதால் தங்களது ஆக்கங்கள் மதிப்புப்பெறும் எனக் கருதுவதும் அல்லது தமது படைப்புக்களில் அவரது வாழ்த்துரையை இணைத்துக்கொள்ள முடிந்தால் பெருமிதப்படும் நிலையுமே அவரது புகழுக்குச் சான்றாகும். இவர் ஒரு தனிமனிதனல்லள! அவரே ஒரு நிறுவனம் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பெருமதிமிக்க அறிவுக்களஞ்சியம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

என்பது வள்ளுவம்.
இவ்வகையில் எழுபதுவரையான அவரது கட்டுரைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகளும் ஆயிரக்கணக்கான நூல்களுக்கு அவர் எழுதியுள்ள முகவுரைகளும் வாழ்த்துரைகளும் மதிப்புரைகளும் அவர் எம் சமுதாயத்திற்கு விட்டுச்சென்றுள்ள அறிவுப்பொக்கிஷங்களாகும். இவற்றினூடாக அவர் எம்முடன் வாழ்கிறார்! என்றும் வாழ்வார்! அறிஞனுக்கு அழிவில்லை!
அன்னாரின் பௌதிக உடலைப்பிரிந்து துயருரும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுடன் நானும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் துயரத்தைப் பகிர்ந்துகொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் கே. பிரேமச்சந்திரன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
இணைச்செயலர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்
E-mailPrintPDF
பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.
 தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சமவீனங்களின் பாதிப்பால் தனது இளம்பிராயத்தில் பொதுவுடைமைக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இதன் காரணமாக எதனையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அணுகும் விஞ்ஞானபூர்வ மனப்பாங்கைப் பெற்றிருந்தார். ஆய்வுகளைத் தட்டையாக அல்லாமல்  சமூகவியல், மொழியியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் என்று பல துறைகளையும் இணைத்துப் பல்துறைச் சங்கம ஆய்வாக மேற்கொண்டு வந்தார்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அவரது ஆங்கிலப் புலமை காரணமாகப் பிறமொழிகளின் சிந்தனை வளர்ச்சிப் போக்குகளை உள்வாங்கித் தமிழுக்கு வளம் சேர்த்து வந்தார். தமிழியல் ஆய்வுக்கு இவர் திறந்துவிட்ட வாசல்கள் அதிகம். தமிழ்ச் சொற்களஞ்சியத்துக்கு இவர் பிரசவித்துத் தந்த கலைச் சொற்கள் பல்லாயிரம். இவையே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களை ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பால் கொண்டு சென்று உலக அரங்கில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடாக நிலைபெறச் செய்துள்ளது.
கால ஓட்டம் மாறுவதற்கு ஏற்பச் சமூக அரசியல் பார்வைகளும் மாறவேண்டும் என்பது மார்க்ஸியத்தின் அடிப்படை விதி. இந்த இயங்கியலுக்கு ஏற்ப, ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஈடுபாடு கொண்டிருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இனப்பிரச்சினை கூர்மையடைந்த 80களில் தனது அரசியல் பார்வையை அகலித்துக் கொண்டார். இலங்கையின் வரலாற்றில் ஒரு பிரிகோடாக அமைந்துவிட்ட இக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறையின் பிரஜைகள் குழுத் தலைவராகவும் வடக்கு கிழக்கு பிரஜைகள் குழு ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வந்த சொல்லொணாத் துயரங்களை சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் உலக அரங்குக்குக் கொண்டு சென்று சேர்ப்பித்தார். அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவராகவும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவரக்ள் பணியாற்றியிருந்தார். வட – கிழக்கினுடைய மிகப்பிரதான அரச சார்பற்ற நிறுவனமான இதனூடாக விதவைகள், தபுதாரர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்பட்ட சகல தரப்பினர்களினதும் துயர் துடைக்க முன்னின்று உழைத்தார்.
இறுதி மூச்சுவரை தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையும் தேடலுமாக இருந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச் சமூகம் பல்வேறு வறுமைகளையும், வெறுமைகளையும் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். தமிழும், தமிழ்ச் சமூகமும் பெரும் முதுசம் ஒன்றை இழந்து பரிதவிக்கும் இவ்வேளையில் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பேணுகை மையமும் தலைசாய்த்து பேராசானுக்குத் தனது இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Karthigesu Sivathamby (May 10, 1932- July 6, 2011)

Sivathampi 002

Sivathampi 001

Karthigesu Sivathamby (May 10, 1932- July 6, 2011)

Sivathampi 004

sivathambi

Prof Sivathamby's Discussions about Tamils' Business Connections

sivathambi

Prof.Sivathambi's speech.wmv

பேராசிரியர் கா.சிவத்தம்பி: புதிய வார்த்தை
அ.முத்துலிங்கம்
எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார்.கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை.அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும்.ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.
காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவைத் தள்ளுகிறான் இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும்.வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து,உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார்.முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது.காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.
ஒரு காலத்தில் இப்படித்தான் சிவத்தம்பியுடன் நான் பல நாட்களைக் கழித்திருக்கிறேன். அவர் எனக்கு ஒரு மூத்த அண்ணரைப்போல. நான் அன்றைய காலகட்டத்தில் எழுதிய சிறுகதை ஒன்றை விமர்சிப்பார்.எப்பொழுதும் பாராட்டுத்தான். கைலாசபதி என்றால் நிறையுடன் குறைகளையும் சொல்வார். சிவத்தம்பி உணர்ச்சிவசப்படுபவர், அவரால் அழகைத்தான் காணமுடியும். எங்கள் பேச்சு புதுமைப்பித்தன், பாரதி என்று விரிவாகப் போகும். ஆங்கில இலக்கியம் என்றால் எங்கள் இருவருக்கும் அப்போது பிடித்தது ஜேம்ஸ் ஜோய்ஸ்தான். சில சமயங்களில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றுகூடுவதுண்டு. அனைவரும் இலக்கியக்காரர்கள்தான்.மிகவும் நெருக்கமானவர்கள் என்றால் ஒருவரை ஒருவர் ‘பூசை’ என்று அழைத்துக்கொள்வோம். இது சிவத்தம்பி கண்டுபிடித்த புதிய வார்த்தை.எர்னெஸ்ட் ஹெமிங்வே எந்த ஒரு வார்த்தையைப் பார்த்தாலும் அதை ஒரு புதிய வார்த்தை போல பார்ப்பார் என்று சொல்வார்கள். சிவத்தம்பிக்கு அந்த பிரச்சினை கிடையாது. வார்த்தைகளைப் புதிது புதிதாக உண்டாக்கிவிடுவார். ‘என்ன பூசை! கன நாளாகக் காணேல்லை?’ என்பார். அன்பு நிறைந்துவிட்டபோது அப்படி அழைப்பார்.
அந்தக் காலங்களில் பாரதியாருக்கு அடுத்தபடி அவரைக் கவர்ந்தவர் ஆண்டாள்தான். ’கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்ற வரிகளை உணர்ச்சிபூர்வமாகக் கூறி சிலாகிப்பார். சில பாடல்களைச் சொல்லும்போது அவருக்குக் கண்ணீர் வந்திருக்கிறது. நாங்கள் ஒருவரும் ஆண்டாளைப் படித்ததில்லை. அதற்குப் பிறகுதான் ஆண்டாள் படிக்கத் தொடங்கினோம். 1960 களில் ஒரு புத்தகம் நண்பர்களிடையே பிரபலமாகத் தொடங்கியிருந்தது. அதை அறிமுகப்படுத்தியது சிவத்தம்பிதான். Paul Potts என்ற எழுத்தாளர் எழுதியDonte Called You Beatrice என்ற நூல் அப்பொழுதுதான் வெளிவந்திருந்தது.சிவத்தம்பி அதைப் படித்துக் கரைத்துக் குடித்துவிட்டார். அவர் படித்த பின்னர் நான் படித்தேன். அதன் பின்னர் நண்பர்கள் படித்தார்கள். புத்தகம் ஒரு சுற்றுப் போனது. திரும்பவும் சிவத்தம்பியிடம் போய்ச் சேர்ந்ததா தெரியாது. அது பரவாயில்லை. அவர் பேசும்போது பல வசனங்களை அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்து விடுவார். அப்படி அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது? டான்ரே என்பவர் 13ம் நூற்றண்டு இத்தாலியின் புகழ்பெற்ற கவி. 9வயதுச் சிறுமியைக் காதலித்து, நிறைவேறாத காதலைப் பெருங்காவியமாகப் படைத்தார். பாரதியாரும் ஒன்பது வயதுச் சிறுமியின் காதலில் விழுந்து கவிதை எழுதியது நினைவுக்கு வரும். Paul Potts என்பவர் நிறைவேறாத தன் காதலைப் பற்றி நூல் முழுக்க புலம்பியிருப்பார். அது ஒரு சுயசரிதைத் தன்மையான புத்தகம். காதலியின் அழகை முடிவில்லாமல் வர்ணித்து தள்ளுவார். அது எங்கள் எல்லோருக்கும் பிடித்துக்கொண்டது.ஏனென்றால் அந்த வயதில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறைவேறாத ரகஸ்யக் காதல் இருந்தது. புத்தகத்தில் ஒரு வசனம் வரும். ‘ காதல் என்பது ஆற்றைப்போல. திருப்பிக் காதலிக்கப்படாத ஒருவனின் காதல் கடலை அடையாத ஆற்றைப் போன்றது.’ சிவத்தம்பி அதை அடிக்கடி தன் பேச்சிலே மேற்கோள் காட்டுவார்.
சிவத்தம்பிக்கு யாழ்ப்பாணத்திலே அவருடைய ஊரிலேயே மிகச் சிறப்பாக கல்யாணம் நடந்தது. நாங்கள் நண்பர்கள் எல்லோரும் கொழும்பிலே இருந்தோம். சிலர் படித்தார்கள், சிலர் வேலையில் இருந்தார்கள். எப்படியும் கல்யாணத்திற்குப் போவதென்று முடிவுசெய்தோம். எல்லோரும் காசுபோட்டு திருமணப் பரிசு வாங்கிக்கொண்டு கொழும்பிலிருந்து போனோம். சிவத்தம்பி மிகவும் மகிழ்வாகக் காணப்பட்டார். நாங்கள் பார்த்தது ஒரு புதிய மனிதரை.எங்களுக்கு விமரிசையாக விருந்து படைத்தார். பக்கத்தில் இருந்து‘சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்’ என்று உபசரித்ததை மறக்க முடியாது.மணப்பெண்ணை எங்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் செய்து வைத்துப் பெருமைப்பட்டார்.
நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மூன்று நாடகங்கள் எழுதினேன்.சிவத்தம்பி அந்த நாடகங்களை இயக்கி மேடையேற்றினார். நாடகம் எழுதுவதுதான் என் வேலையே ஒழிய, அதில் நடிப்பவர்களைத் தெரிவு செய்வது, நடிப்புச் சொல்லிக்கொடுப்பது, காட்சி அமைப்பது அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார். ஒருமுறை எனக்குப் பிடிக்காத ஒருவர்,அவருக்கு நடிப்பு சுத்தமாக வராது, அவருக்கு சிவத்தம்பி முக்கியமான பாத்திரம் ஒன்றைக் கொடுத்துவிட்டார். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவசர அவசரமாக நாடகத்தில் இரண்டாவது சீனை மாற்றி எழுதினேன். மேடையில் கதாநாயகனிடம் அந்தப் பாத்திரம் கன்னத்தில் அடி வாங்கும். பாத்திரமும் எறும்பு சைசுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. ஏதோ என்னால் முடிந்ததை செய்து நாடகத்தைக் காப்பாற்றினேன்.
கொழும்பில் தமிழ் விழா நடந்தபோது சிவத்தம்பி ஒரு நாடகத்தில் நடித்தார்.அதைப் பலர் இப்போது மறந்துவிட்டார்கள். மகாபாரதத்தில் ஒரு பகுதிதான் நாடகம். சிவத்தம்பி பீமனாக வேடம் தரித்தார். அவருடைய உயரமும் அகலமும் அந்தப் பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது.ஆனால் பிரச்சினை அவருக்கு ஒப்பனை செய்தவருக்குத்தான். ஒப்பனைப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பது என்னுடைய பொறுப்பில் விடப்பட்டிருந்தது. பட்டு வேட்டிகளும், பட்டுச் சேலைகளும் பீமனுடைய அரச உடையாகவும், அங்கவஸ்திரமாகவும் மாற்றம் பெற்றன. ஆனால் கழுத்திலும், கையிலும், இடையிலும், மார்பிலும் அணிவதற்கு ஆபரணங்கள் தேவை. அரசகுமாரனின் கம்பீரம் அப்படித்தான் வரும். நான் அப்பொழுது ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தேன். அந்தப் பெண் பரதநாட்டியத்தின் தீவிர காதலி. அவருடைய பரதநாட்டிய நகைகளைக் கடன் வாங்கி ஒப்பனை செய்பவரிடம் ஒப்படைத்தேன். பீமனாக வேடம் போட்டவர் அத்தனை நகைகளையும் உடம்பில் தூக்கிக்கொண்டு, கதாயுதத்தை வலது கையில் தூக்கிக்கொண்டு மேடையில் தோன்றினார். ’கூறைச்சீலை கடன்கொடுத்தவள் பாயுடன் பின்னால் அலைவாள்’ என்பது எங்கள் ஊர் பழமொழி. நான் நாடகத்தைப் பார்க்கவில்லை. நான் கடன் கொடுத்த நகைகளை வைத்த கண் மாறாமல் பார்த்து பாதுகாத்தேன். நகைகளை அதே நிலையில், அதே எண்ணிக்கையில், அதே உருவத்தில் திருப்பாவிட்டால் காதல் சேதமாகிவிடும். அப்படியும் ஒட்டியாணம் இழுபட்டு வேறு உருவத்துக்கு மாறிவிட்டிருந்தது. பீமனுக்கும் ஒட்டியாணத்துக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு இன்றுமட்டும் புரியாத புதிர். இந்த நகை கடன் சம்பவத்தால் காதல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்பு ஒருவாறு சரிபண்ணப்பட்டது.
சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் கனடா வந்திருந்தார்.பேசிக்கொண்டிருந்தபோது தன்னிடம் 250 பொன்னாடைகள் இருப்பதாக அவர் கூறினார். அவர் சொல்லி வாய் மூடூமுன் இன்னொரு எழுத்தாள நண்பர் தன்னிடம் 25 பொன்னாடைகள் இருப்பதாகச் சொன்னார். நாங்கள் ஒருவரும் அவர் வீட்டுக்குப் போய் எண்ணிப் பார்க்கமாட்டோம் என்ற துணிச்சல்தான்.இன்னொருவர், அவர் எழுத்துத் துறைக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது,தன்னிடம் 5 பொன்னாடைகள் சேர்ந்துவிட்டதாகப் பெருமையடித்தார்.அப்பொழுது நான் ’என்னிடம் ஒரு பொன்னாடையும் கிடையாது. அது சரி,பொன்னாடை எப்படியிருக்கும்?’ என்று கேட்டது நினைவுக்கு வந்தது.
இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு ஒரேயொரு முறை பொன்னாடை போர்த்தப்பட்டது. அதைச் செய்தது சிவத்தம்பி. அது நடந்து 25 வருடங்கள் ஆகியிருக்கும். இலங்கையில் ஓர் எழுத்தாளர் சந்திப்பு. 40 பேர் கூடியிருந்தோம். என்னுடைய மூத்த அண்ணர் நான் ஆப்பிரிக்காவில் இருந்து கொழும்பு போன சமயம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்பில் சிவத்தம்பி பொன்னாடை போர்த்தும்போது ஒரு படமும் எடுக்கப்பட்டது.பேப்பரில் படமும் வந்தது. அதைப்பற்றி யாரோ எழுதியும் இருந்தார்கள்.இப்பொழுது அந்தப் படம் இல்லை. ஞாபகத்தில் எஞ்சியிருப்பது சிவத்தம்பி கட்டிப்பிடித்து ‘பூசை, எப்படியிருக்கிறாய்?’ என்று கேட்டதுதான். அவரை வாசல் வரை சென்று ஓட்டோவில் ஏற்றி வழி அனுப்பினேன். அவரிடம் இன்னும் ஏதாவது அன்பாகப் பேசியிருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் கடைசி சந்திப்பு என்பது அப்போது தெரியாது.
எங்கள் நண்பர் குழாத்தில் சிவத்தம்பி உண்டாக்கிய அந்தப் புதிய வார்த்தையை சொல்லிக் கூப்பிடுபவர்கள் இன்று யாராவது மிச்சம் இருக்கிறார்களா எனத் தெரியாது. இல்லையென்றுதான் நினைக்கிறேன்.என்னை ‘பூசை’ என்று அழைக்கக்கூடிய கடைசி ஆளாக சிவத்தம்பி இருந்தார்.இன்று அவர் மறைந்துவிட்டார். அவர் உண்டாக்கிய வார்த்தையும் மறைந்த

Tuesday, 12 July 2011


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி – சில நினைவுகள் : லெனின் மதிவானம்

கட்டுரையில் வரும் கருத்துக்கள் லெனின் மதிவாணம் அவர்களின் கருத்துக்களே தவிர இனியொருவின் கருத்துக்கள் அல்ல
கடந்த புதன் கிழமை (06-07-2011) அன்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி(1932-2011) தமது 79 ஆவது வயதில் நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். அவர் நம் அனைவரினதும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் அறிஞர் ஆவார். அவரது இறப்பு நிகழ்ந்த அன்றைய தினம் சுமார் இரவு 8.30 மணியளவில் சக்தி எப்.எம் செய்தி ஆசிரியர் திரு.கே.எம். ரசூல் ‘பேராசிரியர் சிவத்தம்பி இறந்துவிட்டார். அவர் பற்றிய சில தகவல்களை பெறமுடியுமா’ எனக் கேட்டார். ‘ஐயோ’ என அலறியதாக ஞாபகம். அதிர்ச்சியில் எதையுமே பேச முடியாத நிலை.
தொண்டை அடைத்துப் போயி கண்கள் குலமாகிக் கொண்டிருந்தன. நண்பர் என்னை புரிந்துக் கொண்டவராக ‘உங்கள் நிலை எனக்கு புரிகின்றது. உங்களுடன் பின் தொடர்புக் கொண்கின்றேன்’ என தொலைபேசியை வைத்துவிட்டார். பின் பேராசிரியரின் குடும்ப நண்பரான றமணனுடன் தொடர்புக் கொண்டு செய்தியை உறுதப்படுத்திக் கொண்டேன்.
மிக அண்மைக்காலங்களில் எனது மற்றும் ந.இரவீந்திரன் முதலானோரின் நூல்களை, செய்திகளை, இந்தியாவிலிருந்து பெ.சு.மணி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா முதலானோர் அனுப்பி வைக்கும் கடிதங்கள், ஈமெயில்கள்(பிரதிகள்), சஞ்சிகைகள் என்பனவற்றை பேராசிரியரிடம் கொண்டு சேர்க்கின்ற பணியினையும் அவர் வழங்கும் தகவல்களை, நூல்களை எம்மிடம் சேர்க்கின்ற பணியினையும் நட்புடன் செய்தவர் றமணன்(நானும் அவரும் ஓரே திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள்). எமக்கும் பேராசிரியருக்கும் இடையிலான உறவுப் பாலத்தை பலமுள்ளதாக மாற்றியதில் இவருக்கு முக்கிய இடமுண்டு. இவர் பேராசிரியரின் அரசியல் கலை இலக்கியம் தொடர்பான பார்வைகளில் அல்லது அதன் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டவரல்லர்.
சில சமயங்களில் தொடர்பாடலும் தொழில் நுட்பம் சார்ந்தும் சில சமயங்களில் பேராசிரியர் இவருடன் உரையாடுவதுண்டு. இவர் பேராசிரியரை வளர்ப்பு தந்தையாகவே மதித்து எண்ணி அவரூடனான உறவை பேனிவந்தார். பேராசிரியரை நாங்கள் விமர்சித்தால் இயல்hகவே அவருக்கு கோபம் வருவதை அவதானித்திருக்கின்றேன். எனவே பொதுஜன தொடர்பு சாதன நண்பர்கள் பேராசிரியர் பொறுத்த தகவல்களுக்காக என்னை அழைத்த போது அதனை வழங்குவதற்கு பொறுத்தமான நபராக இவரைக் கருதி அவரின் தொலைப்பேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன்.
பின்னர் எனது அனுதாப செய்தியை கூறுவதற்காக பேராசிரியரின் இரண்டாவது மகள் திருமதி. தாரணி புவனுடன் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டேன். அவர் ஓரவிற்கு எனக்கு அறிமுகமாகியிருந்தார். எனது அனுதாப செய்தியை கேட்டவுடன் அழுதுவிட்டார். பேராசிரியரின் வழித்தடத்தை பின்பற்றி அவரூடனான நேசிப்பை வளர்த்துக் கொண்ட எங்களுக்கே தாங்க முடியாத துன்பம் என்றால் அவரது சொந்த பிள்ளைகளுக்கு அது எத்தகைய இழப்பாக இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பேராசிரியரின் இறுதி கிரிகைகள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 க்கு நடைப்பெறும் என்ற செய்தியையும் கூறினார். இதன் பின்னர் அவரது இறப்புச் செய்தியை நண்பர்களுக்கு தெரிவித்து எமது உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. நீர்வை பொன்னயன், பேராசிரியர் சி;. மௌனகுரு, ஆதவன் தீட்சண்யா, கலாநிதி ந. இரவீந்திரன், தெணியான், ஜோதிகுமார், என பல நண்பர்களுடன் பேசியதாக ஞாபகம். அவ்வாறே சிலர் பேராசிரியரின் இறப்புப் பற்றி என்னுடன் தொiபேசியில் தொடர்புக் கொண்டு தமது துயரங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
அவர்களில் நந்தினி சேவியர், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயகுமார், ஜேம்ஸ் விக்டர், ஹலன், இதயராசன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் அவரது இறப்பு பற்றியும் மற்றும் தமிழியல் ஆய்வுலகில் அவரது சாதனைகள் பற்றியும் பொதுஜன தொடர்பு சாதனங்கள் ஒளி ஒலிப்பரப்பிக் கொண்டிருந்தன.
மனம் எதிலும் ஒட்டாமல் ஒருவித சோர்வு உணர்வுடன் நான் வழiயாக வாசிக்க எழுத உபயோகின்ற மேசையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! நான் சிவத்தம்பியை அறிந்து வாசித்த முதல் நூல் ‘இலக்கியத்தில் முற்போக்குவாதம்’ என்ற அதே நூல் என் புத்தகக் கட்டுகளில் கிடக்கின்றது. துடுப்பு கூட பாரமென்று கரையை தேடும் ஓடங்களாகவே அவை எனக்கு தென்பட்டன. தமிழ் இலக்கியத்தை மார்க்சிய அடிப்படையில் இத்தகைய ஆய்வுகளினூடாகவே புரிந்துக் கொண்டேன். இத்தகைய நிகழ்வுகள்- நினைவுகள் இருபது ஆண்டுகள் பின்னோக்கி சென்று நிலைக்கின்றது.
பேராசிரியரூடனாக அறிமுகம்…!
1990களின் ஆரம்பத்தில் இலங்கை முற்போக்கு எழத்தாளர் சங்கம் இலக்கிய பேரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரங்கிற்கு இந்தியாவிலிருந்து வல்லிக்கண்ணன், பொன்னீலன், தாமரை.சி.மகேந்திரன் முதலானோர் அழைக்கப்படடிருந்தனர். அத்துடன் ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர் கலந்துக் கொண்டனர். ஆய்வவரங்கிற்கு தலைமை தாங்கியர் பேராசிரியர். இவ்வாய்வரங்கில் ஈழத்து கவிதை வளர்ச்சி பற்றி கட்டுரை சமர்பித்த எம்.ஏ. நுஃமான் மஹாகவி பற்றி குறிப்பிடுகின்ற போது ‘ ஈழத்து கவிதை வளர்ச்சிப் போக்கில் முக்கியமான கவிஞரான மஹாகவியை கைலாசபதியும் சிவத்தம்பியும் தமது குழு மனப்பாங்கால் மறைத்து விட்டார்கள்’ என் கருத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து ஈழத்து புனைக்கதை இலக்கியம் பற்றி கட்டுரை சமர்பித்த செ. யோகராசா தமதுரையில் ‘ஈழத்து புனைக்கதை இலக்கியத்தை போன்று, குறிப்பாக நாவல் இலக்கியம் ஈழத்து முத்த விமர்சகர்களின் பார்வை படாமையினாலேயே அது வளர்ச்சியடைந்திருக்கின்றது’ எனக் குறிப்பிட்டார். அன்றைய சூழலில் பேராசிரியர் இ.மு.எ.ச.த்தின் வெளியீடாக வந்த ‘புதுமை இலக்கியம்’ சஞ்சிகையில் ‘எழுத்தாளனும் சித்தாந்ந நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ‘தமிழில் சிறந்த நாவல்கள் தோன்றவில்லை எனவும் அதற்கு கைலாசபதி போன்றோரின் விமர்சனக் கொடுங்கோண்மையும் காரணம்’ என்ற கருத்தினை முன் வைத்திருந்தார்.
இவ்வாய்வுக் கட்டுரைக்கு பின்னர் மதியபோசன இடைவெளி, அதன் பின்னரே சபையோர் கருத்துரை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்தது. இந்த வேளையில் நானும் என்னுடைய நண்பர்களும் பேராசிரியரை கடந்து செல்கின்ற போது ஏதோ ஒரு ஆகர்ஷிப்பில் நான் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்தேன். மிகவும் அமைதியாக இன்முகத்துடன் புன்னகை செய்து இலக்கிய அரங்கு பயனள்ளதாக உள்ளதா எனக் கேட்டார். இளங்கன்று பயமறியாது என்பது போல- சில நேரங்களில் இவ்வகையான மரபுகளை நான் பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.
மஹாக்கவி பொறுத்தும் அவரது கவிதையின் அரசியல் பின்னணிக் குறித்தும் குறிப்பிட்டு அதில் நீங்களும் கைலாசபதியும் சரியான நிலைப்பாட்டினையே சார்ந்துள்ளீர்கள் என்றேன்.அவர் எனது கருத்துக்களை ஆர்வத்துடன் அவதானிப்பதை உணர்ந்து மேலும் நான், அவ்வாறான கருத்துக்கள் நீங்கள் தலைமை வகிக்கின்ற கூட்டத்திலேயே பேசப்படுகின்ற போது மௌனம் சாதிப்பதும் எமது தளத்தினை தகர்த்துவதற்கு சாதமாக அமையும் என்பதுடன் அழகியல் பார்வையில் நின்றுக் கொண்டு சிறந்த நாவல்கள் தோனற்வில்லை எனக் கூறுவதும், மீண்டும் அழகியலுக்கு திரும்ப வேண்டும் என்ற பிற்போக்கான கலை இலக்கிய பார்வையையே வலியுறுத்த முனைவதாக அமையும் என என் கருத்தை வலியுறுத்திய போது ஒரு தாயின் கரிசனையோடு என்னைத் தழுவி அக்கருத்துக்களை கலந்துரையாடலில் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி சபையோருக்காக ஒதுக்கப்பட்ட கலந்தரையாடலில் எனது கருத்துக்களை கூறினேன்.
அன்றைய கூட்டத்தின் நிகழ்வுகள் கருத்துக்கள் ஏனோ ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருந்தது. வீட்டிற்கு செல்வதற்காக மண்டபத்தின் வாயிலை நோக்கிய வந்த சந்தர்ப்பத்தில் தமது தொகுப்புரையில் எமது கருத்துக்களை ஆதரித்து பேராசிரியர் பேசியை கேட்டு மீண்டும் மண்டபத்திற்குள் நானும் எனது நண்பர்களும் வந்து அமர்ந்தோம். அதன் பின்னர் மலையக தமிழாய்ச்சி மநாட்டில் நான் கட்டுரை சமர்த்த போது அவ்வைபவத்தில் பேராசிரியர் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தர்ப்த்தில் எங்களுடன் மிக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பல நாட்கள் பழகியது போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டிருந்தது.
அதன் பின் பேராசிரியருடன் ஏற்பட்ட என் உறவு பன்முகமானது. நேரடியாக அவரிடம் கல்வி கற்காத போதும் ஆசானாக, இலக்கிய வழிக்காட்டியாகவெல்லாம் எமது உறவுகள் தொடர்ந்தன. பொதுவாக தமிழ் இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பான பேராசிரியருடன் கலந்துiயாடுவதுண்டு. பல தகவல்களை அவரது கலந்துரையாடல்களிலிருந்து பெறக் கூடியதாக இருந்தது. அவ்வேறே மலையக இலக்கியம் தொடர்பில் நூல்களோ அல்லது தகவல்கலோ தேவைப்படின் என்னிடம் அவர் கேட்பார். தொலைப்பேசியில் மிக நீண்ட நேரம் உரையாடுவார். மல்லியப்பு சந்தி திலகரின் ‘மல்லியப்பு சந்தி’ கவிதைத் தொகுப்புக்கான முன்னூரையை எழுதுகின்றபோது மிக நீண்ட நேரம் மலையக இலக்கியம்- குறிப்பாக சி.வி.வேலுப்பிள்ளை பற்றி கலந்துரையாடினார்.
சி.வி யிலும் அவரது கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.இதற்காக மல்லியப்பு சந்தி திலகர் பேராசிரியருடன் தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி தந்தார் எனபதனையும் இவ்விடத்தில் நினைவு கூற விரும்புகின்றேன். இறப்பதற்கு ஒரு மாத்திற்கு முன்னர் ‘பாக்கியா பதிப்பகத்தின்’ வெளியீடாக வருவதற்கு தீர்மாணித்திருந்த எனது ‘முச்சந்தி: பார்வையும் பதிவும்’ என்ற நூலுக்கான முன்னுரையை பேராசிரியரிடம் கோட்டிருந்தேன். அது பற்றி கதைப்தற்காக அவரை சந்தித்த போது அந்நூலில் இடம்பெறுகின்ற ‘சி.வி யின் காலமும் கருத்தும’; என்ற கட்டுரையையும், காலந்தோறும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்’ என்ற மீனாட்சியம்மாள் பற்றிய கட்டுரையும் கேட்ட போது தானும் சி.வி பற்றி எழுத முயற்சியுடையவராக இருந்தார் எனவும் அதற்கான சந்தர்ப்பம் கைக்கூடவில்லை எனவும் கவலைப்பட்டார்.
இதனால் அவரது ‘ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள்’ என்ற நூல் நிறைவுப் பெறவில்லை எனவும் குறிபிட்டார். அத்துடன் சி.வி யின் கவிதைகள் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்ததை உணர முடிந்தது.
ஆரம்பத்தில் நான் கொழுப்பிற்கு வருகின்ற போது வெள்ளவத்தையில் இருந்த அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வருவது வழக்கம். நான் கொழும்புக்கு மாற்றலாகி வந்த பின்னர் குறிப்பாக தெஹிவலையில் அவரது இல்லத்திற்கு மிக அருகிலே தங்கியிருந்தமையினால் பேராசிரியர் அவர்களை அடிக்டி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வாறு சந்திக்கின்ற போதெல்லாம் அண்மைக்கால கலை இலக்கியம் தொடர்பான செய்திகளை கேட்டுக் கொள்வார். அவர் நோய்க்கு ஆட்பட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களியெல்லாம் அவர் தொலைப்பேசியின் மூலமாக நண்பர்களுடன் தொடர்புக் கொண்டு உரையாடுவதை அவதானித்திருக்கின்றேன்.
‘மவன் உடலில் எல்லாப் பாகங்களும் செயலற்றுப் போயிவிட்டது. ஆனால் முளை மட்டும் இயங்குகின்றது. அதுவும் நின்று விட்டால் நல்லதுடா’ என அவர் அடிக்கடிக் கூறுவார். நான் அதிர்ந்துப் போவேன். இவ்விடத்தில் முக்கியமானதொரு அம்சத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. அவர் தமது இறுதி மூச்சு வரையில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். வாசிப்பு எழுத்து என்பதும் ஒரு அரசியல், சமூகச் செயற்பாடாகும். இந்தப் பின்னணியில் தமிழ் ஆய்விற்காக அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதனூடாகவே அவருக்கான சமூக அங்கிகாரம் கிடைத்தது. இது பலருக்கு அலர்ஜியாக அல்லது அவர்களின் மூக்கை சினங்க வைப்பதாக இருந்தது. இன்றுவரை எஸ்.பொ முதலானோர் இத்தகைய விமர்சனங்களையே முன் வைத்து வருகின்றனர். பொறாமையும் தனிமனித குரோதங்களும் இவர்களது எழுத்துக்களில் முனைப்புற்றிருப்பதனைக் காணலாம்.இவரது ‘வாரலாற்றில் வாழ்தல்’ என்ற இரண்டு பாகங்களை கொண்ட நூலில்(900 பக்கங்களுக்கு மேற்பட்டது) இந்நப்பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.
பேராசிரியரின் ஆராய்ச்சி தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல்வாதத்தைக் கொண்ட அவரது முறையியலே ஆகும். அவருடைய முறையியல் பல்தறைசார்பானது. இந்த முறையிலும் ஆய்வுப் பார்வையும் பேராசிரியரிடம் சிரமபடாமல் எளிதானதொரு இயல்பாக காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற தமிழ் சூழலுக்கு ஏற்றவகையில் பியோகித்து ஆய்வுகளை வெளிக் கொணர்ந்ததார். தமிழ் புத்தி ஜீவிகள் பலர் தமிழ் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோதித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டு சென்றது. தமிழ் சமூகத்தில் சாதி மதம் இனம் மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதை புரிந்துக் கொள்வதன் மூலமே அம்மக்களை அணித்திரட்டுவதற்கான மார்க்சியத்தை கண்டடைய முடியும். பேராசிரியர் இதனைப் புரிந்துக் கொண்டு தமிழியல் ஆய்வினை மேற்கொண்டார். அத்துடன் தமிழர் பண்பாட்டில் கலை இலக்கியம், நாடகம், வரலாறு, சமூகம், கல்வி, தொடர்பாடல் மற்று ஊடக நெறி என பல்துறை சார்ந்த விடயங்களில் தமது பார்வையை செலுத்தி அதன் ஒளியிலேயே தமது ஆய்வுகளை முன்வைத்தார்.
அவரது ஆய்வுகள் இன்றுவரை பல்துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் வழிக்காட்டியாக அமைந்துள்ளது. அந்த வகையில் கைலாசபதி சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது.
எண்பதுகளுக்கு பின்னர் கேவலாமானதோர் அரசியல் பின்னணியில் மோசமான சமூக நிலைமைகள் தோன்றியது இலங்கைக்கு மாத்திரம் உரித்தானதொன்றல்ல. இந்தச் சூழலில் பேராசிரியரின் பார்வையும் மாற்றமடைந்து. இக்காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் அவரது அடிச்சுவட்டை பின்பற்றி வந்தவர்கள் அவருடன் முரண்பட்டனர். புலிகள் இயக்கத்தினால் கொண்டு குவிக்கப்பட்ட நேச சக்திகள் பொதுமக்கள் போக பாஸிசத்தின் புள்ளியை நாம் தரிசிக்க தவறவில்லை. இவ்வியக்கம் தமிழ் மக்களின் போராட்டங்களை கூனி குறுக்கியதுடன் இறுதில் படுத் தோல்வி அடையவும் செய்தது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இப்போக்கில் வளர்த்தெடுத்த அமெரிக்கா தமிழ் மக்களை நடுத்தெருவுக்கே கொண்டு வந்தது விட்டது. இக்காலக்கட்டத்தில் பேராசிரியர் இவ்இயக்கத்தின் ஆதரவாளராக மாறினார் என்பது துரதிஸ்ட வசமாகதொரு நிகழ்வாகும். இது குறித்து பல முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் அவரை விமர்சனத்திற்குட்படுத்தினர். எனது விமசனமும் முரண்பாடும் கூட இந்த பின்னணியில் எழுந்ததாகும்.
அதேசமயம் இதே காலப்பகுதியிலும் தொடர்ந்து வந்த காலப்பகுதியிலும் தமிழியல் சார்ந்து அவர் செய்த ஆராய்ச்சிகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன. அவை மக்களை தழுவியதாக அமைந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும். பேராசிரியரின் இந்த பங்களிப்பை நாம் தொடர்ந்து மதித்து வந்தோம்.
சுpல மாதங்களுக்கு முன் கலாநிதி ந. இரவீந்திரனின் ‘திருக்குறலில் கல்விச் சிந்தனைகள்’ என்ற நூல் பற்றிய விமர்சன நிகழ்வொன்றினை வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி விரிவரையாளர்களும் மாணவர்களும் ஒழுங்கமைத்திருந்தனர். ஆவ்வரங்கில் பேராசிரியரும் வாழ்த்துரை ஒன்றினை எழுத்து மூலமாக வழங்குவதாக ஒப்புக் கொண்டிருந்தார். அவ்வாழ்துரையினை பெறுவதற்காக நானும் இரவீந்திரனும் வவுனியா செல்வதற்கு முதல் நாள் பேராசிரியரை சந்தித்தோம். அந்நூலை மிக கவனமாக வாசித்து காட்டும் படி கூறிய அவர் அதில் முக்கியமாக இடம் பெறும் கருத்துகளை எங்களிடம் விசாரித்தார். பின்னர் மிக நிதானமாக அவர் தமது கருத்தினை கூற இரவீந்திரன் எழுதினார். மூன்று நான்கு முறைகள் வாசித்து திருத்தம் செய்த பின்னர் தமது கையெழுத்திட்டு தந்தார். அதன்பின் எனது ‘மலையகம் தேசியம் சர்வதேசம்’ என்ற நூலை கையளித்த போது அதிலடங்கிருந்த கட்டுரைகளின் மையக் கருத்தினை கேட்டு வினாவினார். கைலாசபதி பற்றி எழுதியிருந்த கட்டுரையொன்றில் பேராசிரியர் அண்மை காலத்தில் கொண்டிருந்த அழகியல் பார்வைக் குறித்தும் அந்நூலில் விமாசனம் செய்யப்பட்டிருந்தது. பொறுமையாக இவற்றையெல்லாம் கேட்ட பேராசிரியர் மிக அமைதியாக ‘மவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய யாவற்றையும் ஓரளவு சாதித்து விட்டேன் அதற்கான அங்காரமும் கிடைத்தது. அதே மாதிரி வாங்க வேண்டிய அடிகளையும் தாக்குதலையும் வாங்கிவிட்டேன். என் பிள்ளைகள் நீங்கலெல்லாம் தாக்கும் போது தாங்க முடியல்லையடா’ இந்த வார்த்தைகள் என் நெஞ்சை சுட்டன. உண்மைதான்! நாங்கள் முன் வைத்த விமர்சனங்களை விட அவற்றில் அடங்கியிருந்த வார்த்தைகள் அவரது மனதை வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் முகில்களை கிழிப்தற்கென்றே கரங்களை உயர்த்திய பேராசான் சிவத்தம்பி போன்றவர்களின் வாரிசுகள் அல்லவா நாங்கள். அந்த பாதையில் வந்த நாங்கள் அவற்றை உருவாக்கியவர்களின் பாதை மாறி போகின்ற பொழுது அவர்களால் உருவாக்கப்பட்ட பார்வையே அவர்களை தாக்கும் என்ற சமூக நியதியை இந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக எனக்கு அறிய முடிந்நது.
இவ்விடத்தில் பிறிதொரு விடத்தினையும் பதிவாக்க விரும்புகின்றேன். எனது விமர்சனங்கள் ஆய்வுகள் சில சமயங்களில் பேராசிரியரின் கருத்துக்களுடன் முரண்பட்டிருக்கும். அதற்காக பேராசிரியர் என்னுடன் தனிப்பட்டவகையில் கோபம் கொண்டவராக இருந்ததாக நான் அறியவில்லை. அவர் பல சந்தர்ப்பங்களில் அவரது கட்டுரைகளில் எனது எழுத்துக்கள் பற்றி சிறப்பாகவே குறிபிட்டிருக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு; பின் கண்டி திருத்துவ கல்லூரி ஆசிரியர் இரா.சிவலிங்கம் (எனது ஆசிரியர்களில் முக்கியமானவர்) எனது அலுவலகத்தில் சந்தித்தார். அவர் பேராசிரியருடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப்பவர். ‘சில வருடங்களுக்கு முன் உங்களின் கட்டுரைகளை வாசித்த பேராசிரியர் சிவத்தம்பி உங்கள மீது மரியாதை வைத்திருக்கின்றார் எனவும் உங்களை ஒரு மறை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நான் உங்களை சந்திக்க முடியாது போனமையினால் இச்செய்தியை அப்போது கூற முடியாத போயிவிட்டது. இப்போது உங்களுக்கு பேராசிரியருடன் நிறை தொடர்பிருக்கும்’எனக் குறிப்பிட்டார். நம்மில் சில தலைக்கொழுத்த மேதாவிகளும் இலக்கிய புடுங்கிகளும் தமது குழு சார்ந்த இழிபறி நிலையின் காரணமாக வேண்டாதவர்கள் கையில் கஞ்சா பொட்டலத்தை திணித்து சிறையிலிடும் உயர்ந்த பாராம்பரியத்தை காவல் துறையினரிடமிருந்து கற்ற இக்கனவான்கள் எழுத்தாளனை தனிமைப்படுத்துவதற்கும் தாக்ககுவதற்கும் இக்கைங்காரியத்தை செய்து வருகின்றனர். தமது அணியை சாராதவர்களையெல்லாம் பிழையாக காட்ட முனைகின்றர்.
ஒரு படைப்பையோ ஆய்வையோ நிராகரிக்க முடியாக சந்தாப்பத்தில் ஆசிரியர் மீதான அவதூரையோ அல்லது தனிமனித தாக்குதல்களையோ மேற்கொள்கின்றர். புனைப்பெயர்கள் இவருகளுக்கு காதமாகிவிடுகின்றது. இந்தப் பின்னில் ஒரு ஆய்வை மேலோட்டமாக படித்துவிட்டு எழுதுகின்ற குறிப்புகள், நண்பர்களுக்கு எந்தினோ அல்லது ஆராய்ச்சிமணியோ என்ற பெயர்களில் எழுதுகின்ற காதல் கடிதங்கள், வாய்மொழி கதைகள் எல்லாம் இவர்களது நேர்மையீனத்தைக் (தாய்கள் மாட்டிக் கொள்ளாத வகையில்) காட்டுகின்றது. இந்த பண்பை நான் பேராசிரியரிடம் ஒருபோதும் கண்டதில்லை.
பிறிதொரு சந்தர்ப்பத்தில் சாருமதியின் ‘அறியப்படாத மூங்கில் சோலை’ தொகுப்பு வெளிவந்த போது அதுப் பற்றி நீண்ட கட்டுரையொன்றினை பேராசிரியர் தினக்குரல் வாரவெளியீட்டில் எழுதியிருந்தார். அக்கட்டுரையில் இதுவரை யாரும் சாருமதி பற்றிய தகவல்களை வெளிக் கொணரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் செ.யொகராசா கூட இதுப்பற்றி அக்கரை செலுத்த வில்லை என்ற ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு பின்னர் பேராசிரியரின் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அடே தம்பி இப்பதான் அந்தனி ஜீவா டெலிபோனில் கதைத்தார். உமது நூலில் சாருமதி பற்றி எழுதியிருக்கிறதாவும், பல தொலைகாட்சி நிகழ்வுகளிலும், இலக்கிய கூட்டங்களிலும் பேசிவருவதாகவும் அறிந்தேன். சாருமதி பொறுத்த என்னிடம் கூறியவர்கள் இதுவரை இது தொடர்பான பதிவுகள் எதும் வரவில்லை என்ற தகவலையே தந்திருந்தனர். நான் தவறு செய்திட்டன் அப்பு’ என மனவருத்தப்பட்டார். பின்னர் சாருமதி பொறுத்து எங்களது உரையாடல்கள் தொடர்ந்தன. சாருமதியின் கவிதை ஆளுமைகள் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் அதன் பலவீனமான பக்கங்கள் குறித்தும் நீங்கள் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குறிப்பாக நக்ஷல்பாரி இயக்கம்- அழித்தொழிப்பு நடவடிக்கைகள் – அதன் தலைவர் சாருமஜிம்தார் குறித்தெல்லாம் கருத்து மயக்கங்கள் சாருமதியில் இருந்ததை அவரது கவிதைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதனை நீங்கள் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனங்களில் ஒன்றாக காண்பதில் நாங்கள் முரண்படுகின்றோம் என்பதையும் அவரிடம் கூறினேன். புலவிடங்களில் என்கருத்துடக்களுடன் உடன்பட்ட அவர் சீனசார்பு பற்றிக் குறிப்பிடுகின்றபோது மொஸ்கோ சார்பே சரியான நிலைப்பாட்டினை கொண்டிருந்தது எனவும் அது தொடர்பில் ஆழமாக கற்கும்படியும் வலியுறுத்தினார்.
பேராசிரியருக்கு தமிழக அறிஞர்களிடையே பெரும் மதிப்பிருந்தது என்பதை யாவரும் அறிவோம். இ. மு.எ.ச. ஒழுங்கமைத்திருந்த பேரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழக எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், பொன்னீலன், தாமரை சி. மகேந்திரன் முதலானோர் மிக உயர்ந்த மரியாதையை பேராசிரியர் மீது வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மலையகத்திற்கு வந்த போது அவர்களை சந்தித்து கதைத்ததில் அறியமுடிந்து. அப்போது தமிழகத்தில் தாமரை மகேந்திரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த தாமரை இதழில் ‘பேராசிரியர் கைலாசபதி பற்றிய ஆய்வுகளும் வக்கிரங்களும்’ என்ற தலைப்பிலான கட்டுரையொன்றினை எழுதியிருந்தேன். அக்கட்டுரையில் பேராசிரியர், கைலாசபதியின் நாவலிலக்கிய விமர்சனம் தொடர்பிலும் ஜெயமோகன் பற்றி விமசர்சனம் தொடர்பிலும் முன்வைத்திருந்த முரண்பாடான கருத்துக்களை மறுத்திருந்தேன். கட்டுரையை பிரசுரித்த இதழ் குழுவினர் அந்த பகுதியை மட்டும் நீக்கியிருந்தனர். அந்தளவிற்கு அவர்கள் பேராசிரியர் மீதான மரியாதை மட்டுமன்று அவருக்கு வழிப்பாடு செய்கின்றவர்களாகவும் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. மிக அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் என்னுடன் தங்கியிருந்த போதும் மற்றும் நண்பர் கண்டிபன் வீட்டில் தங்கிய நாளிலும் எமது உரையாடல்கள் இலக்கியம் குறித்து பல கோணங்களிலான உரையாடலாக தொடர்ந்தது. இவ்வுரையாடல்களின் போது பேராசிரியர் பொறுத்த விமர்கனங்களும் எழுந்தன. அ.மார்க்ஸ் பேராசிரியரை தங்களுடைய பேராசானாகவே மதித்த அவர் தமிழகத்தில் புதிய தலைமுறையினருக்கு வழிக்காட்டியாக பேராசிரியர் வழங்கிய பங்களிப்பினை நன்றியுணர்வுடன் நினைவுக் கூர்ந்தார். அத்துடன் பேராசிரியர் செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பாக தமது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். அந்தவகையில் பேராசிரியர் ஈழத்து எழுத்தாளுர்களுக்கு மட்டுமன்று தமிழக எழுத்தாளர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்திருந்தமை அவரது ஆளுமைக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் பேராசிரியர். யாழ்.கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் தமது அறிவு-அற்றல்-செயற்பாட்டால் உலக தமிழறிஞராக உயர்ந்துள்ளார். எனது ‘முச்சந்தி: பார்வையும் பதிவும்’ நூலுக்கான முன்னுரையை அவரிடம் கேட்டிருந்தேன். உடல் நிலை மிக மோசமாக பாதிப்படைந்து வந்தனால் உடன் எழுதிதர முடியவில்லையே என்ற மனவருத்தப்பட்டார் என்பதை நண்பர்கள் றமணன், மல்லியப்பு சந்தி திலகர் என்னிடம் கூறினார்கள். இது தொடர்பில் என்னிடமும் ஓரிரு தடவை தொலைப்பேசியில் கதைத்திருந்தார். அந்த வரப்பிசாதம் கிடைகாமலே போயிவிட்டது. அந்தவகையில் நான் பெரும் துரதிஸ்டசாலியே.
இரவுபகல் ஓய்வு ஒழிச்சலின்றி தமிழியல் ஆய்வுக்காக தன்னை அர்பணித்த பேராசிரியர் தான் உறங்குவதற்கு போதுமான நேரத்தை பெறுவதற்காக தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.
பேராசிரியர் நடந்து வந்த பாதை இன்று வெறிச்சோடி கிடக்கின்றது..! அது யாராலும் நிரப்ப முடியாத ஈடு இணையற்ற பணியாகும். அவரது இழப்பு அவரது குடும்பத்துடன் மட்டும் அடங்குவதன்று. அவரது இழப்பால் துயறுரும் சகலருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
வேதனைகளை சுமந்துக் கொண்டு…

பல்துறைப் புலமையாளனுக்கான ஓர் அஞ்சலிக் குறிப்பு


நேற்று இருந்த ஒருவர் இன்று இல்லை என்னும் பெருமை இந்த உலகுக்கு உண்டு என்கிறார் வள்ளுவர். இது ஒரு சுடலை ஞானம் அல்ல. நிலையாமை என்னும் வாழ்க்கை யதார்த்தத்தைக் கவித்துவத்தோடு அழுத்தி உரைக்கும் கூற்று. இது எவ்வளவு உண்மையாயினும், நம் உறவினர்கள், நண்பர்கள், நமக்கு மிக வேண்டியவர்கள் மரணிக்கும்போது உடனடியாக நம்மால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதுதான் யதார்த்தம் என்று நம்மால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து, துக்கத் திலிருந்து விடுபட நமக்கு அவகாசம் தேவைப்படுகிறது.
பேராசிரியர் சிவத்தம்பியின் மரணச் செய்தியை நண்பர் குமரன் தெரிவித்த போது ஒருகணம் நான் உறைந்து போனேன். அவர் சுகவீனமாய் இருக்கிறார் என்பது தெரியும், இன்னும் நீண்டகாலம் அவர் வாழமுடியாது என்பதும் தெரியும். எனினும் இவ்வளவு விரைவில், சடுதி யாக அவர் மறைந்துவிடுவார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி அவரது எண்பதாவது பிறந்த நாளை முன் னிட்டு அவரது ஊரவர்கள், அவரது பள்ளி தோழர்கள், கரவை விக்னேஸ்வராக் கல் லூரி பழைய மாணவர்கள் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஒரு விழா எடுத்தார்கள்.
'கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ் அறுவடை' என்ற பெயரில் பேராசி ரியர் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசவேண்டும் என பேராசிரியர் பெரிதும் விரும்பினார். இரண்டு மாதங்களுக்கு முன் னரே தொலைபேசி யில் தொடர்புகொண்டு நீ கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது நட்புரிமையுடனான அவரது வேண்டுகோள்.
கூட்டத்துக்குச் சில நாட்களுக்கு முன் அவர் முதுகு வலி காரணமாக படுக்கையிலிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிர்த்தேன். "நீங்கள் சுகவீனமாய் இருக்கிறீர்களே கூட்டம் ஒத்திவைக்கப்படுமா" என்று கேட்டேன். "கூட்டம் நடக்கும், நீ கட்டாயம் வா" என்பதுதான் அவரது பதில். கூட்டத்துக்கு அவரால் வரமுடியாது என் பதை அறிந்து, கூட்டம் தொடங்கமுன் அவ ரது வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
கட்டிலைவிட்டு எழும்பி இருக்க முடியாது என்பதைத் தவிர அவர் வழக்கமான சிவத்தம்பியாகவே என்னுடன் பேசினார். அவரது குரல், நினைவாற்றல், சிந்தனைத் தெளிவு என்பன வழக்கம்போ லவே இருந்தன. அவரது முதுகுவலி தற் காலிகமானது, விரைவில் கட்டிலில் எழும்பி உட்கார்வார் என்ற எதிர்பார்ப்புடனேயே நான் கூட்டத்துக்குச் சென்றேன். அன்றை யக் கூட்டம் சிறப்பாகவே நடைபெற்றது.
சிவத்தம்பியால் அங்கு வரமுடியாது போயினும், அவரது குடும்பத்தினர் - மனைவியும் மூன்று பெண் மக்களும் - அங்கு சமூகம ளித்திருந்தனர். பேராசிரி யரின் முக்கியத்து வம் பற்றிய எனது கருத்தை சுருக்கமாக சுமார் இருபது நிமிடம் அளவு பேசியிருப் பேன். இரவே கண்டிக்குத் திரும்பவேண்டி இருந்ததால் கூட்டம் முடியமுன் நான் புறப் பட்டுவிட்டேன். அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.
தொலை பேசியில் பேச நினைத்தும் முடியவில்லை. ஆறாம் திகதி காலை வேறு ஒரு விடய மாக பேராசிரியர் கனகரத்தினம் என்னுடன் தொடர்புகொண்டபோது பேராசிரியர் சிவத்தம்பியுடன் பேசுமாறு நான் அவருக்குக் கூறினேன். அன்று பகலே தான் அவருடன் தோலைபேசியில் பேசி யதாக அவர் தெரிவி த்தார். ஆனால் அன்று இரவு எட்டரை மணிக்கு பேராசிரி யர் காலமானதாக குமரன் தெரிவித்தபோது அது பேரதிர்ச்சியா கவே இருந்தது.
கடந்த ஒரு வருடமாக மறைந்த பேரா சிரியர் நண்பர் சோ. கிருஷ்;ணராஜhவுக்கு ஒரு நினைவுமலர் வெளியிடும் முயற்சியில் பேராசிரியர் சிவத்தம்பியின் ஆலோசனையுடன் அவருடன் சேர்ந்து செயற்பட்டிரு க்கிறேன். கிருஷ்ணராஜhவின் மாணவன் இன்பமோகனும் எங்களுக்கு மிகவும் உதவி யாக இருந்தார்.
என்னையே அதன் பதிப்பா சிரியராக இருக்குமாறு பேராசிரியர் கேட்டுக் கொண்டார். இல்லை நாம் மூவரும்தான் பதிப்பாசி ரியர்கள் என்று நான் சொல்லி விட்டேன். "மெய்யியற் சிந்தனைகள்" என்ற அந்நினைவுமலரின் அச்சுவேலைகள் கடந்த வாரம்தான் முடிவடைந்தன. எதிர்வரும் 16ஆம் திகதி அதன் வெளியீட்டு விழாவை நடத்தத் தீர்மானித்தோம்.
விழா ஏற்பாடுகளைக் குமரன் மேற்கொண்டிருந்தார். பேராசிரி யரின் திடீர் மறைவினாலும் வேறு சில காரணங்களாலும் அதை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணராஜhவு க்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு ஒன்றில் பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு குறிப் பிட்டிருக்கிறார்.
"நான் இல்லாதபொழுது யார்யாரெல்லாம் என்னைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேனோ, விரும்பி னேனோ அவர்கள் என்னை முந்திவிடுகிறார்கள், நான் தனிமைப்படுகிறேன்." இப் பொழுது அவரது தனிமை முடிந்துவிட்டது. அவரைச் சார்ந்தவர்கள் தனிமைப்பட்டுவிட் டார்கள்.
பேராசிரியர் சிவத்தம்பி 1932 மே மாதம் 10ஆம் திகதி கரவெட்டியில் பிறந்தார். இவரது தகப்பனார் பண்டிதர், சைவப் புல வர் கார்த்கேசு ஒரு தமிழாசிரியர். தாயார் வள்ளியம்மை. சிவத்தம்பியின் ஆரம்ப, இடைநிலைக் கல்வி கரவெட்டி விக்னேஸ்வ ராக் கல்லுரியில் நிகழ்ந்தது. உயர் இடை நிலை அல்லது பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வியை அவர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் பெற்றார்.
அப்போது கல்லூரி அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ். "விக்னேஸ்வரா வளர்த்துவிட்டது. ஸாஹிராவிலேயே நான் என்னை அடையா ளம் கண்டுகொண்டேன்" என தன் இளமை காலம் பற்றி சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். ஸாஹிராவிலிருந்து 1954ல் தன் பட்டக் கல்விக்காக அவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் (இப்போதைய பேராதனைப் பல் கலைக் கழகம்) சேர்ந்தார். ஏனைய தமி ழ்ப் பேராசிரியர்களைப்போல் தமிழை ஒரு சிறப்புப் பாடமாகப் பயின்றவர் அல்ல சிவத் தம்பி. பதிலாக, வரலாறு, பொருளியல், தமிழ் ஆகிய மூன்று பாடங்களைக் கற்று ஒரு பொதுப் பட்டதாரியாக 1956ல் வெளியேறினார்.
1963ல் தமிழில் எம். ஏ. பட்டம் பெற்றார். 1970ல் பேர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் உலகப் புகழ்பெற்ற பேராசி ரியர் ஜோர்ஜ் தொம்ஸனின் வழிகாட்டுதலில் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் பொருள் பற்றி ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் பெற்றார்.
தான் கற்ற கொழும்பு ஸாஹிராக் கல் லூரியில் ஒரு ஆசிரியராகவே 1956ல் அவர் தன் கல்விப் பணியைத் தொடங்கினார். வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களை அவர் அங்கு கற்பித்தார். இன்று இலங்கையில் பிரபல கல்வியாளர்களாகவும் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளாகவும் விளங்கும் பலர் அக்காலத்தில் சிவத்தம்பியிடம் கற்றவர்களே.
இவர்களுள் ஏ. சி. எல். அமீர் அலி, எஸ். எச். எம். ஜமீல், எம். எம். '{க்ரி ஆகியோர் இன்று இலங்கை யில் மிகப் பிரபலம் பெற்றவர்கள். சிவத் தம்பி ஸாஹிராவில் கற்ற, கற்பித்த காலமே இஸ்லாம் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, அரசில் பற்றியும் அவருக்;கு இருந்த ஆழமான புரிதலுக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். 1961ல் அவர் ஸாஹிராவில் இருந்து விலகி, இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இணைந்தார். அவர் அங்கு பணியாற்றிய சுமார் ஐந்தாண்டு காலம் மொழிபெயர்ப்புத் துறையில் அவரது அனுபவமும் அறிவும் ஆற்றலும் வளர்வதற்கு துணையாக அமைந்தது.
பல்கலைக் கழக ஆசிரியராக அவரது பணி 1965ல் வித்தியோதய பல்கலைக்;கழ கத்தில் (இப்போதைய சிறி ஜயவரத்தனபுர பல்கலைக்கழகம்) விரிவுரையாளராக இணைந்ததுடன் ஆரம்பித்தது. இப்பல்கலைக் கழகம் மிகப்பெரும்பாலும் சிங்கள மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டது.
முற்றிலும் பௌத்த பின்னணியில் உருவாகியது. இங்கு அவர் 13 ஆண்டுகள் சிங்கள மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அக்காலத்தில் ஒரு இடதுசாரியாக வளர்ச்சிபெற்றிரிருந்த சிவத்தம்பி சிங்கள சமூகத்தையும் அதன் அரசியல் அபிலா சைகளையும் இடதுசாரி நோக்கில் புரிந்துகொள்வதற்கும், தேசிய ஒருமைப்பாடு பற்றிச் சிந்திப்பதற்கும், சிங்கள மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் இக்காலகட்டம் அவருக்கு உதவியது எனலாம்.
இப்பல்கலைக் கழகத்திலேயே 1976ல் இணைப் பேராசிரியராக அவர் பதவி உயர்ச்சிபெற்றார். இங்கு பணியாற்றிய காலத்திலேயே விடுப்பில் இங்கிலாந்து சென்று தன் கலாநிதிப் பட்டக் கல்வியை யும் பு+ர்த்திசெய்தார். யாழ்ப்பாணத்தை விட்டு நீண்டகாலம் வெளியிலேயே வாழ்ந்த சிவத்தம்பி 1978ல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்ற வந்தார். 1996ல் ஒரு சிரேஷ்ட பேராசிரி யராக தன் பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை அவர் அங்கேயே பணியாற்றினார்.
சிலகாலம் தமிழ்த் துறைத் தலைவராகவும் சிலகாலம் நுண்கலைத் துறைத் தலைவராகவும் அவர் அங்கு பணிபுரிந்திருக்கிறார். அவரது பணி ஓய்வின்பின் அவரது தகுதியையும் சேவை யையும் கௌரவி த்து தகைசால் ஓய்வுநிலைப் பேராசிரி யராக (Professor of Emeritus (இக்கலைச்சொல் அவரே உருவாக்கியது)) நியமித்தது. தன் பணியி லிருந்து ஓய்வுபெற்ற பிறகு தானும் ஒரு புலம்பெயர்ந்தவராக மரணிக்கும் வரை அவர் கொழும்பிலேயே வாழ்ந்துவந்தார்.
மார்க்சிய சிந்தனையில் அவருக்கு இருந்த ஈடுபாடு பிற்காலத்தில் பல்துறை ஆய்வாளராக அவர் வளர்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், வரலாறு என்பவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளையும் ஊடாட்டத்தையும் அவர் தன் ஆய்வுகளில் விளக்க முயன்றார். சமுகவியல் வரலாற்றுப் பார்வை அவரது ஆய்வுகளின் அடிச்சரடாக உள்ளது.
இந்தவகையில் தமிழியல் துறையின் செழுமைக்கு பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு முக்கியமானது. மரபுவழித் தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் தமிழையும,; தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றையும் தமிழ்த் தேசியக் கருத்துநிலைக்குள் இருந்தே பார்த்தனர். அவர்களது ஆய்வுகள் உள்முகப் பட்டதாக தமிழ்ப் பழமை, தமிழ்ப் பெருமை ஆகியவற்றைத் தேடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.
வையாபுரிப்பிள்ளையும், தெ. போ. மீனாட்சிசுந்தரம், வ. ஐ. சுப்பிரமணியம் போன்ற மொழியி லாளர்களுமே தமிழியல் ஆய்வில் அறிவியல் பார்வையை முதல்முதல் பிரயோகித்தவர்கள் எனலாம். இவர்களைத் தொடர்ந்தே மார்க்சியத் தமிழறி ஞர்கள் தமிழியலாய்வை வேறு ஒரு கட்டத்துக்கு வளர்த்தொடுக்க முயன்றனர். கைலாசபதியும் சிவத்தம்பியும் அவர்களுள் மிக முக்கியமானவர்கள். சமூக, அரசியல், வரலாற்றுப் பின்புலத்தில் இவர்கள் தமிழியல் ஆய்வை முன்னெடுத்தனர். இவர்களது ஆய்வு முடிவுகள் சிலபற்றி விமர்சனங்கள் இருப்பினும், இவர்களது ஆய்வுப் பார்வையின் முக்கியத்துவத்தை யாரும் நிராகரிக்க முடியாது.
இப்பின்னணியிலேயே பேராசிரி யர் சிவத்தம்பியின் சங்க இலக்கிய ஆய்வுகளை நோக்க வேண்டும். இவரது ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகளாக மட்டுமன்றி சமூகவியல் ஆய்வுகளாகவும் அமையக் காணலாம். இலக்கியத்தின் ஊடாக சமூகத்தை அல்லது சமூகத்தின் ஊடாக இலக்கியத்தை அவர் பார்க்கிறார். முல்லை சான்ற கற்பு என்பது இவ்வகையில் அவரது முக்கியமான ஆரம்பகாலக் கட்டுரைகளுள் ஒன்று.
பண்டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் என்னும் தலைப்பிலான இவரது ஆங்கில நூல் இத்தகைய கட்டுரைகள் பலவற்றைக் கொண்டது. சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும், சங்ககால வரலாறும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளும், பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் முதலிய சிவத்தம்பியின் நூல்கள் இவ்வகையில் மிக முக்கியமானவை.
கடந்த சுமார் 45 ஆண்டுகால அவரது பல்கலைக் கழகச் சேவையில் அவர் ஏராளமான மாண வர்களை உருவாக்கியிருக்கிறார். தன் கல்விச் சேவைக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் அதிகம் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். அதே அளவு தனக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகியிருக்கிறார். விமர்சனத்துக்கு ஆளாகாத ஒரு மனிதரை நாம் உலகத்தில் காண்பது அபு+ர்வம். ஒருவருடைய பங்களிப்பு எவ்வளவு தூரம் பயனுடையது என்பதைக் கொண்டே நாம் ஒருவரை மதிப்பிட வேண்டும்.

தமிழியலின் பிதாமகன்



பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவினால் இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் தெரிவிக்கப்படுகின்றது. மிக முக்கியமாக தமிழியல் ஆய்வுலகம் தனது ஒரு மூத்த தமிழியல் பிதாமகனை இழந்து தவிக்கின்றது. தமிழியலை ஆய்விலும் நவீன தமிழிலக்கிய விமர்சனத்திலும் பல ஏற்றங்களையும் எச்சங்களையும் கண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஏறத்தாழ ஐந்து தசாப்தகாலமாக இலங்கைப் பல்கலைக்கழக முறைமையிலும் தமிழாய்வுத்துறை, இலக்கிய விமர்சனத்துறை என்பவற்றில் அவர் கொடிகட்டிப் பறந்தார்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, அமெரிக்கா. இங்கிலாந்து, ஸ்வீடன் என பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றி இலங்கைக்குப் புகழ் சேர்த்தவர் பேராசியர்.
தமிழியல் ஆய்வுத்துரையில் அவரது ஆய்வு முறைகளும் அணுகுமுறைகளும், வேறுபட்டவை. காலங்காலமாக இருந்து வந்த மரபுவழி அணுகுமுறைகளைக் கைவிட்டு விஞ்ஞானப் பாங்கான முறையியலைப் பின்பற்றி தமிழிலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட வையாபுரிப்பிள்ளையின் வழித்தடத்திலிருந்து தமிழியல் ஆய்வை மேலும்பல உச்சங்களுக்கு இட்டுச்சென்றவர் பேராசிரியர் தமிழிலக்கிய ஆய்வில் இரசனை நோக்கையும், மிகைப்படுத்தலையும் ஒருபுறம் வைத்துவிட்டு, பண்டைத் தமிழிலக்கியங்கள் எழுச்சி பெறப் பின்புலமாக அமைந்த சமூக, பொருளாதார வரலாற்றுத் தளங்களை ஆழ்ந்து நோக்கி தமிழியல் ஆய்வில் பன்னெறி அணுகுமுறையை அறிமுகம் செய்தவர் பேராசிரியர்.
அன்னாரின் பல்வகை தமிழ்ப் பணிகளில் நான் நேரில் கண்டு அனுபவித்த சிலவற்றைக் கூறுதல் பொருத்தமுடையதாகும். ஐரோப்பாவில் பிறந்து வாழுகின்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழிக்கல்வியை வழங்கப் பெற்றோர்கள் விரும்பினாலும், அதற்கான பாடநூல்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இலங்கை மற்றும் தமிழகப் பாடநூல்கள் வடிவமைப்பிலும், அச்சிலும் ஐரோப்பிய பாட நூல்களை ஒத்திருக்கவில்லை. இதனால் ஐரோப்பிய தமிழ்ப் பிள்ளைகளின் தேவைகளையும், ஐரோப்பிய சூழலையும் பிரதிபலிக்கும் நவீன தமிழ்ப் பாடநூல்களை எழுதி வடிவமைக்கும் பணி பேராசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜெர்மனியில் பத்து நாட்கள்வரை தங்கியிருந்து இப்பாடநூல் செயற்றிட்டத்துக்குத் தலைமை தாங்கி அப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். அதற்குத்துணையாக சிக்கப்பூரில் இருந்து பேராசிரியர்கள் திண்ணப்பனையும், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் அகஸ்தியலிங்கம், இராமர் இளங்கோ போன்றவர்களையும் கூட்டிச் சென்றார்.
கல்வியியல் பாங்கான அம்சங்களைக் கவனிக்க என்னையும், சிறுவர் பாடல்களுக்காக கவிஞர் காரை சுந்தரம்பிள்ளையையும் அழைத்துச் சென்றார். உடல் நலக் குறைவோடும் காரியமே கண்ணாக இருந்து காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை கடுமையாக உழைத்து ஆரம்ப நிலைப் பிள்ளைகளுக்கான தமிழ்ப் பாடநூல்களைத் தயாரித்து சாதனை படைத்தார். எனக்குத் தெரிந்தவரை இத்தகைய அழகிய வண்ணங்களுடனும், வடிவமைப்புடனும் தமிழ்ப் பாடநூல்கள் வெளியிடப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். இது பேராசிரியரின் சாதனை மிகுந்த ஒரு தமிழ்ப்பணி என்பதில் ஐயமில்லை.
புதுடில்லியில் நடைபெற்ற ஒரு ஆசியர் கல்வியியல் மாநாட்டில் நான் கலந்து கொண்ட போது அதில் பிரதான உரையை ஆற்றும் வாய்ப்பு பேராசிரியருக்கே வழங்கப்பட்டது. அவ்வுரை தமிழியல் தொடர்பற்றது. தென்னாசிய நாடுகளின் குடியேற்ற காலக் கல்விமுறை, அதன்பாதக விளைவுகள், சமூக அசைவியக்கத்தில் மெக்காலே பிரபுவின் கல்விக்கொள்கை ஏற்படுத்திய தாக்கம், அக்கல்வி முறையை மாற்றுவதற்கு சுதந்திர அரசாங்கங்கள் மேற்கொண்ட பகீரத பிரயத்தனங்கள், அவற்றின் வெற்றியும் தோல்வியும் இவை பற்றிய ஆழ்ந்த, புலமைசார் சொற்பொழிவொன்றை ஆங்கில மொழியில் நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். உடல் நலக்குறைவிருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் தன்னந்தனியனாக இம்மாநாட்டுக்கு வந்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை பெருமையைத் தருகிறது.
அவ்வாறே பேராசிரியருக்கு பல சந்தர்ப்பங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக அழைக்கப்பட்டு கெளரவம் வழங்கப்பட்டது.
இதன் உச்சகட்டமாகத்தான் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, பேராசிரியருக்குக் கல்யாண சுந்தரம் உயர் விருதும் வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் தமிழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது இலங்கைப் பேராசிரியர் சிவத்தம்பி என்றே கூறிவிடலாம்.
பேராசிரியரின் மற்றொரு சிறப்பு, அவரின் நவீன இலக்கியத்தில் மட்டுமன்றி பழந்தமிழ் இலக்கியத்திலும் பாண்டித்தியம் மிக்கவராக இருந்தார். நவீன தமிழ் இலக்கிய விமர்சகராகவே அவரைச் சமூகம் அறியும். இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் தமது பணியில் சிறப்படைய பழந்தமிழ் இலக்கியப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி அறிஞர்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம் எனப் பன்மொழிகளை அறிந்தவர்களாகவும் வேற்று மொழி எழுத்துக்கள், இலக்கியங்கள் என்பவற்றில் பரீட்சயம் மிக்கவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.
அன்னாரின் பிற்றிய கல்விச் சிறப்புகள், தமிழாய்வுச் சிறப்புகள், விமர்சனச் சிறப்புகள் பற்றி யாவரும் அறிவர்; அறிந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய புலத்துக்கும் தமிழாய் வுத்துறைக்கும் விமர்சனத்துறைக்கும் விழுந்த ஒரு பேரிடி என்றே கொள்ளுதல் வேண்டும்.


------------------------------------------------------------------------------------------

ஊருணி நீர் போன்றவர்



நான் முதன் முதலில் பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்த ஞாபகம் இன்ன மும் என்னுள் பசுமையாக இருக்கின்றது.
1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத் தில், நான் தனது நண்பரோடு பாராளுமன்றத்தைப் பார்க்கப் போனேன். அங்கு சிவத்தம்பியைச் சந்தித்தேன். அவர் பாராளுமன்றத்தில் பணிபுரிந்த காலம் அது.
அப்போது ஏரிக்கரைப் பத்திரிகையில் பத்திரிகையாளராக இணைவதற்காக நான் விண்ணப்பித்திருந்தேன். சிவத்தம்பி நீ என்ன செய்த கொண்டிருக்கிறாய் என்று வினவ, அதைப்பற்றிச் சொன்னேன். நீ எழுதிய கட்டுரைகள், சிபார்சுக் கடிதங்கள் ஏதாவது கொண்டு வந்தாயா என்று கேட்டார். இல்லை என்று நான் தலையாட்டவே, "அட அறுவானே! மற்றவங்கள் எல்லாம் கட்டுரைகள், நற்சாட்சிப் பத்திரங்களோட வருவாங்களே நீயும் எடுத்துக் கொண்டு போ என்று ஆலோசனையாக அல்லாமல், ஒரு அன்புக்கட்டளையாகவே சொன்னார். நானும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சிபாரிசுக் கடிதத்தை எடுத்துக் கொண்டு போனேன்.
நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய 50 பேரில் என்னுடன் மூவர் மட்டுமே தெரிவானோம்.
அன்று பாராளுமன்றத்தில் ஆரம்பித்த எங்கள் நட்பு ஒரு கிராமிய மணம் கமழ்ந்ததாக சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து கொழும்பில் இலக்கியக் கூட்டங்களில் அவருடன் சந்தித்துப் பழகும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது. நான், சிவத்தம்பி கைலாசபதி மூவரும் நல்ல நண்பர்களானோம்.
நான் ஒப்சேவரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1964 ஆம் ஆண்டில் நேருவின் மரணத்தைத் தொடர்ந்து After Nehru Who
எனும் கட்டுரை எழுதும் பணி, எனக்குத் தரப்பட்டது. சிவத்தம்பியிடம் இருந்து நான் பெற்றுக்கொண்ட தகவல்கள், அந்தக் கட்டுரைத் தொடர் சிறப்பாக அமைந்தமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நிறைய வாசிக்க வேண்டும். தான் அறிந்தவை குறித்து மற்றவர்களுடன் விவாதிக்க வேண்டும், பேச வேண்டும் என்ற வெறியும் ஆர்வமும், சிவத்தம்பியிடம் எப்போதும் இருக்கும்.
சிவத்தம்பி வித்யோதய பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணிகளை ஆரம்பித்து , பின்னர் அங்கேயே துணைப் பேராசிரியராகவும் ஆனார்.
மஹரகம, தேசிய கல்வியியற் கல்லூரி யிலும், பாடங்கள், பாடசாலைச் சூழல் தொடர்பான பல திட்டங்களில் சிவத் தம்பியோடு இணைந்து பணியாற்றும் சந்தர்ப் பம் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை, தமிழியல், கலை, கலவியியில் போன்றதுறைகளில், சிவத்தம்பி நிறைய நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தான் திருப்பதியுறும் அளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார். ஆனால், தமிழ் பேசும் மக்களின், இடர்கள் நீங்கி அவர்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்ற அவரது அபிலாஷை விருப்பு என்பன நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படு முன்னமேயே அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது கவலையை அளிக்கிறது.

------------------------------------------------------------------------------------------

பயன்தரு பெரு மரம் சாய்ந்து விட்டது


பேராசிரியர் கா. சிவத்தம்பி தனித்துவமான தமிழ் பேராசிரியர். தமிழ் ஆய்வை பண்டித மரபினின்று மீட்டெடுத்து, நவீனமுறைகளில் அதை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் ஒருவர். இப்பார்வையை அவர் தமது தமிழ் ஆசான்களான பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் செல்வநாயகம் போன்றோரிட மிருந்து கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டவற்றை மாக்ஸிய நெறி நின்றும் அதன் பின்னர் எழுந்த நவீன கோட்பாடுகளின் வழி நின்றும் விளக்க முயன்றார்.
இவ்விளக்கத்துக்கு பல்துறை அறிவு தேவைப்பட்டது. மானுடவியல், சமூகவியல், உளவியல், சரித்திரவியல், மெய்யியல் என்ற பல்துறைகளையும் சங்கமிக்கச் செய்து அவர் தமிழாய்வை செய்தபோது புதிய பரிமாணங்களைக் காட்டியது. பண்பாட்டு ஆய்வாளராக அவரை அது வளர்த்துச் சென்றது.
இதனாலேயே இவருக்கு ஆய்வாளர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தைப் பெற முடிந்தது. தம் வழியில் அவர் பல ஆய்வாளர்களை உருவாக்கியுமுள்ளார். அவரது ஆய்வுத் தடம் அவரது மாணாக்கரால் வளப்படுத்தப்படுகின்றது.
தமிழ் நாடகத்தையே அவர் தமது கலாநிதிப் பட்டத்துக்கு எடுத்துக்கொண்டார். பண்டைத் தமிழகத்தின் நாடகம்(Drama in Ancient Tamil Society) என்பதுவே அவரது ஆய்வுத் தலைப்பு, கிரேக்க நாடகவியலுடன் பண்டைய தமிழ் நாடகங்களை ஒப்பிட்டு உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் தோம்ஸனின கீழ், பேர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த ஆய்வு, தமிழ் நாட்டில் அவருக்கு ஒரு பெருமையான இடத்தைத் தேடித் தந்தது. முதன் முதல் தமிழ் நாடகம் பற்றி வந்த விஞ்ஞான ரீதியான ஆய்வு இதுவேயாகும். இதுவரை 70 க்கும் மேற்பட்ட நூல்களையும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்த பேராசிரியர் உடல் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த விடயம் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வே எனலாம்.
தமிழ்ப் பண்பாட்டின் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிக்கொண்டு வந்ததில் பேராசிரியரின் இடம் முக்கியமானதொன்றாகும். யாழ்ப்பாணத்தில் மறைக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட கிராமியக்கலையும் மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மலையகம் முதலான பிரதேசங்களையும் தமிழ் பேசும் இஸ்லா மிய, கிறிஸ்தவர்களையும் இணைத்தே அவர் தமிழ்ப் பண்பாட்டைப் பார்த்தார். தமிழ் நாடகக் கல்வி வளர்ச்சிக்கு, அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
நாடகமும் அரங்கியலும் என்ற பாடநெறி, இலங்கையில் தமிழர் மத்தியில் உருவாக்கி கால்கோளிட்டவர் அவரேயாகும். இன்று அவர் காட்டிய திசையில் பல நூற்றுக்கணக்கான நாடக ஆசிரியர்கள் தோன்றிவிட்டனர். பழுத்த மரம்போல கிழைத்து சடை பரப்பி, அனைவரும் பயனடையும் வண்ணம் வாழ்ந்தார். அவரிடமிருந்து பலர் பல விடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.
வெறுமனே அறிவுலகுக்குள் புகுந்து தாளிட்டுக் கொள்ளாமல், மக்கள் மத்தியில் இருந்து மக்கள் பணியாற்றிய ஒரு பேராசிரியர் அவர். அதுவே அவரது பெரும் புகழுக்கு காரணம்.