Thursday, 7 July 2011

சிவதம்பி மறைவு: இ.கம்யூனிஸ்ட் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:

உலகின் சிறந்த தமிழ் அறிஞரும், மார்க்சீய அறிஞரும், சமூகப்போராளியுமான பேராசிரியர் சிவதம்பிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெல்வெட்டி துறைக்கு அருகில் அமைந்த கரவெட்டி என்னும் உரில் த.பி. கார்த்திகேசு, வள்ளிமை தம்பதியினருக்கு இவர் மகனாக பிறந்தார்.

தமிழகத்திலுள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், போன்றவற்றில் இவருடைய ஆய்வு பங்களிப்பு முக்கியமானதாகும். இங்கு வருகை பேராசியராகவும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். இங்கிலாந்து ஜெர்மனி முதலான நாடுகளின் புகழ் மிக்க பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகைப் பேராசியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

சிவதம்பியின் மரணம் உலக அளவில் தமிழுக்கான ஆய்வு அரங்கில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. புதிய தலைமுறையினர், அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்கான தங்கள் பணியை உடன் தொடங்குவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இலங்கை தமிழ் மக்களுக்கு பெரும் துயர் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் பேராசிரியரின் இழப்பு, நமக்கு மேலும் வேதனையைத் தருகிறது. பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பால் துயருற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment